விஜியின் கோலங்கள் பற்றி கவிஞர் தேவதேவன்

கோலங்களை விரும்பாதார் யார்? கோலம் என்றாலே அழகு அல்லவா? 

நுழைவாயில் கோலம் பற்றி நான் எழுதியுள்ள பல கவிதைகளும் இப்போது என் நினைவில் தோன்றியது. 

"காலை கதிரவன் தன் மலர்களை எல்லாம் மிஞ்சி விட்டது"

என ஒரு வீட்டு முற்றத்தில் ஒரு மானுட உருவம் வரைந்து கொண்டிருந்த கோலம் கண்டு திகைத்து நின்று விட்டது...

என்றது ஒரு கவிதை. 

ஒரு நாள் ஒரு குளிர் மிகுந்த வைகறையின் வீதியில் நடை சென்று கொண்டிருந்தபோது... அன்றலர்ந்த ஒரு வாசற் கோலம் கண்டு மின்னலாய் தோன்றி விட்ட ஒரு எண்ணக் கருவினை இயற்கையிலும் தாவரங்களிலும் நான் காணும் அதிசயங்களின் போதெல்லாம் அதை நான் பகிர்ந்து கொள்ள கிடைத்த எனது இனிய நண்பராகி விட்டிருந்த தாவரவியல் பேராசிரியை லோகமாதேவி அவர்களிடம், உடனே ஒரு புகைப்படம் எடுத்து அனுப்பிக்கொண்டு தொலைபேசியையும் ஒலிக்க விட்டேன். 

இந்த கோலங்களில் ஒரு சுழல் தன்மையுடன் இயங்கும் ஒரு முழுமை நோக்கிய ஓர் இயக்கம் உயிர்களின் வடிவத்தோற்றம் பற்றியது... என்பது தான் அது. 

உடனேயே லோகமாதேவி 'சரிதான் சரிதான்' என்று அதற்கு அடையாளமாக பல புகைப்படங்களை அனுப்பி வைத்தார்கள். வியப்பான எனது இந்த கண்டுபிடிப்பை அவரிடம் விளக்கவும் செய்தேன். இதற்கு மேலும் உறுதுணையாக இருந்தது ஒருநாள் நான் எனது பேரக் குழந்தைகளின் கையில் இருந்த spiral graph எனும் கருவி. அதைப்பற்றிய ஒரு கவிதையும் கூட அவருக்கு அனுப்பி வைத்தேன். 

ஒரு புள்ளியின் வேகமாக சுழலும் ஆற்றலினால் ஒரு வட்டம் உருவாகிறது. ஆனாலும் முடிவற்ற வட்டம் அல்ல. இப் பேரண்டமும் சுழலும் ஓர் ஆற்றலால் எல்லையற்றதானாலும் ஒரு வட்டமாக தான் இருக்கிறது. பேரண்டத்தின் குழந்தை போலவே இயற்கை எனும் ஒரு சிறு வட்டம் அதனுள் சுழல்கிறது. இயற்கையின் கோடான கோடி (?) புள்ளிகள் ஒவ்வொன்றும் பேரண்ட பெருவெளி வட்டத்தோடே மோதிச்  சுழல்வதினால் கோடானு கோடி வட்டங்களில் தாவரங்களும் உயிர்களும் தோன்றுகின்றன. 

அப்புறம் ஒவ்வொரு வடிவங்களின் தாவரங்களும் உயிர்களும் ஒரு வித்தாக (புதிய புதிய சுழலால் வித்துக்கள் புதிதாகவும், வித்துக்களோடு வித்துக்கள் உரசி புதிதாகவும் பிறந்திருக்கக் கூடும் என்பதை மிக எளிதில் யூகிக்கக் கூடியவை தான் ) எப்படி ஆயிற்று என்பதை அறிவியல் வாதிகள் தான் கண்டுபிடிக்க வேண்டும். 

அந்தக் கவிதையை இத்துடன் இணைக்கிறேன்....

கோலம்

முடிவற்ற எண்கள் 

முடிவற்ற வட்டத்தை 

முடிவற்ற விண்ணில் 

தூக்கிச் சுழற்றி தூக்கி சுழற்றி 

படைத்துக் கொண்ட 

உயிர்களையும் மரங்களையும் 

மலர்களையும் போலவே 


உதய சூரியனே

வாய் பிளந்து நிற்க 

வடிவ எழில் கொண்டவைதாமே 

நம் வாசல் முற்றக் கோலங்கள்!

*

விஷயம் இப்படி இருக்க ஒரு நாள் வெள்ளி மலை காடுகளில் நாங்கள் சிலர் உலவிக்கொண்டிருக்கையில் ...

தென்படும் மரம் செடி கொடி புல் பூண்டுகளிலெல்லாம் மூலிகைகளையும், அதன் அடையாளங்களையும், அதன் பயன்பாடுகளையும் சுட்டிக்காட்டிக் கொண்டிருந்த விஜயலட்சுமி அவர்களிடம் லோகமாதேவி அவர்களை தெரியுமா என்றேன். தெரிந்திருக்கிறது. 

இத்தோடு இந்த கதை முடியவில்லை....

ஒரு நாள் விஜயலட்சுமி அவர்களிடம் பேசிக் கொண்டிருக்கையில் இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என்று கேட்டபோது... இப்படி அலைபேசியில் பேசிக் கொண்டிருக்கும் போதும் அல்லது யாராவது என்னிடம் கதைத்துக் கொண்டிருக்கும் போதும் கூட அவர் தனது வலது கையால் ஒரு குழந்தை சேட்டை போல சும்மா கிறுக்கி கொண்டிருக்கும் ஒரு செயலைச் சொன்னார் உடனே அனுப்பி வைத்த அந்தப் படத்தை பார்த்ததும் தான் நான் அதிர்ந்து விட்டேன். 


கிறுக்கல்களில் நமது அமைதியற்ற மனநிலையோ, ஒரு தவிப்போ வெளிப்படுவதுண்டு. 

விஜி அவர்களின் கிறுக்களில் வெளிப்படும் கோலம் ஒரு நல்ல ஒத்திசைவுடன் இயங்கும்  மூளையினதும் மனதினதும் ஆகும் என்றேன். இனிமேல் இவற்றில் எதையும் வழக்கம்போல் தூர எறிந்து விடாதீர்கள் என்றேன். 

அன்று முதல் அது அப்படியே தொடர்கிறது. அதை சேகரித்து வைக்கப்படுகிறது என்பதனாலேயே அலட்சியமற்ற நேர்த்தியான மிகச்சிறிய தேவையான ஒரு சிரத்தையை சேர்த்துக் கொண்டார் விஜயலட்சுமி. 

கோலத்தின் முழுமையான முடிவை அவர் எப்போதுமே செய்து கொண்டுதான் இருந்தார் அரைகுறை என்பதே கிடையாது. 

இப்போது இந்த நூறு அல்லது ஆயிரம் அல்லது பல ஆயிரம் கோலங்களிலும் திரும்பத் திரும்ப வருதல் தான் இருக்கிறதா? 

இயந்திரத்தன்மை? 

இயந்திரத் தன்மையையும் மீறிய எத்தனை பெருக்கம்? 

இயற்கைக்கு வெகு நிகரான ஒன்றா? என்பதை அறிய எனக்கு ஆவலாய் இருந்தது. இவை பற்றி ஒரு நூல் தொகுப்பையும் வெளியிட திட்டமிட்டுள்ளோம்.


இப்படிக்கு, 

கவிஞர்

தேவதேவன்



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அணங்கின் மொழி

முது நாவல்

முது நாவல் எனக்கு பிடித்த சிறுகதைத் தொகுப்பு. புனைவு களியாட்டுக் கதைகள் நூறையும் தினம் ஒன்றாக வாசிக்கும் போது, எனக்கு பிடித்த கதைகளை பட்டியல...

தங்க விதைகள்