நெய்கார ஆச்சி - பழைய நினைவுகளில்

 நெய்கார ஆச்சி - பழைய நினைவுகளில்


எமமோவ் நெய் வாங்காலியோ, இந்த அழைப்பு தான் அந்த ஆச்சியின் குரல். வீட்டில் எங்க இருந்தாலும் ஓடி வந்துடுவேன் அவளை பார்ப்பதற்கு. எனக்கு முன்னாடி பயங்கர குஷி ஆகி அங்கேயும் இங்கேயும் வால ஆட்டிக்கிட்டு முன்னையும் பின்னையும் ஓடிக்கிட்டு திரியும் எங்க வீட்டு குட்டி பிசாசு ஜாக்கி. 

நல்ல பெரிய உருவம். குண்டு ஆச்சி என்று சொல்ல முடியாது. ஆனால் நல்ல பெரிய உருவம், எங்க ஊர்ல ஒரு சொல் உண்டு,, வளர்த்தியும் சதையும் ஒன்னும் போல் இருப்பா என்று ஒரு சிலரை பார்த்து சொல்வதுண்டு. 
அப்படி ஒன்னும் போல் உள்ள வடிவும் அந்த ஆச்சிக்கு.

நல்ல கருப்பு. அழகு கருப்பு அவள் தேகம். உரசி மை தீட்டி கொள்ளும் கருப்பு. கோயில் சிலைலாம் வழு வழு என்று எண்ணெய் தடவி வச்ச மாதிரி அவ உடம்பு முழுக்க வழு வழுன்னு தான் இருக்கும். சின்ன புள்ளைல நான் நினைச்சுப்பேன் உடம்புக்கு என்னை தடவிட்டு இவ வருவாளோன்னு. 

எங்க அம்மா நெய் தூக்கு ல வாங்குவா. எப்போதும் கேக்குற அளவு விட ஒரு சின்ன உலக்கு, எனக்கு தெரிஞ்சு அது 25 மில்லி உலக்கு அதிகமாக தான் தருவா அந்த ஆச்சி. 

அதுபோக அவளையே கண்ணிமைக்காமல் பார்த்து கொண்டு இருக்கும் எனக்கும் கையில் ஊத்தி சும்மா நக்கிக்கோ அப்படின்னு கொடுப்பா. 

கடைசியா இன்னொரு 25 மில்லி ஜாக்கி கிண்ணத்துக்கு. அதுக்கு தான் அவள் வந்ததும் துள்ளிக்கிட்டு கிடப்பான். ஆனால் கடைசில அவன் கிண்ணத்துக்கு ஊத்துர வரைக்கும் என்ன மாதிரியே அவள் கருப்பு தேகத்தை கண்கொட்டாமல் பாத்து சமத்தா உக்காந்திருப்பான். அவ நெய் ஊத்துனதும் லபக் லபக் என்று ஒரு சத்தத்தோடு உறிஞ்சி நாக்கை நல்ல சுழற்றிட்டு அவள் கால் கீழ படுத்துக்குவான். 

நான் என் கையில் இருக்கும் நெய்ய முழுசா நக்கிட்டு அவ கருப்பு தேகத்தையே பாத்துட்டு இருப்பேன். 

ரொம்ப பேச்சே கிடையாது அவளிடம். இழுத்து இழுத்து பேசுவா ஆச்சி. அவிய வீட்டில் இல்லையா அப்டின்னு கேப்பா. அந்த அவிய எங்க அப்பா. பெரும்பாலும் சனிக்கிழமை வருவதால் அப்பா எங்கன்னு கேப்பா.. ஒரு நாளும் அதிகமான, 75 மில்லிக்கு காசு கிடையாது. 

நான் படிப்புக்காக வெளி ஊருக்கு வந்த பிறகு கூட அவ தான் நெய் சப்ளை வீட்டுக்கு. நான் லீவுக்கு போகும் போது வந்தால் அப்பவும் எனக்கு நக்க குடுப்பா. ஜாக்கி அப்போது இல்லை. அவள் கை வேகமாக அதுக்காகவும் இன்னொரு உலக்கு நெய் எடுக்கும். 

அப்புறம் நான் இல்லாத நாள்களில் என்னை விசாரித்ததாக அம்மா சொல்லி இருக்கா. 

பல காலம் போய்விட்டது. நாங்கள் அந்த ஊரில் இல்லை. இப்பொழுது இருப்பாளோ இல்லையோ. கண்டிப்பா இருக்க மாட்டாள். 

ஆனால் அந்த இழுத்து இழுத்து பேசுற சத்தமும், அவளின் கருப்பு தேகமும், அந்த நெய்யின் சுவையும் என் காதுகளிலும் கண்ணிலும் வாயிலும் இருந்து கொண்டே இருக்கிறது.

அன்புடன்
ஈஸ்வரி 

5 கருத்துகள்:

  1. அழகான பதிவு. அழகான படங்கள் 👌🏼

    பதிலளிநீக்கு
  2. அரியனாச்சி என்று ஒரு பழம் விற்கும் பாட்டியின் ஞாபகம் வருகிறது எனக்கு. நெய் ஆச்சியின் நேர் எதிர் அவர்கள். நல்ல நிறம். மிகவும் ஒல்லி. வேகமாக பேசுவார். சேலையை கொசுவம் வைத்து கட்டி இருப்பார். செல்லும் போது என்னிடம் கண்டிப்பாக தனியாக எதாவது கூறி தான் செல்வார். அவர் கூடையை அவரின் சும்மாடு (தலையில் எடை தாங்கும் சுருட்டிய துணி ) மேல் வைப்பதில் எனக்கு ஒரு சந்தோஷம். இந்த நினைவுகளை கொண்டு வந்த நெய் கார ஆச்சிக்கு நன்றி.

    பதிலளிநீக்கு

அணங்கின் மொழி

முது நாவல்

முது நாவல் எனக்கு பிடித்த சிறுகதைத் தொகுப்பு. புனைவு களியாட்டுக் கதைகள் நூறையும் தினம் ஒன்றாக வாசிக்கும் போது, எனக்கு பிடித்த கதைகளை பட்டியல...

தங்க விதைகள்