கட்டுரை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கட்டுரை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வைரம்...

 ஜெய் குருதேவ்.

       மற்றவர்கள் உங்களை மதிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பை நீங்கள் முற்றிலுமாக கைவிட வேண்டும்.   

           இந்தப் பாதையில், நிச்சயமாக சந்தேகங்களும் சூழ்நிலைகளும் உங்களை எல்லாப் பக்கங்களிலிருந்தும் குத்தும்; அதனால் எந்த ஒரு தருணத்திலும் உங்களிடம் எந்த பலவீனமும் மிஞ்சாது. இல்லையென்றால், இங்கு வந்து, என்னுடன் அமர்ந்து, சிரித்துவிட்டுப் போவதில் எந்த அர்த்தமும் இல்லை.

           நீங்கள் இங்கு வந்தால், ஒரு "வைரம்" போல மாற வேண்டும்.💎சக்திவாய்ந்தவராக!

--சசிகலா, வாணியம்பாடி

The Choice: Embrace the Possible By Edith Eva Eger - Book Summary

நூல் சுருக்கம் - ராஜேஸ்வரி, கோவை

நான் படித்த முதல் Holocaust சம்பந்தமான நூல் இது. காவிய முகாமில் பிரீத்தி அவர்களின் 'இலக்கியத்தில் தனிமை' உரையில் குறிப்பிடப்பட்ட மூன்று புத்தகங்களில் இது ஒன்று. ( மற்ற இரு புத்தகங்கள் உருமாற்றம் மற்றும் குட்டி இளவரசன்). வாசிப்புப்பகுதியாக இரு அத்தியாயங்களை கொடுத்திருந்தார்.

அதனால் மொத்த புத்தகத்தையும் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது. ஒரு நாவலை படித்த அனுபவம். உண்மையிலேயே இந்த கஷ்டங்களையெல்லாம் அனுபவித்த ஒருவர் இருக்கிறார் என்பது மிகுந்த ஆச்சரியமாக இருந்தது.

இத்தனை இன்னல்களுக்குப் பின்னும் நீண்ட ஆயுளோடு வாழ்ந்து, தனது 98 வயதில் 2026 ஆம் ஆண்டு, கொள்ளு பேரன் பேத்திகளை பார்த்த பின் மறைந்தார்.

Victim and Victimhood

கஷ்டம் உலகம் பூராவும் இருக்கிறது. இனவெறியால், அதிகாரத்தால் நாம் பாதிக்கப்படலாம். அது நம்மை ஒரு பாதிக்கப்பட்டவராக ஆக்கும்(Victim). ஆனால் அது வெளியில் நடப்பது. நாம் நம்மை பாதிக்கப்பட்ட நிலை(Victimhood) என்று நினைப்பது உள்ளிருந்து வருவது.

நமக்கு ஏற்பட்டதை நாம் பிடித்து தொங்கிக் கொண்டே இருப்பதால், ஒரு பாதிக்கப்பட்டவரின் மனநிலையை நாம் ஏற்கிறோம். அடுத்தவர்களை குறை கூறிக்கொண்டு, வேறு எதைப் பற்றியும் யோசிக்க மாட்டேன் என்று கடந்த காலத்தில் சிக்கி, மன்னிப்பு தராமல் இருக்கும் நிலை என்பது நம் மனதை சிறையில் அடைத்து நாமே காவலாளி ஆவதற்கு ஒப்பானது.

மேலும் கஷ்டத்திற்கு ஒரு படிநிலை கிடையாது. என் வலி, உன் வலியை விட பெரியது என்று அதை அடுக்க முடியாது. ஏன் எனக்கு மட்டும் இந்த கஷ்டம் என்று கேட்காமல், அடுத்து என்ன செய்வது என்று யோசிப்பவர்களால் தான், பிரச்சனையை தாண்டி செல்ல முடியும்.

எந்த நிலையிலும் காயப்படாமல், ஒரு வாழ்க்கை வாழ முடியாது. ஆனால் இந்த தருணத்திற்கு பின், கடந்த காலத்தில் இருந்து விடுதலையாகி, என்ன நடக்கவிருக்கிறதோ, அதை நோக்கி சிந்திப்பதற்கான சுதந்திரத்தை தேர்ந்தெடுக்க நம்மை அழைக்கிறார் எடித் ஈகர்.

அவரின் கதை

அவர், அவரின் அக்கா மேக்டா (Magda), அவரின் அன்னை மூவரும் ஒரு வரிசையில் நிற்கும் காட்சி, அவருக்கு திரும்பத் திரும்ப ஞாபகம் வந்து கொண்டே இருக்கிறது. இருபது வருடங்களாக அந்த காட்சியை நினைத்து நினைத்து பார்த்திருக்கிறார்.

அம்மா, அப்பா, அவர், இரு அக்காக்கள் கொண்ட ஹங்கேரியில் வசிக்கும் யூத குடும்பம் அவர்களுடையது. அன்னைக்கும், தந்தைக்கும் சுமூகமான உறவில்லை. மூத்த அக்கா மேக்டா எப்போதும் அவர்களை சிரிக்க வைத்துக் கொண்டே இருப்பார். கிளாரா ஒரு வயலின் மேதை.

இவர் ஒரு பாலே நடன கலைஞர். ஒரு நாள் அவரின் பயிற்சியாளர், அவரை அழைத்து அவர் யூதர் என்பதால், அவர் ஒலிம்பிக் செல்லும் வாய்ப்பு அவருக்கு மறுக்கப்பட்டிருக்கிறது என்பதை கூறுகிறார். அதை கேட்டு மனம் உடைந்து போகிறார். அவரின் தாத்தா, பாட்டி அதே ஊரில் சற்று தள்ளி வசிக்கிறார்கள்.

ஆஷ்விஷும் , இழப்புக்களும்

முதலாம் உலகப் போர் நடக்கும் போது, கிளாரா ஒரு கச்சேரிக்காக புதாபெஸ்ட்க்கு(Budapest) சென்றிருக்கிறார். அமெரிக்காவில் இருந்து, அவர் நண்பர் அடுத்த நாள் காலை அவர்கள் ஜெர்மானியர்களால் பிடித்துக் கொண்டு போகப்படலாம் என்று கூறுகிறார்.

குடும்பத்தில் அம்மாவும் அப்பாவும் வழக்கம் போல சண்டை இடுகிறார்கள். ஜெர்மனிய சிப்பாய்கள் வந்து, ஒரே ஒரு பெட்டியில் அவர்களுக்கு தேவையானதை எடுத்துக் கொள்ளலாம் என்று கூறி இவர்கள் நால்வரையும் அழைத்துச் செல்கிறார்கள்.

ஆடு மாடுகளைப் போல் அடைக்கப்பட்டு ரயிலில் சென்று ஆஷ்விஷ்(Auschwitz) சென்றடைகிறார்கள். அவரின் தந்தை அங்கு ஒலிக்கும் இசையை கேட்டு, இது மிகவும் மோசமான இடமாக இருக்காது என்று கூறுகிறார். ஜெர்மன் மொழியில் 'செயல் நம்மை விடுதலை செய்யும்' என்று எழுதப்பட்டிருக்கிறது.

தந்தையையும்,அன்னையையும் வேறு இடத்திற்கு அனுப்பி விடுகிறார்கள். அவளும், அவளின் அக்காவும் மட்டும், தங்கும் இடம் போல் இருக்கும் இடத்திற்கு கொண்டு செல்லப்படுகிறார்கள்.

அங்கே இருக்கும் பெண்ணிடம், 'என் அம்மா எப்போது வருவார்கள்?' என்று இவள் கேட்க, அவள் எரிச்சலுடன் நிர்தாட்சண்யம் இல்லாமல், புகை போக்கியில் இருந்து வரும் புகையை சுட்டிக்காட்டி, 'உன் அன்னை அங்கு எரிந்துகொண்டிருப்பார்கள். அவர்களைப் பற்றி பேசும்போது, கடந்த காலத்தில் பேசுவது நல்லது' என்கிறாள்.

மொட்டை அடிக்கப்பட்டு, நிர்வாணமாக இவளும் இவள் அக்காவும் நிற்கும்போது, அக்கா கேட்கிறார் 'உண்மையை சொல் நான் எவ்வாறு இருக்கிறேன்'. அவளால் பொய் கூற முடியவில்லை.

மறுபடியும் மறுபடியும் கேட்டபின் 'உன் கண்கள் மிக அழகாக இருக்கிறது' என்ற உண்மையை கூறுகிறார். முதன்முறையாக அவருக்கு தோன்றுகிறது, இழந்து விட்டதைப் பார்க்காமல், என்ன மிச்சம் இருக்கிறது என்பதை தேர்ந்தெடுக்கும் சுதந்திரம் அவருக்கு இருக்கிறது.

நரகத்தில் நடனம்

சாவின் தூதன் மெங்கலே (Dr.Mengele) வருகிறார். இவள் தேர்ந்த நடனக் கலைஞர் என்பதை தெரிந்த மற்றொரு பெண், இவளை முன்னே அனுப்புகிறார். எனக்காக ஆடு என்கிறார்.

இவருக்கு மிகவும் பரிச்சயமான The Blue Danube என்ற பாடல் ஒலிக்கிறது. ஆடு என்ற கட்டளை கேட்டதும், கண்ணை மூடி ஆட ஆரம்பிக்கிறார். ஒரு நடன மேடையில் நின்று ஆடுவது போல் நினைத்துக் கொண்டு ஆடுகிறார். தன் காதலுக்காக, வாழ்க்கைக்காக ஆடுகிறார்.

ஆடும் போது அவருக்கு ஒன்று தோன்றுகிறது. மெங்கலே தன்னை விட பாவப்பட்ட நிலையில் இருக்கிறார். இன்னும் தன் மனம் சுதந்திரமாக இருக்கிறது. ஆனால் ஒருபோதும் இவரால் அப்படி சுதந்திரமாக இருக்க முடியாது. ஏனெனில் அவர் செய்த காரியங்கள் அப்படி.

அவர் தன்னைவிட பெரிய கைதி. அழகாக, நளினமாக அந்த ஆடலை முடிக்கிறார். மெங்கலே ஒரு ரொட்டி துண்டை பரிசாக கொடுத்து விட்டு போகிறான். அங்கு இருப்பவர்கள் அதை பகிர்ந்து சாப்பிடுகிறார்கள்.

உள்ளிருக்கும் நம்பிக்கை

அவரின் காதலன் எரிக்கை என்றாவது ஒருநாள் சந்திக்க கூடும் என்ற நம்பிக்கையில் அவர் வாழ்கிறார். அந்தக் கொடுமையான இடத்தில் இருந்தாலும், பட்டினியாக கிடந்தாலும், மனதிற்குள் எப்போதும் சமைத்துக் கொண்டே இருந்தார்கள்.

காலை 4:00 மணிக்கு எழுந்து, புதிதாக வந்தவர்களின் உடை உடைமைகளை சரிபார்க்க  வேண்டும் .அங்கிருக்கும் இடங்களை சுத்தம் செய்ய வேண்டும். அதிர்ஷ்டம் இல்லாதோர் எரியூட்டு மையத்தில் எரியாத உடல்களில் இருந்து தங்க பல்லை எடுக்க வேண்டும்.

தினமும் காலையில் ஒரு அங்காடிக்கு செல்வது போல, அவர்கள் பேசிக்கொண்டு வேலைக்கு செல்கிறார்கள். அவர்கள் உயிரோடு வாழ அது மிகவும் முக்கியமாக இருக்கிறது. அவரின் அன்னை 'உனக்கு அழகுக்கு பதில், மூளை இருப்பது குறித்து எனக்கு சந்தோஷம்' என்று கூறி இருக்கிறார்கள்.

அதனால் என்ன செய்ய வேண்டும் என்று தனக்கு தெரியும், எப்படியோ இங்கிருந்து தான் மீள முடியும் என்ற நம்பிக்கையும் அவருக்கு இருந்தது. அவர் மிகவும் உடல் நலிந்த ஒரு பெண்ணை பார்ப்பார். ஆனால் அந்த பெண் தினமும் எழுந்து வேலை செய்வார்.

கிறிஸ்துமஸ் அன்று தான் விடுவிக்கப்படுவோம் என்ற நம்பிக்கையில் அவர் இருந்தார். ஆனால் கிறிஸ்துமஸ் வந்தது. விடுதலை கிடைக்கவில்லை. அடுத்த நாளே அவர் இறந்து விட்டார். உள்ளிருக்கும் நம்பிக்கை மட்டுமே வாழ வைக்கிறது, என்பதை புரிந்து கொண்ட தினம் அது. இந்த நிலை தற்காலிகமானது என்றும், தான் இதை கடந்து விட்டால், அடுத்த நாள் விடுதலையாகிவிடுவேன் என்ற ஒரு வரியில் வாழ ஆரம்பித்தார்.

விடுதலை

மற்றுமொரு கொடூரமான இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, பல இன்னல்களுக்கு பிறகு, அமெரிக்க படை வீரர்களால் காப்பாற்றப்படுகிறார். உடலில் உயிர் மட்டுமே ஒட்டி இருக்கிறது. வீரர் அவரின் வாயில் சாக்லேட் ஊட்டுகிறார்.

அவரின் சகோதரியும் காப்பாற்றப்படுகிறார். பொதுமான உணவு உண்ணாததால், என்பு தோல் போர்த்த உடம்பாக உள்ளார். உடல் உடல் முழுவதும் வலி. மிகவும் கஷ்டப்பட்டு நடந்து செல்கிறார்கள். இப்போது சாப்பாடும் தண்ணீரும் கிடைக்கிறது.

ஆனால் அதிகமாக சாப்பிடக்கூடாது. நீண்ட நாள் பட்டினி கிடந்ததால், சிறிது சிறிதாக உணவை உண்ண வேண்டும். அவரின் சொந்த ஊரில் இங்கிருந்து விடுதலை கிடைத்த பெண், அதிகமாக சாப்பிட்டு உயிர் இழந்தாராம். அமெரிக்க வீரர்கள் இவர்களை ஒரு ஜெர்மன் குடும்பத்துடன் தங்க வைத்திருந்தார்கள். அங்கிருந்த குழந்தைகள் இவர்களின் தோற்றத்தை பார்த்து பயப்படுகிறார்கள்.

வேலியே பயிரை மேய பார்த்தது

ஒரு குடித்திருந்த வீரர் இவரிடம் தவறாக நடக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் நெருங்கி வருகிறார். ஏனோ மனம் மாறி சென்று விடுகிறார். அடுத்த நாள் பகலில் இவர் அருகில் அமர்ந்து 'மன்னித்துவிடு மன்னித்துவிடு' என்று அழுகிறார்.

அதன் பின் தினமும் வந்து இவர்களுக்கு உதவி செய்கிறார். சாப்பாடு கொண்டு வருகிறார். மறுபடியும் முதலில் இருந்து எழுத படிக்க கற்றுத் தருகிறார். அதன் பின், அமெரிக்க அரசாங்கத்தின் உதவியுடன் சொந்த ஊர் திரும்ப வாய்ப்பு கிடைக்கிறது.

வீடு திரும்புதல்

வெளிநாடு சென்று இருந்த அக்கா கிளாரா அவரின் வீட்டில், இவர்கள் எப்படியும் வருவார்கள் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கிறார். வயலின் வாசித்து சம்பாதிக்கிறார்.  இவருக்கு முதுகெலும்பு உடைந்திருக்கிறது. உடல் பூராவும் அரிப்பு நோய். தோல் முழுவதும் மருந்து தடவி குழந்தை போல் அன்போடு கவனிக்கிறார்.

இவருக்கு நெஞ்சில் சளி TB ஆக இருக்கலாம் என்ற சந்தேகம் இருந்ததால், அதற்கான மருத்துவத்திற்கு செல்கிறார். அங்கு பெலா என்பவரை சந்தித்து, அந்த நட்பு காதலாகி மணம் முடித்து கொள்கிறார்கள். மூன்று குழந்தைகளும் பிறக்கின்றன. அமெரிக்கா செல்ல வாய்ப்பு கிடைக்கும்போது, சென்று விடுகின்றனர்.

Viktor Frankl Man's Search for Meaning

குழந்தைகள் சிறிது வளர்ந்த பின் மீண்டும் படிக்க ஆரம்பிக்கிறார். அவரின் உடன் படிக்கும் மாணவர் இவருக்கு Viktor Frankl Man's Search for Meaning புத்தககத்தை கொடுத்து வாசிக்க சொல்கிறார். இவருக்கு பையில் இருக்கும் புத்தகம் ஒரு வெடிகுண்டு என்று தோன்றுகிறது. வாசித்த பின், விக்டரிடம் கடிதத்தில் தொடர்பு கொள்கிறார்.

அந்த நட்பு நீண்ட வருடங்கள் தொடர்கிறது. மனநலத்தில் Ph. D வாங்குகிறார். ஒவ்வொரு நோயாளியின் பிரச்சனையை தீர்க்க தீர்க்க, இவர் மனதில் இருக்கும் காயங்களும் ஆற ஆரம்பிக்கிறது.

ஹிட்லருக்கு வெற்றியா?

அவருக்கு 53 வயதான போது ஜெர்மனியில் ஒரு உரையாற்ற, அவரின் நண்பர் கூப்பிடுகிறார். இவருக்கு அங்கு செல்ல விருப்பமில்லை. அமெரிக்கா சென்று பல வருடங்கள் ஆன பின்னும் கூட சைரன் சத்தம் கேட்டாலோ, கம்பி வேலியை பார்த்தாலோ அதிர்ச்சியாவது போன்ற பாதிப்புகள் இருக்கின்றன. இவருக்கு பழைய ஞாபகங்கள் வருகின்றன.

இவரின் பெண்ணிடம் ஆலோசனை கேட்க, அவர் 'உங்களுக்கு கஷ்டமாக இருந்தால் போக வேண்டாம். தனக்கு தெரிந்த ஒரு நண்பர், மன அமைதி கிடைக்கும் என்று ஆஷ்விஷ் சென்றார்கள். ஆனால் அவர்களுக்கு அந்த அதிர்ச்சி தாங்க முடியாமல், மாரடைப்பு வந்து இறந்தார்கள். அதனால் உங்களை தவறாக நினைக்க மாட்டேன்' என்று சொல்லிவிடுகிறார்.

செல்ல வேண்டாம் என்று முடிவெடுத்ததை தன் கணவரிடம் கூறுகிறார். கணவர் புன்னகையுடன் 'நீ ஜெர்மனி செல்லாவிட்டால், ஹிட்லர் ஜெயித்துவிட்டார்' என்கிறார். இது அவருக்கு குத்து பட்டது போல் இருந்தது. இல்லை தான் சென்றாக வேண்டும் என்று முடிவெடுத்தார். அதிகாரிகளிடம் கஷ்டப்பட்டு அனுமதி வாங்கி, ஆஷ்விஷ் செல்கிறார்.

கடந்தகால முள்

அவர் முதன்முதலில் அங்கு சென்ற காட்சி ஞாபகம் வருகிறது. வரிசையில் அவர், அவரின் அம்மா, அக்கா நிற்கிறார்கள். மெங்கலே இவரிடம் அருகில் இருப்பது அம்மாவா அக்காவா என்று கேட்கும் போது, இவர் யோசிக்காமல் அம்மா என்று கூறி விடுகிறார். அதனால் அவரை வேறு வரிசையில் மாற்றி விட்டார்கள். தான் ஒரு வேளை அக்கா என்று சொல்லி இருந்தால், அம்மா உயிருடன் இருந்திருப்பார்களோ என்ற குற்ற உணர்வு, இத்தனை வருடமாக அவரை உறுத்திக் கொண்டே இருந்தது.

இங்கு வந்து அவர் யோசிக்கிறார். ஒரு 16 வயது குழந்தை, பசியில், பயத்தில் ஒரு தேர்வை செய்திருக்கிறார். அது முடிந்து விட்டது. இப்பொழுது தன் மகிழ்ச்சிக்கு தானே பொறுப்பு. குறைகளுடன் தன்னை ஏற்றுக் கொள்ள வேண்டும். தான் உயிரோடு இருப்பது தவறல்ல. உயிரோடு இருப்பதால், உலகை இன்னும் சிறந்த இடமாக மாற்றினால், அதுவே தன் அம்மாவுக்கு மகிழ்ச்சி தரும்.

கடந்த காலத்திலிருந்து ஓடவும் கூடாது. இந்த கணத்தில் சந்தோஷமாக வாழ தேர்ந்தெடுக்கும் உரிமை தன்னிடம் தான் உள்ளது என்று முடிவு செய்து சந்தோஷத்தை தேர்ந்தெடுக்கிறார். அவர்களின் கலாச்சாரத்தில் கல்லறைகளில் பூ வைத்து மரியாதை செய்வது போல ஒரு கல் வைப்பார்களாம்.

அந்தக் கல் இறந்தவர்கள் இவர்களின் இதயத்திலும் நினைவிலும் தொடர்ந்து வாழ்வதை குறிக்கும். அந்த இடத்தில் அவரின் பெற்றோரை நினைத்து ஒரு கல்லை வைத்து, 'உங்களை நான் நேசிக்கிறேன். எப்போதும் நேசிப்பேன். விடைபெறுகிறேன். நன்றி' என்று கூறி திரும்புகிறார். அந்த உரையை சிறப்பாக பேசி முடிக்கிறார்.

நம் தேர்ந்தெடுக்கும் உரிமை

புத்தகத்தை வாசித்து முடித்த பின் எனக்கு ஏற்பட்டது ஒரு நிறைவு உணர்வு. எப்போதுமே மனதை உறுத்தும் விஷயங்களில் ஒன்று கடந்த கால தவறுகள். 'இதை செய்திருக்கலாமோ? இதை இப்படி செய்திருக்கலாமோ? இதை செய்யாமல் இருந்திருக்கலாமோ?' என்ற கேள்வி இல்லாதவர்கள் யாராவது இருக்கிறார்களா?. அந்த எல்லாக் கேள்விகளுக்கு ஒரே பதில் தான். அது நடந்து முடிந்து விட்டது.

அதைப்பற்றி ஆயிரம் முறை யோசித்தாலும், நடந்த விஷயத்தில் ஒரு துளி கூட நம்மால் மாற்ற முடியாது. ஆனால் அதைப்பற்றி தொடர்ந்து சிந்தித்து கவலைப்படாமல், அதை நிகழ்காலத்திலும் வருங்காலத்திற்கும் கொண்டு செல்லாமல் இருக்கலாம் என்று தேர்ந்தெடுப்பதற்கான உரிமை, இப்போது நம்மிடம் உள்ளது. எடித் ஈகர் அவர்களுக்கு நன்றி கூறி, நம் தேர்ந்தெடுக்கும் உரிமையை பயன்படுத்துவோம் என்று உறுதிமொழி ஏற்போம்.

-- ராஜேஸ்வரி, கோவை

வேனிலின் பொன் வெளி — இயற்கையும் உள்ளமும் உரையாடும் தருணங்கள்

பொன்னாக மிளிரும் நிலமும், நினைவுகளும்

இந்த ஆண்டு கோடை காலம் மிகக் கடுமையாகவே உள்ளது. வழக்கமாக இருப்பதை காட்டிலும் வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருக்கின்றன. ஆனாலும் இந்த கோடையையும் கூடுதலாக ரசிக்க பல விஷயங்கள் நடந்தேறின.

இந்த கோடையின் ஆரம்ப நாட்களில் வெள்ளி மலைக்கு செல்லும் வாய்ப்பு கிட்டியது. பயணம் சற்றே சிரமமாக இருந்தாலும் இணை உள்ளங்களோடு  மலை வழிப் பயணம் என சுவராசியத்திற்கு குறைவில்லை.

வெள்ளி மலையின் விடியல்

வழக்கமாக வெள்ளி மலையில் காலை நடை செல்லும் பழக்கம் உண்டு. இந்த முறை அமுதா அவ்வூரில் உள்ள குளத்தங்கரை பகுதிக்கு அழைத்துச் சென்றார். சிறு சிறு குடியிருப்புகளை கடந்து சென்ற போது வெட்ட வெளியான மிகப் பெரிய நிலப்பரப்பு. விவாசய நிலம் சோளம் அறுவடை நடந்து முடிந்து காலியாக விடப்பட்ட நிலம் அதன் ஒரு பகுதியில் குளம் அதனோரத்தில் மிகப் பெரிய அரசமரம் அதனடியில் ஒரு பிள்ளையார் கோவில் . அந்த இடத்திற்கு போய்ச் சேரும் வரை மனதில் ஒன்றும் தோன்றவில்லை . 

அரசமரத்தடியில் நின்று வேனலின் விடியலில் அந்த நிலத்தின் முழுப் பரப்பையும் பார்த்த போது பொன்னென மினுங்கிக் கொண்டிருந்தன!.... தூரத்தில் குடியிருப்பில் எதையோ எரித்து கொண்டிருக்க அதில் புகையெழுந்து அந்த பொன்வெளியில் மேகமென தவழ்ந்து கொண்டிருந்தது.

குளத்து நீர் ஆடியென அசைவிலாமல் இருக்க அழகிய பெண்ணொருத்தி மல்லாந்து படுத்திருப்பது போல் அங்கிருந்த மலைத் தொடரின் பிம்பத்தை காட்டிக் கொன்டிருந்தது . தூரத்தில் இருக்கும் ஒரு மரத்தின் நிழலில் தாத்தா ஒருவர் தன் மாடுகளை மேய விட்டு பார்த்து கொண்டிருந்தார் .... இந்த காட்சிகள் அனைத்தும் கண்ணிலும் மனதிலும் ஓவியமாக பதித்து கொண்டாலும் கைபேசியின்  கேமராவிலும் படம் பிடித்து கொண்டேன்.

வேனிற் கால ஆரம்பத்திலேயே அரச மரம் தன் இலைகளை உதிர்த்து விட்டிருந்தது.... கிளை நுனிகளில் மட்டும் செம்பழுப்பு நிறத்தில் துளிர்த்த இலைகள் துடித்துக் கொண்டிருத்தன. எனக்கு எப்பொழுதும் அரச மரத்து இலைகள் காற்றிலாடுவது பரவசங் கொள்ளச் செய்யும் ... நதி நீரின் ஓசையை ஒத்திருக்கும் அதன் ஒவ்வொரு இலையும் தனித்தனியாக அசைவது பட்டாம்பூச்சிகளால் சூழ்ந்த மரம் என்றே மயங்க வைக்கும். அப்படி மயங்கி கொண்டிருக்க அத்தளிர்களின் இடையிடையே சூறைக் குருவிகளும்  அங்கொன்றும் இங்கொன்றுமாக பறக்கவும் அமரவுமாக இருந்தன.

பிரம்மாண்ட அளவிலான அடிமரத்தை பார்த்த பொழுது என்னவென்று சொல்ல இயலா வண்ணம் நெஞ்சு விம்மி எழுந்து அடங்கியது. அத்துனை பெரிய அடிமரத்தை கண்டவுடன் இயல்பாகவே கட்டி அணைக்க தோணுகிறது. ஆச்சியும், ஐயமையும் நினைவிலெழ அவர்களின் கனவினாலே இன்று இத்தருவின் நிழலில் நான் என கண்களில் நீர்  திரள சிரித்துக் கொண்டிருந்தேன். 

நண்பர்கள் சூழ இருந்தும் நான் தனித்து நின்றிருந்தது போல் ஓருணர்வு... மனமும் அக்கணத்தில் தனிமையை மட்டுமே  விரும்பிக் கொண்டிருந்தது . அந்நேரத்தில் சட்டென குண்டு கரிச்சானின் குரல் கேட்டு தேட குளத்தின் கரையில் உள்ள சிறு செடியில் அமர்ந்திருந்த ஒரு குட்டி குண்டு கரிச்சான் பறவை ஒன்று பாடிக்கொண்டு இருந்தது. அதுவும் நிலத்தில் இறங்கவும் , செடியில் அமரவும் என்று மாறி மாறி பறந்து  கொண்டிருந்தது ... அங்கிருக்கும் ஒவ்வொன்றும் வேனிலை என்னுடன் கொண்டாடிக் கொண்டிருந்து .

நீரிலும் நிழலிலும் — உயிர் கொண்ட ஓவியங்களின் நடனம்

சிறிது நேரத்தில் ஆடிப்பரப்பாக விரிந்திருக்கும் குளத்தின் மேல் என் கவனம் குவிந்தது. அங்கு நீர் பரப்பின் ஓரத்தில் அழுத்தமாக பாசி ஓவியம் போல் படர்ந்திருந்தது . அதில் நீர் பூச்சிகள் ஓவியம் கலையாமல் நடனமிட்டுக் கொண்டிருந்தன. எனக்கு இதைப் பார்க்கும் போது பிஜு மகராஜின் நடனம் தான் நினைவில் எழுந்தது ... பிஜு ஜி நடனமாடும் போது கால்கள் தரையில் பாவியிருக்கிறதா இல்லை மிதந்து கொண்டிருக்கிறதா?  என ஐயமேற்படும்.

ஒரு பூ மலரும் அமைதியுடன் நளினமாகவும் இயல்பாகவும் சுழன்று கொண்டிருப்பார்., நீர் பூச்சியின் நடனமும் அப்படியே ஓவியம் கலையாது நடனத்தை நிகழ்த்தி கொண்டிருந்தது . குளத்தில் ஆங்காங்கே மீன்கள் துள்ளிக் கொண்டிருந்தன .. இரைக்காக வாய் பிளந்து காந்திருந்த ஒரு தண்ணீர் பாம்பையும் பார்க்க நேர்ந்தது. அங்கிருந்த

நிலம் முழுவதும் காய்ந்த மாட்டுச் சாணமும், சோளத்தட்டும் ,சக்கைகளும், காய்ந்த அரச மர இலைகளும் பரவி  இருந்ததே அந்திலத்தின் பொன் நிறத்தை மெருகூட்டியிருந்தது.  அப்பொழுதில்  வெவ்வேறு திசைகளிலிருந்து வந்த பறவைகளின் குரலைக் கேட்ட போது  அச்சூழலுக்கு உகந்த ஒரு பாடலை  இணையத்தில் தேடி எடுத்து வாசிக்க தோணியது.

நின்ற சொல்லர்; நீடுதோன்று இனியர்;
என்றும் என் தோள் பிரிபு அறியலரே’
தாமரைத் தண் தாது ஊதி, மீமிசைச்
சாந்தில் தொடுத்த தீம் தேன் போல,
புரைய மன்ற, புரையோர் கேண்மை;
நீர் இன்று அமையா உலகம் போலத்
தம் இன்று அமையா நம் நயந்தருளி,
நறு நுதல் பசத்தல் அஞ்சிச்
சிறுமை உறுபவோ? செய்பு அறியலரே!

தலைவன் பொருள் தேடுவதற்காக, உன்னை பிரிந்து செல்ல போகிறான், என்று தோழி கூறுகிறார். அதற்கு, அப்பிடியெல்லாம் சென்று விட மாட்டார் என்று தலைவி கூறும் பதில்.

பொருள்:
————
என் காதலர்
சொன்ன சொல் காப்பவர்;
எப்போதும் இனிமையானவர்;
என்றும் என் தோள்களைப் பிரியாதவர்;

குளிர்தாமரையின் தாதுக்களை ஊதி
உயர்ந்த மலையிலிருக்கிற சந்தன மரத்தில்
வண்டு சேர்த்த தித்தித்தத் தேன் போல
உயர்ந்தது அவர் காதல்;

நீர் இல்லாமல் உலகம் இல்லை;
அவர் இல்லாமல் நானில்லை!
விரும்பி நேசிக்கிறார்.

என் நெற்றியில் படரும் பிரிவுத் துயர்(பசலை)
பார்த்துப் பயப்படுவார்!

தான் செய்வதை உணராது
என்னைப் பிரிந்துச் சிறுமை அடைவாரோ!

கபிலரின், இந்த குறிஞ்சித்திணை, நற்றிணை, பாடலோடு அந்த நிலத்தினை மீண்டுமொரு முறை கண்ணுக்குள் பதிய வைத்துக் கொண்டு தங்குமிடம் நோக்கி நடக்கத் தொடங்கினோம்.

பதினைந்து நாட்கள் இடைவெளியில் இருமுறை வெள்ளி மலை போய் வந்ததில் சிறிது நாட்களுக்கு பயணமேதும் திட்டமிடக்கூடாது எனக்கு நானே ஆணையிட்டு கொண்டேன். கோடையும் கடுமையாக தொடர, நினைத்தாலும் போக உடல் ஒத்துழைக்காது என்ற நிலையும் உருவாகி வந்தது . 

எனது கணவருக்கும்  அவரது தொழில் ரீதியாக தினமும் நகரின் புறநகர்ப் பகுதிக்கு பயணம் செய்ய வேண்டி மதிய உணவை உடன் எடுத்துச் செல்ல வேண்டிய தேவையிருந்ததது . அதனால் வழக்கமான காலை நடை சென்று வந்து  சமையல் வேலைகளை தொடர்வதில் சிக்கல் ஏற்பட்டது. மாலை நேரங்களில் நான் நடை செல்லும் பகுதி போக்குவரத்து அதிகமாக இருக்குமாதலால் வீட்டின் மொட்டை மாடியில் நடக்கலாம் என முடிவெடுத்திருந்தேன்.

செவ்வானம் சூழ் வேனில் நிலம்

காலை நடை செல்லும் போது சூரிய உதயம், தூரத்தில் தெரியும் மலைத்தொடர்கள், பறவை பார்த்தல் என பல இனிய அனுபவங்களும் கிடைக்கும் . மொட்டை மாடியில் நடை செல்லாம்  என நினைத்த போது இந்த அனுபவங்களை துறக்க நேரிடுதே  என்ற வருத்தம் இருந்தது... ஆனால் எல்லா இடங்களிலும் இனிமையுண்டு நமக்குதான் பார்க்க கண்கள் இல்லாமலாகிறது என்பது புரிய வந்தது. 

இந்த ஏப்ரல் மாதத்தில் மதுரையில் மாலை ஐந்து மணி வரை வெயில் வெளுத்து வாங்கியது . நான் ஐந்தரை மணிக்கு மேல்  நடை செல்ல ஆரம்பித்தேன் . அந்நேரத்தில் வெயிலின் தாக்கம் குறைந்து மெலிதாக காற்று வீசத் தொடங்கியிருக்கும் .  ஆறு மணிக்கு மேல்  மேற்கில் வானம் சிவக்கத் துவங்கும், மேகங்களின் விளிம்புகள் பொன்னென பொலிந்து கொண்டிருக்கும். அந்நேரத்தில் மனம் அநாயசமாக வானத்தின் மீது குவியத் தொடங்கும்...... 

மனம் உருகும் பொழில்கள்

வானத்தை நோக்கும் போதெல்லாம் முடிவற்ற பெருவெளி ஏற்படுத்தும் ஒரு வெறுமை வந்து கவியத் தொடங்கும் ..... தொடர்ந்து பார்த்துக் கொண்டே இருக்கும் போது அப்பெருவெளியில் சிறு சிறு விஷயங்களை கண்டடையத் தொடங்கி மனம் அந்த வெறுமையை களையச் செய்யும்.... எத்துனை பிரம்மாண்டத்தையும் மனிதன் தன் அகத்திற்கு ஏற்றவாறு உருவகித்து கொள்ள எடுக்கும் பிரயத்தனமே மகிழ்ச்சி அல்லவா? ஒவ்வொரு நொடியும் அதற்கு முயன்று கொண்டே இருக்கிறான்.

மொட்டைமாடி வானம் — இசையும் அமைதியும் சேரும் அந்திப் பொழுது

ஒரு சில நாட்களில் வானம் கண்ணுக்கெட்டிய தூரம் வரை ஒரு துளி மேகமுமின்றி விளிம்பில்லா நீல விரிப்பால் போர்த்தியிருக்கும் அழகு மனதினை மோன நிலைக்கு இட்டுச் செல்லும் ஒரு சில நொடிகளில காற்று எங்கிருந்தோ மேகங்களை இழுத்து வரும்... அந்தியும் அணையத் தொடங்க வானம் பல நூறு  மேகத் தூரிகைகள் கொண்டு ஆயிராமாயிரம் வண்ண ஓவியங்கள் வரையத் தொடங்கும் . அந்நேரத்தில் நான் என் இயர் ஃபோனில்  மொசார்ட்டின் சிம்பொனியை ஒலிக்க விடுவேன் ... முடிவிலா ஓவியத்திலும், மொசார்ட்டின் இசையிலும் என்னை தொலைத்து உறைந்து நடப்பதை நிறுத்தியிருப்பேன்.

 இசையும் , இயற்கையும் எனக்களிக்கும் ஆன்மீக உணர்வினை சொல்ல நான் தேர்ந்தெடுத்த மொழி கண்ணீரும் , மௌனமுமாகவே இருக்க முடியும்!

வானத்தின் முடிவிலா வண்ணக் கிறுக்கல்கள்

"இப்படியே வானத்தை பார்த்து பொங்கியது போதும்" என நனவு மனம் எச்சரிக்க தொடங்குவதை கவனித்து நடக்க ஆரம்பிப்பேன் . ஒவ்வொரு திருப்பத்திலும் முதலில் வரையப்பட்ட ஓவியம் அழிக்கப்பட்டு புதியதோர் ஓவியம் வரையப்பட்டுக் கொண்டே இருக்கும்... முடிவில்லா ஒரு ஆர்ட் கேலரி ஷோ வினை பார்த்தபடி நடந்து கொண்டிருப்பேன். அந்தி அணைந்த பின் வெள்ளி முளைத்து வருவான்.... அடுத்த திருப்பம் முடிந்து வருகையில் உச்சியில் வியாழனும், அரைச் சந்திரனும் வந்திருப்பார்கள் .

ஒன்றரை மாதமாக மொட்டை மாடியில் ஒரு மணி நேர  நடையின் போது அந்தி அணையும் காட்சிகளுடன்  மொசார்ட்டும், ராஜாவும், ரகுமானும் வேனிற் கால நாட்களை அனலும, வசந்தமுமாக கொண்டாட வைத்தனர். ஒரு சில நாட்கள் இந்த ஓவியங்களை படம் பிடிக்கவும் முயற்சி செய்வேன் .... அது பிரம்மாண்டத்தின் ஒரு துளியாக வியர்த்தமாகி நிற்கும் அழகினை புன்சிரிப்போடு பார்த்துக் கொள்வேன் . அன்றாடங்களில் சலிப்பு ஏற்படுவதே பழக்கமெனும் பாசி தான் என்றாலும் இவ்வினிய பழக்கங்கள் அன்றாடங்களை பொலியச் செய்து விடுகின்றன. இதை முடிக்கும் தருவாயில் தேவதேவனின் வரிகள் நினைவில் எழுந்து வந்தன!

எப்போதாவது நிகழும்

நன்மைகள் குறித்து

மகிழ்ச்சி அடைகிறோம்........

எப்போதாவது நிகழும்

இந்த அழகினையும் காதலையும்

நன்மைகளையும் கண்டு கொண்ட

கவிதைகளும் கவிஞர்களும் வாசகர்களும்தான்

எவ்வளவு குறைவானவர்களாய் இருக்கிறார்கள்

அவர்கள் அதிலேயே நிறைவு பெற்றவர்களாய்

பிறர் மீதும் தன் மீதுமே அக்கறையற்றவர்களாய் ?

கவிதையின் மதத்தை 

நாம் ஏன் கண்டுகொள்வதேயில்லை?

 

-- மதுபாலா, மதுரை

Credits: Taken from https://madhubala14.blogspot.com/2026/04/blog-post_25.html

அந்திவானம்  

 அந்தி வானமும் இலக்கிய நினைவுகளும்

இரண்டு நாள்களாக சென்னையில் சுட்டெரிக்கும் வெயில் குறைந்து, கோடை மழை. நானும் தோழியும் ஒரு மாலையில் அருகில் உள்ள ஏரிக்கரைக்குச் சென்றோம் பறவைகள் பார்க்க.

பறவைகளில் கவனமுடன் இருந்து, பறவையின் வண்ணம், பெயர், அதன் அலகு, இறகு என்று பார்த்துக் கொண்டே, திடீர் என்று வானத்தை பார்த்த போது அப்படியே நின்று விட்டோம் நானும் என் தோழியும்.

சூரியன் மறையும் தருணம், செவ்வானம். இள நீலத்தில், வெளிர் சூரியனின் கலவை. பைட் மைனாவின் அலகு போலவே, அந்த நிறம் இருந்தது.

இள நீலம் மேல் சிகப்பு தெளித்தது போல இருந்த காட்சி. இதை பார்த்த போது ஒரு மெல்லிய புன்னகை விரிந்தது. ஒரு வித பரவசம். அதையே பார்த்து கொண்டு இருந்த நேரத்தில் ஒரு 5 நிமிடங்கள் ஒரு அமைதியான மன நிலை, மிக மெல்லிய இளங்காற்றின் தழுவலோடு.

இயற்கையில் உயிர்பெறும் வரிகள் 

எனக்கு உடனேயே கம்ப இராமாயணத்தில், வரை காட்சி படலத்தில் வாசித்த இரண்டு பாடல்கள் நினைவுக்கு வந்தன.

மஞ்சு ஆர் மலை வாரணம் ஒத்தது; வானின் ஓடும்
வெஞ்ச் சாயையுடைக் கதிர். அங்கு. அதன்மீது பாயும்
பஞ்சானனம் ஒத்தது; மற்று அது பாய. ஏறு
செஞ் சோரி எனப் பொலிவுற்றது. செக்கர் வானம்.

இந்த பாடலில் அந்த சந்திர சயில மலையில் அந்தி பொழுது தழுவும் தருணம். அதை கம்பர், யானை மேல் பாயும் சிங்கம் போல் என்று சொல்வார். அதுவும் அந்த சிங்கம் யானை மேல் பாய்வதால் சுரக்கும் சிவந்த இரத்தம் போல விளங்கியாதக சொல்வார்.

இந்த பாடலை வாசிக்கும் போது ஒரு விதமான திடுக்கிடும் சித்திரம் விரிந்தது.

வானம் பேசும் நிறஙகள்

அடுத்த பாடல், சந்திர சயில மலையின், பெரிய சிகரத்திலுள்ள மரங்கள் யாவும் அந்தி வெயில் பரவ, அந்த மரங்களில் இளந்தளிர்கள் மேல் ஒளி வந்து விழும் பொழுது அவை மணிகளால் அணிவிக்கப்பட்டது போல காட்சி அளிப்பதாக இருக்கிறது.

திணி ஆர் சினை மா மரம் யாவையும் செக்கர் பாய.
தணியாத நறுந் தளிர் தந்தன போன்று தாழ.
அணி ஆர் ஒளி வந்து நிரம்பலின். அங்கம் எங்கும்.
மணியால் இயன்ற மலை ஒத்தது -
அம் மை இல் குன்றம்.

அந்தி வேளையில், அங்கம் எங்கும் செவ்வண்ணமேயான சூரிய கதிரின் ஒளியில் அந்த இளந்தளிர் மணிகள் போல் காட்சி அளிப்பது, என்ற வரிகள். அழகிய காட்சி.

பொன் பூத்த சென்னி

இந்த கோடை காலத்தில் மரங்களில் தான் எத்தனை எத்தனை மாற்றங்களை காண முடிகிறது. இவ்வாறான யோசனையில் குறுந்தொகையின் பாடல் ஒன்று ஞாபகம் வந்தது.

பொன்செய் புனைஇழை கட்டிய மகளிர்
கதுப்பின் தோன்றும் புதுப் பூங்கொன்றைக்

பூங்கொன்றை பூத்து குலுங்கும் மரங்களை, தலையில் பொன்னால் அழகு செய்த பெண்களின் கூந்தலை போல் சொல்லும் இந்த பாடல். இரவில் இந்த கோடையில் வெளியில் செல்லும்போது இந்த கொன்றை பூ பூத்து குலுங்குவதை பார்க்க அத்தனை அழகிய காட்சி.

அந்த கரிய இரவில் பொன்னை கட்டி தொங்க விட்டது போல பூத்து குலுங்குகிறது. அதை பெண்களின் கூந்தல் போல அன்றே காட்சி படுத்தி விட்டார்கள்.

இயற்கையில் ஒவ்வொரு காட்சியும் அணிகலன்கள் போலவே உள்ளன. பூத்து குலுங்கும் மரமும், செவ்வானமும் இந்த பாடல்களை என் மனதிற்குள் விதைத்து விட்டன. என்னை சுற்றியுள்ள ஒவ்வொரு காட்சியும், ஒவ்வொரு உரையாடல்களை வைக்கிறது. அத்தனையும் இந்த வாசிப்பின் மூலமே சாத்தியம் ஆயிற்று.

-- ஈஸ்வரி, சென்னை

ஆசானின் சுவடுகளை தேடி ஒரு பயணம் – காசர்கோடு நினைவுகள்

காசர்கோடு – ஒரு கனவின் தடங்கள்


அந்த "வான் நெசவு" ஆபீஸ்....

என் வாழ்வின் ஒரு பகுதியை இந்த மண்ணில் வசிக்க வேண்டும் என்று நான் நினைத்திருக்கும் நிலம் கேரளம் .

அது நிகழ இன்னும் சில காலம் இருக்கிறது. அதுவரை வருடத்திற்கு இருமுறையாவது கேரளாவிற்கு சென்று வருவது என் வழக்கம். இம்முறை நாங்கள் சென்றது காசர்கோடு. கடந்த நான்கு வருடங்களாக இந்த காசர்கோடு என்ற வார்த்தையை குறைந்தபட்சம் 200 முறைகளுக்கு மேல் வாசித்தும் கேட்டும் வந்திருக்கிறேன்.

உடன் வந்த ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்று இருந்தது காசர்கோடில் பார்க்க. இந்த சாமிமயில், சாமியானை போல சாமி முதலை என ஒன்று ஒரு கோவிலில் இருக்கிறதாமே அங்கு இப்படி ஒருவர்.. மணிரத்தினம் இயக்கிய பம்பாய் படத்தின் உயிரே பாடலில் வரும் பெக்கில் கோட்டையில் நின்று ஒரு போட்டோ எடுத்தே ஆக வேண்டும் என இன்னொருவர்.. எனக்கும் என் தங்கை மோகனாவிற்கும் காசர்கோடு என்றதும் நினைவுக்கு வந்த ஒரே இடம் பிஎஸ்என்எல் அலுவலகம். 

பார்த்தே தீருவது என்று திட்டமிட்டே தான் கிளம்பினோம் இருவரும். காசர்கோடு சென்ற முதல் நாள் காலையிலேயே விலாசம் விசாரித்து பழைய பஸ் ஸ்டாண்டில் உள்ள பிஎஸ்என்எல் அலுவலகம் சென்றோம் நானும் என் தங்கையும். 

ஆர்வமும் ஆனந்தமுமாய் லிப்ட் நோக்கி வேக வேகமாய்  சென்றாள் என் தங்கை.. நீங்கள் என்னமோ உங்கள் சேரில் அமர்ந்து அலுவலக கோப்புகளை சரி பார்த்துக் கொண்டிருப்பதாகவும் தங்களை பார்த்து பேசியே தீர்வதாகவும் ஒரு பரபரப்பு ..

மேலே சென்று யாரிடம் என்ன கேட்பது என்றே தெரியாமல் லிப்ட் அருகிலேயே நின்று ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக் கொண்டோம்..

இது சரியாக வராது என்று மீண்டும் வெளியே வந்து வாசலில் அமர்ந்திருந்த மூவரிடம் உங்கள் இளம் வயது புகைப்படத்தை காட்டி விசாரித்தோம். 

இவர் புகழ்பெற்ற எழுத்தாளர் ஜெயமோகன், இப்போது நாகர்கோவில் வசித்து வருகிறார். பல வருடங்களுக்கு முன்பு இங்கு பணிபுரிந்தார் என்றும்,அவர் வேலை பார்த்த அலுவலகத்தை பார்த்து செல்லலாம் என்று சென்னையில் இருந்து வந்திருக்கிறோம் என்றும் கூறினோம். 

வினோதமான ஏதோ ஒன்றை பார்ப்பது போல எங்களை பார்த்துவிட்டு தெரியவில்லை என்றனர்.

ஒருவர் மட்டும் உள்ளே சென்று ஒருவரை அழைத்து வந்தார். அவரும் புகைப்படத்தை பார்த்து விட்டு உதட்டை பிதுக்கினார் ..
சரி கிளம்பலாம் என்றபோது ஒருவர். உள்ளே நுழைந்தார் அவரிடம் விசாரியுங்கள் என்றார் மூவரில் ஒருவர் .
அவர் பெயர் பென்னி. அவர் உங்கள் புகைப்படத்தை பார்த்ததும் "ஓர்மைண்டே"என்று கூறினார் .

சில நிமிடங்கள் அவரிடம் பேசிவிட்டு கிளம்பினோம்.


பார்வதிபுரம் இல்லம்...

என் வாழ்நாளில் இதுவரை நான் யாரையும் இப்படி தேடிப்போய் பார்த்ததில்லை. இரண்டு வருடங்களுக்கு முன் அஜிதன் திருமணத்திற்கு ஒரு வாரம் முன்பு உங்கள் வீட்டிற்கு வந்திருந்தேன். 

பூட்டி இருந்த கேட்டின் முன்பு நின்று வாசலில் கிடந்த இரண்டு நாள் நாளிதழையும், பொன்னான பொலிந்த அந்த மஞ்சள் நிற மலருடனும் ஒரு புகைப்படம் எடுத்துக் கொண்டு கிளம்பி விட்டேன். அன்று ஏற்பட்ட ஒரு மனநிறைவு ,மகிழ்வு மீண்டும் அதே நிறைவு அன்று காசர்கோடில்..

இரண்டு நாட்களும் நீங்கள் வாழ்ந்த "அந்த ஊரில் நான்" என்ற மகிழ்வோடு .

-- நிர்மலா, குன்றத்தூர்





சிறுகதை முதல் நாவல் வரை: சுனில் கிருஷ்ணன் பகிர்ந்த சிந்தனைகள்

கதை என்பது என்ன?: ஒரு இலக்கிய சந்திப்பின் சுவடுகள்

ஒரு உணவக உரிமையாளர் தன்னுடைய கடைக்கு Seven Bells என்று பெயரிட்டு, வாசலில் 6 மணிகளை தொங்க விட்டிருந்தார். தவறு கண்டுபிடிப்பதில் ஆர்வமாக உள்ள மக்கள், உள்ளே வரும் போது, அவர்களை வாடிக்கையாளர்களாக்கி வெற்றி பெற்ற Seven Bells (ஏழு மணிகள்) என்ற கதையை சுனில் கிருஷ்ணன் முதலில் கூறினார்.


இந்த நிகழ்வுக்கான போஸ்டரில் இருந்த தேதி குளறுபடியால், இன்னும் அதிக பேருக்கு சென்றடைந்திருக்கும் என்பதை இந்த கதையுடன் இணைத்து வேடிக்கையாக அமர்வை தொடங்கினார்.

நந்தி கூடுகை மஹேந்திரன், சுனில் அவர்களை பற்றிய அறிமுகம் கொடுத்தார். ஆயுர்வேத மருத்துவர், எழுத்தாளர் மற்றும் காந்திய வாதி என்ற அவரின் மூன்று முகங்களை பற்றி விரிவாக கூறினார்.

அதன் பின் சுனில் கிருஷ்ணன் அவர்களின் அமர்வு தொடங்கியது.

சிறுகதை வாசிக்கும் போது கவனத்தில் கொள்ள வேண்டியவை எவை?
  1. யார் கதைசொல்லி?
கதை யார் பார்வையில் இருந்து கூறப்படுகிறது.
  1. தலைப்பு
ஆசிரியரின் நோக்கம் (Author's Intent) தலைப்பில் இருப்பதால், அதை கவனிக்க வேண்டியது அவசியம். கதையை புரிந்து கொள்ள Hint ம் இருக்கும். உதாரணமாக நமக்கு நன்கு தெரிந்த முயல் - ஆமை ஓட்ட போட்டி கதைக்கு 'வெற்றி/ தோல்வி / களிப்பு ' என்று வெவ்வேறு தலைப்பிற்கு ஏற்ற வாறு கதையை புரிந்து கொள்வது மாறுபடும்.
  1. உரையாடல்
யுவன் அவர்களின் கதைகளில் உள்ள உரையாடல்கள் தனித்தன்மை கொண்டவை. ஜெ வின் ஆனையில்லா தொகுப்பில் உள்ள வட்டார வழக்கு.
  1. வாசக இடைவெளி
கதையில் வாசகன் இட்டு நிரப்ப இயல்பான இடைவெளி இருக்கும். நேர்மையாக(sincere) வாசிப்பது போதுமானது. நமக்கு கிடைப்பதை வைத்து புரிதலை மேம்படுத்தி கொள்ளலாம்.
  1. விவரணை
வளவளவென்று இல்லாமல், புற விவரணை அகத்தில் நடப்பதற்கான குறியீடாக இருக்க வேண்டும். உதாரணமாக Raymond Carver எழுதிய A Small, Good Thing கதையில், மருத்துவமனையின் விவரணை அந்த சிறுவனின் நிலையை காட்டுவதாக, வாசகனை பதட்டம் அடைய செய்வதாக உள்ளது.
  1. சொற்சிக்கனம்
ஒரு கதையில் ஒரு வரியை எடுத்தால் கூட கதை மாற கூடிய அளவு சொற்சிக்கனம். கதை எப்போது சிறுகதையாக மாறும்?
  1. முடிவில் இருந்து தொடங்கும். உதாரணமாக குருதிசோறு, வண்ணம்.
  2. அளவில் சிறிய கதை . குறுங்கதைக்கும் குறுநாவலுக்கும் இடைப்பட்ட அளவில் இருக்கும். விதிவிலக்காக வண்ணநிலவனின் மிருகம், பாம்பும் பிடாரனும், Alessandro Baricco வின் பட்டு போன்ற கதைகள் அளவில் சிறிதாக இருந்தாலும் சிறந்த சிறுகதைகள்.
  3. ஒரே காலகட்டம் விதிவிலக்காக குருதிசோறு, 1971 போன்ற கதைகள்.
  4. ஒரே குரலில் இருப்பது. விதிவிலக்கு ராமேஷ் பிரேதன் கதைகள்.
முக்கியமாக கவனிக்க வேண்டியது இவ்வனைத்து விதிகளையும் உடைத்து போட ஒரு சிறந்த கலைஞரால் முடியும்.

புதுமைப்பித்தன், ப. சிங்காரம், பிரமிள் போன்றவர்கள். அதனால் முன்முடிவுகள் இல்லாமல் ஒரு படைப்பை அணுகுவது அவசியம்.


நாவலுக்கும் சிறுகதைக்கும் உள்ள வேறுபாடு என்ன?

சிறுகதையில் ஒரு மையக்கேள்வி இருக்கும். நாவலில் ஒரு மையக்கேள்வியும், பல துணை கேள்விகளும் இருக்கும். (காவிய முகாமில் கோபாலகிருஷ்ணன் அவர்களின் ஆய்வும் புனைவும் அமர்வின் கேள்வி பதிலில் ஜெ இதை கூறினார். ஒரு vision இல் இருந்து தான் நாவல் தொடங்கும். அதன் பேசு பொருளுக்கு ஏற்றவாறு அது சரித்திர நாவலாகவோ, அல்லது அறிவியல் புனைவாகவோ அல்லது வேறு genre ஆகலாம்.)

மேலும் நாவலின் நாயகன் 'காலம்' . உதாரணமாக விஷ்ணுபுரம் நாவல். சிறுகதை வாசிக்கும் போது அதன் மையக் கேள்வியை கண்டு கொள்ள வேண்டும். அதன் பின் அதன் அழகியலை ரசிக்கலாம்.

முற்போக்கு அழகியலில் மையம் மனிதனாக உள்ளது. அவனை பின்னோக்கி இழுக்கும் சக்தி என்ன? எல்லா கதைகளும் மனிதனின் அடிப்படை பிரச்சினைகளை பற்றி பேசுகிறது. 'Men at Work' பதாகை போல இலக்கியவாதிகள் வழி காட்டுவார்கள். அதன் கருத்தை நாம் எடுப்பது தேவையில்லை.

உதாரணமாக வண்ணம் கதையில், அரசன் குடிகளை மதிக்க வேண்டும் என்று எடுக்க தேவையில்லை. அது அனைவருக்கும் தெரிந்த விஷயம். கருத்தை தாண்டி , எவ்வாறு அந்த பிரச்சினை கூறப்பட்டுள்ளது என்பதை கவனிக்க வேண்டும். சிறுகதையை அதன் செய்தியை கொண்டே மதிப்பிட வேண்டும்.

ஒரே தருணத்தை குறுங்கதை, அதை விரித்து சிறுகதை, இன்னும் விரித்து நாவல் என்று உருவாக்க முடியும்.

அதன் பின் கேள்விகளுக்கு பதிலளிக்கப்பட்டது. நன்றியுரையுடன் அமர்வு முடிந்தது. வாசிப்பை எவ்வாறு அணுக வேண்டும் என்ற தெளிவான பார்வையை கொடுத்த சுனில் கிருஷ்ணன் அவர்களுக்கு நன்றி.

-- ராஜேஸ்வரி, கோவை

அணங்கின் மொழி

முது நாவல்

முது நாவல் எனக்கு பிடித்த சிறுகதைத் தொகுப்பு. புனைவு களியாட்டுக் கதைகள் நூறையும் தினம் ஒன்றாக வாசிக்கும் போது, எனக்கு பிடித்த கதைகளை பட்டியல...

தங்க விதைகள்