மரங்களின் தரிசனம் - பகுதி 3
ஆலமர பிரமாண்டம்
பிறகு, ஓசூருக்கு அருகிலுள்ள பிதிரெட்டி என்ற ஊரில் பழமையான மிகப்பெரிய ஆலமரம் இருப்பதை அறிந்து அதைக் காணச்சென்றபோது ஏக்கர் கணக்கில் விரிந்து பரந்து கிளை விட்டு விஷ்வரூபமெடுத்து நின்ற அதன் பிரமாண்டம் எனக்கு பிரம்ம தரிசனமாக இருந்தது...
அதன் விஸ்தீரனம் ஏனோ என்னை உலுக்கிக்கொண்டே இருந்தது. அப்போது தான் தோன்றியது அந்த ஓங்கி நிற்கும் பிரமத்தின் சாட்சியாக கொண்டு தான் அதனடியில் நம் முன்னோர்கள் கிராம நீதிமன்றங்களை நடத்திவந்தார்களோ என்று. பெரும்பாலும் எனக்குள் ஒரு அபூர்வத்தை தரிசித்துக் கொள்வது வழக்கம். அதாவது மனதில் கேள்விகள் எழுந்தால் மட்டும் போதும் விடைகள் தேடிவந்து அதுவே அதன் தரிசனத்தைத் தந்துவிடும். ஏதாவது புத்தகத்தைப் புரட்டும்போதோ அல்லது தொலைக்காட்சி பார்க்கும்போதோ...
இல்லையென்றால் எவரோ போகிற போக்கில் பேசிவிட்டு செல்லும் வார்த்தைகளிலிருந்து கூட என் விடைகளை எங்கோ தொட்டு எடுத்துக்கொள்ளும் வாய்ப்புகள் எனக்கு அமைந்துவிடும். பலருக்கும் இந்த அனுபவம் நிகழ்ந்திருக்கலாம்.
அப்படித்தான் அந்த வினா எழுந்த பிறகு, ஆலமரத்தடியில் பஞ்சாயத்துக்கள் நடக்கும்போது அந்த பஞ்சாயத்து தீரும் என்ற அந்த ஆழமான நம் முதுமக்களின் நம்பிக்கையும் என்னை வந்தடைந்தது.
அது ஏன்? என்றபோதுதான் அந்த மரத்திற்கு அப்படியோரு ஆன்ம வலிமை இருக்கிறது. அதனடியில் எல்லோரும் அதற்குக் கட்டுபட்டவர்களாகத்தான் அமரமுடியும் என்றனர்.
அது நம் மனக்கொந்தளிப்பை அடக்கி சாந்தப்படுத்தி ஒத்திசைவான மனப்போக்கை அளிக்கவல்லது. எனவே அதனடியில் நடக்கும் பஞ்சாயத்துகள் தீரும் என்றனர்.
பலருக்கு இது மூடநம்பிக்கையாகத் தோன்றலாம். ஆனால் எனக்கு அது பெரிய கண் திறப்பாக அமைந்தது. ஆத்மபலம் என்ற சொல் அன்றிலிருந்து எனக்குள் ஒளியாக அமர்ந்துகொண்டது. அவதார் பட பிணைவை அப்படியே அனுபவிக்க முடிந்தது அன்று.
அவர்கள் நம்பிக்கையின் மொழி வேறாக இருக்கலாம் ஆனால் தரிசனம் ஒன்று தான். அன்றிலிருந்து தீவிரமாகவே மரங்கள் பற்றிய தேடுதலை ஒருபக்கம் அரூபமாக நிகழ்த்திகொண்டே இருந்தேன்.
மருத மரம் மருத்துவம் அதன் காரணமாக மருதமர நிழல் இதயத்திற்கு பலம் அளிப்பதென்றும் அது இதயத்தில் இருக்கும் துளையைக் கூட அடைக்க வல்லது என்றும் கேள்விப்பட்டேன். ஆனால் ஆதாரம் இல்லையென்றே எண்ணியிருந்தேன்.
அப்போது தான் என் தோழி ஒருவரின் சிற்றன்னையை பல வருடங்கள் முன்பு கிருஷ்ணகிரியில் சென்று சந்தித்தது நினைவிலெழுந்தது.
மிக இளம் பருவத்திலேயே அவருக்கு இதயத்தில் ஓட்டை இருந்ததால், மருத்துவம் கூட பலனளிக்காது என்ற நிலையில், எப்போது வேண்டுமானாலும் மரணத்தை எதிர்கொள்ள நேரலாம், என்ற சுற்றத்தாரின் புரிதலின் வழியே, நாற்பது வருடங்களைக் கடந்துவிட்டிருந்தார் அவர்.
சமீபத்தில் ஐம்பது வயதைத்தாண்டி விட்ட நிலையில் வேறு உடலுபாதை காரணமாக ஆய்வு செய்தபோது இதயத்தின் பழுதுகள் சரியாகி நல்ல நிலையில் இருப்பதாக கூறியிருக்கின்றனர்.
துளை முற்றிலும் மூடியிருப்பதாக மருத்துவ அறிக்கை வந்தது. இதை அறிந்த போது எனக்கு அவர்வீட்டு கொல்லைப்புறம் இருந்த ஒரு பிரமாண்டமான மருதமரம் தான் நினைவில் எழுந்தது.
ஏனெனில் நான் அவரை சந்திக்கும் போது அந்த மருதமரத்தின் வேரில் தான் அவர் அமர்ந்திருந்தார். என் தோழி அதைப்பற்றிக் கூறியதாவது...
அந்த மருதமரம் அவர் கூடவே வளர்ந்து வந்ததென்றும், அவர் வாய்பேச இயலாதவர் என்பதால் அது மட்டும் தான் அவருக்கு மிக அணுக்கமாக இருக்கிறது என்றும், தூங்கும் நேரம் போக அனேக நேரங்களில் அதன் நிழலில் மட்டும் தான் அவரைக் காணமுடியுமென்ற ஒரு முன் வரலாறு. அது எனக்கு மிக உகந்ததாக இருந்தது.
--- தொடரும்
விஜயலக்ஷ்மி, வேதாரண்யம்.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக