இலக்கியத்தில் தனிமை

இலக்கியத்தில் தனிமை எனும் தலைப்பில் காவிய முகாமில் நிகழ்த்திய  உரை நண்பர்களின் வாசிப்பிற்காக. கீழ்கண்ட மூன்று புத்தகங்களை வாசிப்பிற்கு எடுத்துக்கொண்டேன்.

குட்டி இளவரசன்(The little prince)- அந்துவான் தி செயின்ட் எச்சுபெர்ரி அவர்களால் பிரெஞ்சு மொழியில் எழுதப்பட்டது.

உருமாற்றம் (Metamorphosis) - பிரான்ஸ் காஃப்கா அவர்களால் ஜெர்மன் மொழியில் எழுதப்பட்டது.

 தி சாய்ஸ் (The choice) - எடித் ஈவா இகர் அவர்களால் ஆங்கில மொழியில் எழுதப்பட்டது.

குட்டி இளவரசன்:

இந்நாவலை வாசித்த உடன், ஒரு விதமான மெல்லிய பதைப்புடன் கூடிய மன அமைதி ஏற்பட்டது. நிகழ்ந்தது தனிமையான, குழந்தைமை கொண்ட குட்டி இளவரசனின் மரணம் அல்லவா? ஆனால், அவனைப் பொறுத்தவரை அவன் சென்றிருப்பது வேறு கிரகத்திற்கு.

கதையில் முதலில் தனிமையான அந்த விமானி இளமையிலிருந்தே யானையை விழுங்கிய மலைப்பாம்பின் படத்தை, பார்ப்பதற்கு தொப்பி போல இருக்கும் அந்த ஓவியத்தை, தான் சந்திப்பவர்களிடம் காட்டி, "இதில் என்ன தெரிகிறது?" என்று கேட்கிறார். அவர்களுக்கு அது தொப்பி போலவே தோன்றுகிறது.

முதல் சந்திப்பிலேயே, குட்டி இளவரசன் தன் கிரகத்திற்காக ஒரு ஆட்டை வரைந்து தருமாறு கேட்கிறான். பின்னர் தனது சின்னஞ்சிறு கிரகத்தை விவரிக்கிறான். 

அது மிகவும் சிறியதாக இருப்பதால், அவனால் நாற்காலியை நகர்த்திக்கொண்டே பல சூரிய அஸ்தமனங்களைப் பார்க்க முடியும்.

சோகமாக இருந்ததால், ஒரு நாளில் நாற்பத்தினான்கு முறை அஸ்தமனங்களைப் பார்த்ததாகச் சொல்கிறான், விமானியிடம். “கவலை அதிகமாக இருந்தால் சூரியன் மறைவதைப் பார்ப்பதற்கு பிடிக்கும்”, என்று கூறுகிறான். நீ அவ்வளவு சோகமாக இருந்தாயா, என்ற கேள்விக்கு அவனிடம் பதிலில்லை.

அவனுடைய கிரகத்தில் உள்ள பவோபாப் மரங்கள், எரிமலை, ரோஜாச் செடி ஆகியவை உள்ளன. மனித மனதின் வெவ்வேறு நிலைகளின் குறியீடுகளாக இவற்றை எடுத்துக் கொள்ளலாம். 

பவோபாப் மரங்கள் – சோகம்.

எரிமலைகள் – கோபம்.

ரோஜாச் செடி – காதல்.

இவற்றை இந்தியத் தத்துவத்தின் சத்வ, ரஜோ, தமோ என்ற மூன்று குணங்களோடும் ஒப்பிட்டுப் பார்க்கலாம்.

ஒவ்வொன்றையும் அவன் பார்த்துக் கொள்கிறான். எரிமலையின் கரியை, தினமும் சுத்தம் செய்கிறான். பவோபாப் மரங்களை வேரிலிருந்து நீக்குகிறான். ஆட்டை அவன் பெறுவதே அதற்காகத்தான். ரோஜாச்செடியை பாதுகாக்கிறான், அதற்கு தினமும் தண்ணீர் விடுகிறான். ரோஜாவின் தனிமையையும் உணர்கிறான். அவள் தன்னை பிரியும்போது கண்ணீர் சிந்தாதது, கர்வத்தினால் தன் தனிமையை அவள் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை என்று தெளிகிறான்.

குட்டி இளவரசன் தனது பயணத்தில் முதலில் அரசரின் கிரகத்திற்குச் செல்கிறான். அந்தச் சிறிய கிரகம் முழுவதும் அரசரின் நீண்ட அங்கியால் மூடப்பட்டிருப்பதால், குட்டி இளவரசன் நிற்பதற்குக்கூட இடம் இல்லை.அரசர் எப்போதும் அதிகாரத் தோரணையுடன் பேசுகிறார். அவர், "உனக்கு நீயே நீதி வழங்கிக் கொள். மற்றவர்களுக்கு நீதி வழங்குவதைவிட, நமக்கு நாமே நீதி வழங்குவதுதான் மிகவும் கடினம்” என்று கூறுகிறார்.அரசரின் அதிகார தோரணையால் நீண்ட நேரம் நிற்க முடியாமல் குட்டி இளவரசன் திரும்புகிறான். 

தான் சந்திக்கும் ஒவ்வொருவரும் அவரின் குணத்தாலேயே தனிமையில் இருக்கிறார்கள். தற்பெருமைகாரன் தன் தற்பெருமையால், குடிகாரன் தன் வெட்கத்தை மறைக்க குடிப்பதால் (குடிப்பதால் தான் வெட்கப்படுவதாகவும் கூறுகிறார்), வியாபாரி தான் பணம் சம்பாதிப்பதை பற்றியே அனுதினமும் சிந்தனை செய்வதால், உழைப்பாளி தூக்கத்திற்கு கூட நேரம் ஒதுக்காமல் எப்பொழுதும் விளக்கேற்றும் வேலையை செய்துகொண்டே இருப்பதால், ஒவ்வொருவரும் தங்களது உலகத்திலேயே வாழ்கிறார்கள், தனியாக வாழ்கிறோம் என்ற பிரக்ஞை இல்லாமலேயே. அப்படிப்பட்ட மனிதர்களை கண்டு வெளியேறும் இளவரசன், உழைப்பாளியின் நட்பை விரும்புகிறான். ஆனால் அவனுக்கு தூங்கக்கூட நேரம் இல்லாத உழைப்பு.

இப்படி தனிமை துயருடன் பூமி வரும் இளவரசன் யாருமற்ற பாலைவனத்தில், பாம்பால் வரவேற்கப்படுகிறான். பாம்பு - ' மனிதர்கள் தங்கள் இருப்பிடங்களிலும் தனிமையில் தான் இருக்கிறார்கள்’ என்று கூறுகிறது. மனிதர்களை தேடி நடந்து செல்லும் அவன் , உயர்ந்த மலை மீது ஏறுகிறான்,அனைத்தையும் பார்த்துவிடலாம் என்றெண்ணி. அங்கு சென்று ‘நான் தனியாக இருக்கிறேன்’ என்று கூக்குரலிடுகிறான். பதிலுக்கு நான் தனியாக இருக்கிறேன்’, நான் தனியாக இருக்கிறேன்’ என்ற எதிரொலிகளையே கேட்கிறான்.

அப்போது அவன் நினைக்கிறான், ‘மனிதர்களுக்கு கற்பனைவளம் குறைவு. தங்களிடம் சொல்லப்பட்டதையே திரும்ப திரும்ப சொல்கிறார்கள். என்னிடம் ஒரு மலர் இருந்தாள். அவள் எப்போதும் பேச்சில் முந்திக்கொள்வாள்‘ மலையேறி அவன் உச்சத்தை அடைந்தும் தனிமையின் கூக்குரல்களையே தனக்கான பதிலாக உணர்கிறான். கூட்டத்தில் இருந்தும், உச்சத்தில் இருந்தும் தன்னிடம் அன்பு பாவித்த மலரின் நினைவு எழுகிறது. 

பிறகு அவன் பார்க்கும் பல ஆயிர ரோஜாக்கள், தன் ரோஜாவை நினைவுபடுத்துகிறது. பின்னர் அவன் நரியை சந்திக்கிறான். அந்த நரி அவன் சந்தித்த பெரும்பாலோரைவிட வேறுபடுகிறது. பழக்கப்படுத்திக்கொள்வதை பற்றி கூறுகிறது. அவனுடைய ரோஜா எப்படி மற்ற ஆயிரம் ரோஜாக்களில் இருந்து வேறுபடுகிறது என்பதை பற்றியும் கூறுகிறது. நரி தன்னிடம் பழகுமாறு கூற, குட்டி இளவரசன் தான் நிறைய பேரை சந்திக்க விரும்புவதாக கூறுகிறான். நரி கூறுகிறது:- ஒருவரை பழக்கப்படுத்தி கொள்வதே புரிந்துகொள்வதற்கான வழி. அதற்கு நீங்கள் பொறுமையாக இருக்க வேண்டும், புல் தரையில் அமர வேண்டும், ஓரக்கண்ணால் பார்க்க வேண்டும், எதுவும் பேச கூடாது. மொழியானது தவறாக புரிந்து கொள்வதற்கான ஒரு கருவி. நாளுக்கு நாள் சிறிது, சிறிதாக நெருங்கி வரலாம். தினமும் ஓரே நேரத்தில் சந்திக்க வேண்டும், ஒரு மணி நேரம் முன்னதாகவே எதிர்பார்க்க ஆரம்பித்து விடுவேன்.

குட்டி இளவரசன் அடுத்து, வேக ரயிலை இயக்கும் பாயிண்ட்ஸ்மேன் இருக்குமிடம் செல்கிறான். அவர் சொல்கிறார், ‘ இவர்கள் அனைவரும் உள்ளே துயின்று கொண்டிருப்பார்கள், எதை நோக்கி ஓடுகிறார்கள் என்பதே அவர்களுக்கு தெரியாது’. அதற்கு அவன் ‘ குழந்தைகளுக்கு மட்டுமே தெரியும், எதை தேடுகிறோம் என்று. ஒரு கந்தைதுணி பொம்மைக்காக நேரத்தை வீணடிப்பார்கள். அது அவர்களுக்கு முக்கியமானதாக தெரிகிறது.பிடுங்கி கொண்டால் அழுவார்கள்’. அதற்கு பாயிண்ட்ஸ்மேன் ‘ அவர்கள் அதிர்ஷ்டக்காரர்கள்’ என்று கூறுகிறான். 

விமானி, குட்டி இளவரசனை ஏந்திய வண்ணம் பாலைவன கிணற்றுநீரை தருகிறார். சிறிதளவு நீரின் இனிமையை, பண்டிகை இனிப்பை போல, கிறிஸ்துமஸ் பரிசுபோல அவன் உணர்கிறான். மனிதர்கள் ஐயாயிரம் ரோஜாக்களை வளர்க்கிறார்கள். ஆனால் ஒரு ரோஜாவிடம், சிறிது தண்ணீரிடம் நான் கொள்ளும் நிறைவை அவர்கள் கொள்ளவில்லை. அதற்கு கண்களால் அல்ல, இதயத்தால் பார்க்க வேண்டும் என்று கூறுகிறான். 

கடைசியாக தான் செல்லப்போவதாக கூறும் குட்டி இளவரசன்,’ நாம் கண்களால் காணாதவையே முக்கியமானது, நம் ரோஜா விண்மீனில் வாழும் என்றால் அனைத்து நட்சத்திரங்களையும் ரசிப்போம் அல்லவா? அதே போல் நான் எந்த நட்சத்திரத்திடம் செல்வேன் என்று தெரியாததால் நீங்கள் அனைத்து நட்சத்திரத்தையும் ரசிப்பீர்கள் அல்லவா.’ கதை நெடுகிலும் குட்டி இளவரசனை சுற்றி ஒரு ஒளி இருந்துகொண்டே இருக்கிறது. அது அவனுடைய குழந்தைமை தானென்று நினைக்கிறேன்.

உருமாற்றம்:

காஃப்காவை பற்றி வாசித்து, ஒருவகை அச்சத்துடன்தான் மெட்டமார்போசிஸ் வாசித்தேன். புத்தகக் கடையில் எடுக்கலாமா வேண்டாமா என்று நிறைய நேரம் யோசித்துவிட்டு, த ஹங்கர் ஆர்டிஸ்ட் என்ற கதை இடம் பெற்ற சிறுகதை தொகுப்பை பெற்று வாசித்தேன். 

இரண்டு, மூன்று வருடங்களுக்குப் பின்தான் மெட்டமார்போசிஸ் நான் படிக்க விழைந்தது என்று தோழி மூலம் பரிசாக கிடைத்தது. கிடைத்ததும் இன்னும் சில மாதங்கள் கழித்துதான் மெதுவாக எடுத்து வாசித்தேன். அவர் எழுப்பிய உலகத்திற்குள் செல்ல நிறை யோசனையும் கூட. 

அவரின் சுயகழிவிரக்கத்தை தொட்டுவிட்டு, சிறிதளவு கருணை கூட உள்ளே அனுமதிக்காத நிலையில் வெளிவர வேண்டும். தி ஹங்கர் ஆர்டிஸ்ட் கொடுத்த அனுபவமும் அத்தகையதே. கண்ணுக்குத் தெரியாத தடிமனான கண்ணாடியைக் கொண்டு எழுப்பிய அறையினுள் இருக்கும் இதயத்தைக் கண்டு, எதுவும் செய்ய முடியாத நிலையில், நாம் திரும்பி வரவேண்டும்.

ஒரு நாள், கிரிகோர் சாம்சா தன் வீட்டில் கண் விழித்ததும், தான் ஒரு பூச்சியாக மாறிவிட்டிருப்பதாக உணருகிறான். எழுவதிலிருந்து, அனைத்துமே சிரமமாக ஆகிறது. அந்த நேரத்தில், வேலைக்கு இன்னும் செல்லாததால், அவனைத் தேடி வரும் தலைமை அதிகாரி, தந்தை, தாய், மட்டுமே வீட்டில் வேறு அறையில் உள்ளனர்.

இவன் கதவைத் திறக்கிறான். தலைமை அதிகாரி எதற்கும் காத்திராமல் உடனடியாக வெளியே செல்கிறார். இவனின் தோற்றத்தைக் கண்டு, துக்கம் கொள்ளும் தாய், தன் முகத்தை மறைத்தவண்ணம் அழ ஆரம்பிக்கிறாள். தந்தை அழுதாலும், உடனே எழுந்து, 'உஷ் உஷ்' என்று கூறி, அவனை உள்ளே விரட்டுகிறார். கொஞ்சம் இடைவெளி போதும், நான் திரும்பி நடந்துவிடுவேன்.

ஆனால், விடாமல் துரத்தும் தந்தையால், திரும்பக் கூட, பயந்து, மெதுவாகவே நகர்வதாக குறிப்பிடுகிறான். தந்கை அந்த நேரம் வீட்டில் இருந்திருந்தால், அவள் மேலதிகாரியிடம் பேசி, சூழ்நிலையை சரி செய்திருப்பாள், என்று நினைக்கிறான்.

பின்னர் தங்கை மட்டுமே அவனுக்கு உணவளிப்பவளாகவும், கவனிப்பவளாகவும் இருக்கிறாள். உணவும், பூச்சிகள் உண்ணும் மிச்ச எச்சில் உணவாக மாறுகிறது. தங்கை வரும்போதும் அவன் ஒளிந்து கொள்கிறான். அன்னையிடமும் அவ்வாறே. அவன் தங்கைக்கு பதில், அன்னை தன்னை அரவணைக்க மாட்டாளா, என ஏங்குகிறான். மெல்ல மெல்ல, தங்கையின் அரவணைப்பும், அவள் உள்ளே வருவதையுமே வெறுக்கிறாள். யாருமே அவனைக் காண வருவதில்லை. தனிமை மட்டுமே அவன் இருப்பு. 

ஒருநாள், வீட்டில் தங்கியுள்ள மூன்று வேலைக்கு செல்பவர்கள் அவர்களின் வீட்டில் இரவுணவுக்குப் உண்கின்றனர், பின் தங்கையின் வயலின் வாசிப்பு துவங்குகிறது. யாருமே அவள் இசையை பொருட்படுத்தவில்லை. பூச்சியாக மாறிய நம் கலைஞனை தவிர. பாராட்ட வந்தவனைக் கண்டு, அனைவரும் அதிர்ச்சியுற, தந்தையால் தாக்கப்படுகிறான். அங்கேயே உயிர் விடுகிறான். எங்குமே, யாருமே அவனை ஏற்றுக் கொண்டதாக சித்தரிப்பில்லை. தங்கையின் அன்பையும், தாயின் அன்பையும் எதிர்பார்ப்பவனாகவே இருக்கிறான்.

காஃப்காவின் வாழ்க்கையில் முழுநேர பணி செய்ய வேண்டிய நிர்பந்தம் தந்தையால் விதிக்கப்படுகிறது. பணிக்கு மதியம் செல்ல வேண்டியதில்லை என்றபோதிலும், தந்தையின் கண்டிப்பால் முழுநேரமும் செல்ல வேண்டிய நிர்பந்தம். அந்த நேரத்தை எழுத்துக்கு செலவழிக்க முடியும் என்பதையும் தந்தையின் கண்டிப்பு கலைத்துவிடுகிறது. தன்னை தீய பழக்கங்களில் அழித்துக் கொள்ளாத எழுத நினைத்த மகனை தந்தை புரிந்திருக்கலாம். ஆனால், அது அவனுக்கு கிடைக்கவே இல்லை. கதையில் வருவதுபோல், தன் இறப்பிற்குப் பிறகும், மூவரும் மிகவும் எளிமையாகக் கடந்துச்செல்வர், எனும் எண்ணம் எவ்வளவு வலி மிகுந்தது. ஒவ்வொரு இடத்திலும் தான் துச்சமாக நடத்தப்படுகிறோம் என்பதைவிட, தான் துச்சமானவனே, என்று ஏற்று, அதை தன்னிடம் உள்ள எழுத்து எனும் கலையைக் கொண்டு, வெளிப்படுத்தியதாலேயே, வாசிப்பவரின் ஆழத்தைப் தொட்டுவிடுகிறது. அப்போது அந்த கலையின் மதிப்பு என்ன? நூற்றிப்பத்து ஆண்டுகள் கடந்தும், இன்னும் எங்கோ எவராலோ வாசிக்கப்படுகிறது, காஃப்கா தன் நண்பரிடம் தன் எழுத்துக்களை எரித்துவிடக் கூறியும் கூட. 

கா.நா.சு அவர்களின் காஃப்காவும் ஒரு தமிழ் எழுத்தாளரும், எனும் கட்டுரையை வாசிக்க நேர்ந்தது. இது கசடதபற இதழில், 1972ல் வெளியானது. இந்த புத்தகத்தை புதுமைப்பித்தனவர்கள் கா.நா.சுவிற்கு படிக்கக் கொடுத்து, அவர் ஒரே நாளில் படித்து திரும்ப கொடுக்கிறார். இருவருமே காஃப்காவின் நிலையை தங்களுடன் இணைத்து பார்க்கின்றனர். புதுமைபித்தனின் தந்தை, அவர் எழுதுவதே விரும்பவில்லை. கா.நா.சுவின் தந்தைக்கு, அவர் ஆங்கிலத்தில் எழுதுவதில் தவறில்லை, ஆனால் தமிழில் எழுதுவது பிடிக்கவில்லை. காஃப்கா ஒரு கனவுலகத்தில் வாழ்ந்து, அந்தக் கனவுலகத்தை சாதாரண உலகத்தை விட, அதிக உண்மையானதாகக் கண்டு உருவாக்கினார், என்று கா.நா.சு கூறுகிறார். பாயிண்ட்லெஸ்னஸ் மற்றும் செல்ஃப்லெஸ்னஸ் இரண்டையும் காஃப்கா அளவிற்கு ஐரோப்பிய இலக்கியத்தில் பேசியவர்கள் எவரும் இல்லை என்று கா.நா.சு கூறுகிறார். ஒரு முறை கா.நா.சுவிடமிருந்து மௌனி பெற்று படித்துவிட்டு தரும்போது, இந்த நூல்கள் நீங்களும் மற்றவர்களும் எதற்காக படிக்கிறீர்களென்று தெரியவில்லை ஆனால் இந்த காஃப்கா எனக்காகவே எழுதியிருக்கிறான் என்றாராம். கா. நா.சு முடிக்கும்போது, ‘சாரி, தலைப்பை காஃப்காவும் மூன்று எழுத்தாளர்களும் என்று மாற்றி வைத்துக் கொள்ளுங்கள்’, என்று கூறுகிறார்.

தி சாய்ஸ்:

எடித் ஈவா இகர் ஹோலோகாஸ்டில் உயிர் பிழைத்தவர். மூன்று பெண்களில் மூன்றாவதாக பிறந்தவர். ஹங்கேரியை பூர்விகமாக கொண்டவர். யூத மதத்தை சேர்ந்தவர். ஸ்லோவாகியா நாட்டின் கொசெஸ் நகரில் வாழும்போது தன் பதினாறாவது வயதில் குடும்பத்துடன் ஆஷ்விட்ச் வதைமுகாமிற்கு கொண்டு செல்லப்படுகிறார். இரண்டாவது பெண் கிளாரா வயலின் இசைப்பதில் சிறு வயதிலேயே திறமையானவள் என்பதால் அவள் புடாபெஸ்டில் மேலும் பயில சென்றதால் தப்பிக்கிறார். ஈவா அவர்களும் ஒலிம்பிக்கில் ஜிம்னாஸ்ட் ஆக செல்லும் கனவுடன் இருந்தவர். தாய், தந்தையை சென்ற அன்றே இழக்கிறார். தன் அக்கா மேக்டா மட்டுமே இவருடன் இருக்கிறார். நடுவில் அன்னையும் இருபுறமும் மகள்கள் என்ற வரிசையில் செல்ல ‘ இறப்பின் தேவன்’ என்று பெயர் பெற்ற டாக்டர் மெங்கலே அன்னையை பிரித்து விஷவாயு குளியலறைக்கு போக சொல்லி அதன் மூலமாக அவர் கொல்லப்படுகிறார்.

ஈவா அப்பொழுதிலிருந்தே தன் மனதில் மன்னிக்க இயலா ஒரு ரகசியத்தை வைத்திருக்கிறார். தன் 55 வயதிற்கு மேல் தான் அதிலிருந்து தன்னை மன்னித்து வெளியேறுகிறார்.

ஈவா தன் தாய், தந்தையர் இறந்த அன்றே டாக்டர் மெங்கலே முன் ஆட அழைக்கப்படுகிறார். தான் பயிற்சி செய்த ப்ளூ டனுபே வால்ட்ஸ் ஒலிக்க கண்களை மூடி, புடாபெஸ்ட் அரங்கில் ஆடுவதாக, மக்கள் ஆரவாரிப்பதாக கற்பனை செய்து கொள்கிறார். அன்று ரொட்டி துண்டுகளை பரிசாக பெற்று தோழிகளுடன் பகிர்ந்து கொள்கிறார்.

நெடுக நிறைய சிரமங்கள், உடல் மெலிந்து, நோய்வாய்ப்பட்டு, முதுகு எலும்பு உடைப்பட்டு, பின்னர் பிணங்களுக்கு இடையில் காப்பாற்றப்படுகிறார், அமெரிக்க ராணுவ வீரர் மூலமாக. தன் அக்காவுடன் சேர்த்து தன் ஊரிலிருந்து சென்ற ஆயிரக்கணக்கானவர்களில் வெறும் 77 பேர் மட்டும் ஊர் திரும்புகின்றனர். தன் எதிர்கால நம்பிக்கையாக இருந்த தன் தோழன் எரிக் இறந்து விட்டான் என்று உறுதியாக தெரியவருகிறது, உடைந்துவிடுகிறார். “I will never forget ur eyes. I will never forget your hands” என்று அவன் கூறியதை வதை முகாமில் மனதின் நம்பிக்கையூட்டும் வரிகளாக இருந்துள்ளது. அவர் அன்னை கூறிய “Just remember, no one can take away what you have put in your mind” என்ற வரிகளும் அவருடன் என்றும் பயணிக்கிறது.

19 வயதில் Bela என்பவரை திருமணம் செய்து கொள்கிறார். அவர் ஒரு நிலச்சுவாந்தார். வசதியான வாழ்க்கையை நீண்ட நாள் வாழ கொடுத்து வைக்காமல், அமெரிக்காவிற்கு அகதிகளாக தன் கணவர், முதல் குழந்தையுடன் செல்கிறார்.

எடித் அவர்களை சுற்றி மனிதர்கள், உறவுகள் இருந்தவண்ணமே உள்ளனர். ஹோலோகாஸ்ட் நாட்களிலும் அதன் பின்னரும். ஆனால் அவர் மனதில் உள்ள தனிமை தான் என்ன? எப்படி வெளியேறினார்? அவர் சொல்லும் ஒரு விஷயம் victimhood / victimize.

Victimize - இப்போது இந்த நேரத்தில் தனக்கு இழைக்கப்படும் அநீதியால் தன்னை பாதிக்கப்பட்டவராக உணர்வது.

Victimhood - தனக்கு முன்னர் இழைக்கப்பட்ட அநீதியை இன்னும் மனதில் சுமந்து கொண்டே இருப்பது. பாதிக்கப்பட்டவர் மனநிலையில் இருப்பது. தனக்கான விடுதலை சாத்தியம் என்றாலும்.

தனக்கு நேர்ந்ததை யாரிடமும் அவர் பகிர்ந்து கொள்ளவில்லை. ஆரம்பகாலப்பட்டங்களில், தன் கணவர், அக்கா, ஆஷ்விட்சில் கூட இருந்தவர்களை தவிர, தன் குழந்தைகளிடமும் வதை முகாம் பற்றியோ, தனக்கு பாலே நடனம் தெரியும் என்பதையும் கூட சொல்லாமலே இருக்கிறார். சைரன் சத்தங்கள் அவரை நிலைகுலையச் செய்கிறது. தன் பெண் மரியேன் ஒருமுறை ஆஷ்விட்ச் பற்றி கேட்க, அவர் தன்னை ஒளித்துக் கொள்கிறார். மனோவியல் படித்து தன்னிடம் வருபவர்களுக்கு உதவி செய்தும் imposter syndrome (நான் தகுதியானவள் அல்ல என்று தன் வெற்றிக்கு பின்னரும் நினைப்பது) அவருக்கு உள்ளது.

இந்நிலையிலே ஒரு வகுப்பில் தன் சக மாணவனிடமிருந்து விக்டர் பிராங்கில் அவர்களின் Man's Search for Meaning in Life என்னும் புத்தகம் கிடைக்கிறது. நிறைய தயக்கத்திற்கு பின், “நான் அந்த வெடிகுண்டை கையில் எடுத்தேன்” என்று கூறுகிறார். விக்டர் பிராங்கிளிடமிருந்து சாய்ஸ் (தெரிவு/தேர்ந்தெடுத்தல்) என்பதை அறிகிறார்.

நம் வலிகள் ஆறுவதற்கான வழி என்றும் நேர்கோட்டில் இருப்பதில்லை என்பதை உணர்கிறார். ஆனாலும் தவறான முடிவாக பின்னர் அவர் கூறும்படி தன் கணவரை விட்டுப் பிரிகிறார். பின் இரண்டாம் முறையாக அவரையே திருமணமும் செய்து கொள்கிறார். தன் சுதந்திரத்திற்கு தடை தன் கணவனல்ல, தன் சுதந்திரத்தை நோக்கிச் செல்லாததே என்று தெளிகிறார். தன் மனோதத்துவ பயிற்சியில் எல்லோருக்கும் உதவுவதின் மூலம் தான் நிற்கும் இடத்தை அறிகிறார். 42 வயதில் மனோவியலில் இளங்கலை முடித்து, 51 வயதில் முனைவர்  பட்டம் பெறுகிறார்.

ஒருமுறை விக்டர் பிராங்கில் அவர்களை நேரில் சந்திக்கும் வாய்ப்பு அமைகிறது. இந்த இடம் ரொம்ப முக்கியம் என்று நினைக்கிறேன். தன்னை போலவோ/தன்னை விடவோ கடினமான பாதையை தாண்டி வந்தவர்கள் அல்லது தாண்டுபவர்களின் துணை எவ்வளவு தேவைபடுகிறது மனிதனுக்கு. சின்ன கோட்டுக்கு பக்கத்தில் கொஞ்சம் பெரிய கோடு போடுவதை போல. அந்த பெரிய கோட்டை தாண்டுபவனை பார்ப்பதில் சக மனிதனுக்கு தன்னம்பிக்கை வருகிறது.

கடைசியாக அவர்களுக்கு அழைப்பு வருகிறது. ஜெர்மனியில் ராணுவ வீரர்கள் முன்னிலையில் உரையாற்ற. 60 வயதிற்கு பிறகு போகணுமா, நல்லா திரும்ப முடியுமா என்று நிறைய கேள்விகள். கணவர், நீ ஹிட்லரையும் மெங்கலேவையும் வெல்ல வேண்டாமா என்று கேட்கவும் செல்கிறார்கள். அங்கு அவர் இன்னமும் முடிக்காத, விடுதலை அடையாத விஷயங்கள் இருக்கின்றன. 1945ல் வரிசையில் போகும்போது தன்னோட அம்மாவை பார்த்து, மெங்கலே தன்னிடம் ‘இது உங்க அம்மாவா அக்காவானு கேட்டதும்’, எடித் யோசிக்காமல் அம்மா என்று சொல்லவும், விஷ வாயு அறைக்கான வரிசையில் அம்மா செல்ல நிர்பந்திக்கபடுகிறார். இவர் சூழலை புரிந்து கொண்டு அம்மா என்று கத்தியும் ஒன்றும் மாறவில்லை.

தன்னால தான், தான் மாற்றி சொல்லி இருக்கலாம் என்று நிறைய முறை யோசிக்கிறார். இது எடித் மனதில் கிட்டத்தட்ட 40 வருடமாக அப்படியே இருக்கிறது பகிரப்படாமலேயே, தன்னை மன்னிக்காமலேயே. ஒரு வழியாக தன்னோட மன்னிப்பை கேட்டு என்றைக்குமான தன் அன்பை  அப்பா, அம்மாவிற்கு சமர்ப்பிக்கிறார்.

தனக்காக தன் விடுதலைக்காக ஹிட்லரையும் மெங்கலேவையும் மன்னித்து முன்னகர்கிறார்.

பின்னர் அவரிடம் முழுமையாக வெளியேறி விட்டீர்களா என்று கேட்கப்பட்ட போது, “நான் இப்போது கைதி அல்ல. நான் என் விடுதலையை தேர்ந்தெடுத்து விட்டேன். என் உணர்வுகளை பெயரிடுகிறேன், கோபம், சோகம், பயனற்றதனம், விசனம் (regret) என. நான் அதை என்னை சூழவும், உயர்ந்து வீழ்த்தவும், என்னை கடக்கவும் அனுமதிக்கிறேன். இவைகள் என்னை நான் வாழ்ந்ததற்காக தண்டிக்கும் என்ற எண்ணத்தை கைவிடுகிறேன். என் குற்ற உணர்வை விட்டுவிட்டு என் தூய்மையான முழுநிலையை பெறுகிறேன். காயம் இருக்கிறது தான். ஆஷ்விட்ஸ் சென்றது இறப்பின் உணர்வை அனுபவிப்பேன், முழுமையாக உணர்ந்து அந்த தீய எண்ணங்களை கைவிடுவேன் என்று நினைத்து தான். ஆனால் என் உள்ளுறையும் உண்மை, என் சக்தி, என் குழந்தைமையை கண்டுகொண்டே திரும்பினேன்.”

தனிமை:

மூன்றிலும் பொதுவான அம்சமாக நான் காண்பது தனிமைதான். தனிமைக்கான காரணம் எதுவாயினும், அது ஆளுள்ளத்தின் வெளிப்பாடு. மற்ற கலைகளைவிட எழுத்திலும், ஓவியத்திலும், தனிமையின் வெளிப்பாடுகள் நேரடியானவையாக இருக்கிறது. மனிதன் தன் தனிமையை வெளிப்படுத்துவதற்கான காரணம் என்ன? பரிதாபத்திற்காக அல்ல. வெளிப்படுத்தும் நேரம், தன் தனிமையை அவன் உணர்வதில்லை. உலகத்தின் முன் தனக்குத் தெரிந்த வழியில் படைத்து விடுகிறான். அதன் பின் அவன் எதிர்பார்ப்பு, அன்பும் கருணையும்தான்.

குட்டி இளவரசனில் நரி சொல்வதும் அதைத்தான், மெட்டாமார்போர்ஃபஸில் தங்கையிடம் தன் எதிர்ப்பார்பாக, கிரிகோர் உணர்வதும் அதைத்தான். சாய்ஸில் எடித் வழிநெடுக எதிர்பார்த்து செல்வதும், விக்டர் ஃப்ராங்கிளின் சந்திப்பிற்குபின், அனைவருக்கும் கொடுத்து செல்வதும் அதைத்தான்.

தனிமையை புரிந்துகொள்வது அவ்வளவு எளியதா? படித்ததும் நாம் உணரும் ஒற்றுணர்வு(empathy), எப்போது கருணையாக(compassion) மாறுகிறது? தன்னையும், தன் சூழலையும், கடந்து வந்த பாதையையும், அந்த எழுத்து எவ்வளவு தூரம், கருணையுடன், அல்லது குறைந்தபட்சம் பாரபட்சமற்ற பார்வையில் முன் வைக்கும்போது, எளிதாக நாமும் அதனுடன் பயணிக்கலாம். இது இலக்கியம் என்பதைத் தாண்டி, உடன் இருப்பவருக்கும், நம்முடன் பயணிப்பவருக்கும் கூட பொருத்திப் பார்க்கலாம்.

மாஸ்டர் லிங்ஜி, எனும் புத்தத்துறவியிடம்(ஒன்பதாம் நூற்றாண்டை சேர்ந்தவர்), கேட்கப்பட்ட கேள்வியின் தொடர்ச்சியாக அவர் கூறியது, மனதில் அறியாமை எழும்போது, நீங்கள் நிலம் எனும் பூதத்தால் கட்டுண்டு விடுகிறீர்கள். தேடல்/இச்சை எழும்போது நீராலும், கோபம் எழும்போது நெருப்பாலும், மன எழுச்சிகளால் காற்றாலும் கட்டுண்டு விடுகிறீர்கள். நீரில் நடப்பது போல் நிலத்திலும், நிலத்தில் நடப்பது போல் நீரிலும் நடக்க வேண்டும். தேடல் என தோன்றுகையில் அறியாமையின் துணை கொண்டும், அறியாமை என தோன்றுகையில் தேடலின் துணை கொண்டும் தனிமையை அணுக வேண்டும் என்று நினைக்கிறேன்.

ஈசாவாஸ்ய உபநிஷதில் 14ம் மந்திரம், ரூபம், ஆகிருதி பற்றி விவரித்து, சம்பூதி, அசம்பூதி பற்றியும் பேசுகிறது. ரூபம் என்பது நம் உடல் என்றால், ஆகிருதி, நம் உடல் உறுப்புகளின் இயற்கை இணைவு என்று சொல்லலாம். எடுத்துக்காட்டு: கைகளின் வளைவுகள், பெருவிரலின் தனித்த வடிவம், அதன் இயற்கையுடனான பரிணாம வளர்ச்சிதான். அதையே ஆகிருதி என்கிறோம். இயந்திரங்களையும் ஆகிருதியாக காணலாம்.

இயற்கையில் முதலில் ரூபமற்ற இருப்பே இருந்தது. இன்று வடிவங்கள் தோன்றி ஆகிருதியாகின. சம்பூதி என்பது மனதில் முழுமையான வடிவம் பெற்று, நம்மை இயக்கும் எண்ணங்கள் எனக் கொண்டால், அசம்பூதி என்பது இன்னும் முழுமை பெறாத உளவியல் கூறுகள். எடுத்துக்காட்டு, குழந்தையின் நரம்பு மண்டலத்திலும், அதன் வெவ்வேறு சுரப்பிகளுக்கிடையேயும் மிகக் குறைவான ஒருங்கிணைப்பே உள்ளது. இதன் விளைவாக, குழந்தை அசம்பூதி நிலையிலேயே உள்ளது. பெற்றோர் அண்டைவீட்டார் அந்த ஒருங்கிணைப்பு முழுமை பெறும் பொறுப்பை தாங்களாகவே எடுத்துக் கொள்கிறார்கள். பெரியவரிடத்தில் இந்த முழுமையான அசம்பூதி நிலை செயலற்ற நிலையாகவே காணப்படுகிறது. ஆனால், ஒரு மனிதனின் உளவியலில், உருக்கொண்ட உளவியல் ஆற்றல்களைப் போல, முக்கால் பங்கு உளவியல் ஆற்றல்கள், முழுமை கொள்ளாத உளவியல் ஆற்றல்கள். மனிதன் இரண்டாலும் ஆனவன்தான். மதுவை சுவைக்காத, சுவை தெரியாத அசம்பூதி நிலை நேர்மறையானது. விவசாயத்தில் புரட்சி உண்டாகும் சம்பூதி நிலையும் நேர்மறையானது.

இலக்கியத்தில் தனிமையை என்னால் முழுமையாக புரிந்து கொள்ள முடியாததாகவே உள்ளது. ஆனால், நான், இந்த சம்பூதி, அசம்பூதி கூறுகளால் ஆனவள் தான். நேர்மறையான சிந்தனைக்கும், செயலுக்கும் இதை எடுத்து செல்லும் விவேகம் இருந்தால் போதும் என்று நினைக்கிறேன்.

 -- ப்ரீத்தி, சென்னை

 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அணங்கின் மொழி

முது நாவல்

முது நாவல் எனக்கு பிடித்த சிறுகதைத் தொகுப்பு. புனைவு களியாட்டுக் கதைகள் நூறையும் தினம் ஒன்றாக வாசிக்கும் போது, எனக்கு பிடித்த கதைகளை பட்டியல...

தங்க விதைகள்