என் கோலங்கள் வளர்ந்த கதை....

 என் கோலங்கள் வளர்ந்த கதை....

"தற்செயலான  பழக்கம் சில நேரங்களில் அதன் தீவிரத்தை நோக்கி நகர்த்தப்படுகிறது". 

அப்படி எனக்கு ஒரு பழக்கமிருந்தது.

கவிஞர் தேவதேவன் ஐயாவுடன் அலைபேசியில் அடிக்கடி பேசும் வாய்ப்பு எனக்கு அமைந்திருந்த சமயம் என்ன செய்து கொண்டிருக்கிறாய் என அவர்  கேட்டபோது,  என் நேரத்தை எப்போதும்  விரயமாகாமல் தவிர்க்க ஒரு பழக்கம் வைத்திருப்பதை அவருக்கு வெளிப்படுத்தினேன்.

அதாவது நான் அலைபேசியில் பிறரிடம் பேசிக் கொண்டிருக்கையில் மற்றொரு கையால் கை போன போக்கில் ஏதேனும் வரைந்து கொண்டிருப்பது எனது வழக்கம். அந்த சமயத்தில் வட்ட வட்டமான கோலங்களாக வரைந்து கொண்டிருந்தேன். அதை ஐயாவுக்கு அனுப்பி வைத்தேன்.


கலைகளை குதூகலத்துடன் ரசிக்கும் குழந்தை மனது கொண்ட மகாகவிஞர் அவரென்பதால் உடனே தன் ஆர்வத்தை வியப்பாக வெளிப்படுத்தினார். இந்த கோலங்களில் ஒரு ஒழுங்கை நான் காண்கிறேன். அது உன் மனதில் ஏதோ ஒரு ஒத்திசைவை வெளிப்படுத்துகிறது. எனக்கு அதை இயற்கையோடு இணைத்துக் கொள்ள முடிகிறது.  அவை மிகுந்த சுவாரசியத்தை அளிக்கிறது. இப்படி நீ எனக்கு ஆயிரம் கோலங்களை வரைந்து கொடு. அவற்றை நான் ஆராய்ச்சிக்கு உட்படுத்த வேண்டும் என்று என்னை அறிவுறுத்தினார்.

அதன்படி 1000 கோலங்களை ஐந்து புத்தகங்களாக பிரித்து வெளியிட திட்டமிட்டோம்.

அதுவரை என் விளையாட்டுக்களில் ஒன்றாக இருந்த இந்த பழக்கம் அன்றிலிருந்து ஒரு தீவிரத்தை தொட்டது. பின் அதிதீவிரமடைந்து மூன்று மாத காலங்களில் அலைபேசியின் நேரங்கள் விதைக்கப்பட்டு என் முதல் புத்தகத்திற்கான விளை பொருளை ஈட்டித் தந்தது. 


என் இளமைக் காலம் முதலே  சங்கடமான நேரங்களின்போது ஏதேனும் வரைந்து தள்ளுவது எனது வழக்கமாக இருந்தது. அப்படி 15 ஆண்டுகளுக்கு முன் வரைந்த சில வடிவமைப்புகளை அப்பாவுக்கு அனுப்பி வைத்தேன்.

 அதிலும் ஆயிரம் என அடுத்த இலக்கையும் கொடுத்து உன் நேரத்தை உனக்கு விரயமாகாமல் விதைக்க தெரிகிறது, தொடர்ந்து அதையே செய் என கட்டளையிட்டதோடு இதை கலை எனவும் அங்கீகரித்தார். 

அதன்படி  இன்று திரும்பிப் பார்க்கையில் ஒரு விளையாட்டு தீவிரமான கலையாக உருவேற்றம் அடைந்த பயணத்தைக் காண முடிகிறது. 

 
 
ஒரு கலை...

அங்கீகரிக்க சில மனங்களும் பழக்கப்பட்ட சில கைகளும் இருந்தால்  எதிர்பாராதபடி எங்கிருந்தோ ஏதோ ஒரு தருணத்தில் தன்னை எப்படியோ இங்கு நிகழ்த்திக்  கொள்கிறது.

 இங்கு இது மதிப்பிற்குரிய பெருங்கவிஞர் தேவ தேவன் ஐயாவால் முற்றிலும் தன்னை நிகழ்த்திக் கொண்டது. எனவே பெரும்  கவிஞர் தேவதேவன் ஐயா அவர்களுக்கு இக்கலையை சமர்ப்பிக்கிறேன்.

 இத்தருணத்தில் மதிப்பிற்குரிய எந்தை 

உயர்திரு ஜெயமோகன் அவர்களின் பாதம் பணிந்து வணங்கிக் கொள்கிறேன்.

நன்றி...

-- விஜயலக்ஷ்மி, வேதாரண்யம்

விஜயலக்ஷ்மியின் கோலங்கள் பற்றி கவிஞர் தேவதேவன் அவர்கள் குறிப்பிட்ட பகுதி.








கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அணங்கின் மொழி

முது நாவல்

முது நாவல் எனக்கு பிடித்த சிறுகதைத் தொகுப்பு. புனைவு களியாட்டுக் கதைகள் நூறையும் தினம் ஒன்றாக வாசிக்கும் போது, எனக்கு பிடித்த கதைகளை பட்டியல...

தங்க விதைகள்