மரங்களின் தரிசனம் - பகுதி 5
மன மகிழ்ச்சிக்கு மகிழ மரம்
மகிழ மரமும் அப்படியே...
மகிழ்ச்சியை அளிக்கும் வல்லமையும் நல்ல தூக்கத்தை அளிக்கும் திறனும் அதன் பூக்களுக்கு உண்டு எனவும், மூளையின் செரோடொனின் ஹார்மோன் சுரப்புக்கு இதில் மருந்து தயாரிக்கப்படுவதாகவும் கூறுகிறார்கள்.
செரோடோனின் மகிழ்ச்சி ஹார்மோன் என்பதும் அதன் சுரப்பு தடை பட்டால் மனச்சோர்வு வரும் என்பதையும் அறிய முடிகிறது.
ஆணுக்கு காதல் தோல்வி ஏற்படும் போது இந்த சுரப்பி தன் வேலையை நிறுத்தி ஆணை பழிவாங்கி விடுவதாகவும் ஒரு செய்தி உள்ளது.
இந்த மகிழம் மலர்களின் மணம் உண்மையில் நம்மை வசீகரிக்கக் கூடியது என்பது என் அனுபவ உண்மை. அவை கிடைக்கும் காலங்கள் முழுவதும் தவறாமல் என் படுக்கையில் அவற்றை சேகரித்து வைத்துக் கொள்வது என் வழக்கம்.
அதன் பழங்களின் சுவையிலும் வண்ணத்திலும் ஆரோக்கிய மேன்மைக்கான பைட்டோ நீயூட்ரியன்ஸ் உள்ளது. எனக்கு மிகவிருப்பமான பழங்களில் ஒன்று இது.
நான் தோழமை கொண்ட மரங்கள்
ஓசூரில் அழகாக நீலமென பூத்துக்குளுங்கும் ஜகரண்டா என்ற மரம், தன் இலைகள் மொத்தத்தையும் உதிர்த்து விட்டு, முழுவதுமே பூக்களால் நிரம்பி ததும்பி நிற்பதை காணும் போதெல்லாம், மனதோடு நுட்பமாக சினேகமென ஒரு உணர்வும், நிறைவும் பிரமிப்புமென பகிரமுடியாதது ஏதோ என்னுள் நிகழும்.
எனவே சிறிது நேரம் அதனடியில் அந்த அனுபவத்தை நீட்டிக்கொள்ள இளைப்பாரி செல்வது என் வழக்கம். சில நாட்களில் அதன் அடியில் வரும் போது அம் மரம் சிலிர்த்து பூச்சொறிவதைக் காணமுடிந்தது.
அது தற்செயலாகவும் காற்று கடந்து செல்வதால் அப்படி உதிர்கிறது எனவும் எண்ணிக்கொண்டேன். மிக விரைவிலேயே அது தொடர்செயலாக தெரிந்தது,
அப்போது தான், நம்மை மகிழ்வோடு வரவேற்கவும் நம்முடன் தொடர்புகொள்ளவும் அனேக மரங்கள் அப்படி செயல்படுமென்பது தெரியவந்தது. அது உண்மையாகவும் இருக்கலாம்.
உதாரணமாக...
தொட்டாற் சுருங்கி இலைகளை அப்படி தொட்டுப்பாருங்கள் ...முதல் தொடுகையில் ,அதன் தொடுபகுதியில் உள்ள இலைத்தொகுப்பு மட்டுமே கூம்பும். அடுத்த தொடுகையில், காம்போடு அதன் இணைப்புவரை ஒடிந்து தொங்குவது போல் தலை கவிழ்த்துக்கொள்ளும்.
அடுத்தடுத்த தொடுகையில், மொத்த கொப்பும் கூம்பி முடிவில் மொத்த தொகுதியும் சுருட்டிக்கொண்டு, முட்களை மட்டும் வெளிக்காட்டி கோபங்கொண்டு, ஆயுதமேந்தி தாக்கத்துணிந்து நிற்பதாகத் தோன்றும்.
அதுவே வீட்டில் வளர்க்கும் தொட்டாற் சுருங்கிகள், நம்மை அடையாளம் கண்டுகொண்டு, தொடும்போது கூம்பாமல் இயல்பாக இருக்கும். அயலவர் தொட்டால் உடனே சுருண்டுகொள்ளும்.
இவையெல்லாம் அறிந்த பின்புதான் நினைவிலெழுந்தது முன் நாட்களில் என் சினேகத்துக்குரிய சரக்கொன்றை மரமும் பலமுறை அப்படி சிலிர்த்து பூச்சொறிந்தது.
அப்படி எனக்கொரு நெல்லி மரத்தோடும் ஒரு சினேகமுண்டு,
மாலை வீடு திரும்பியதும் அம்மரத்தடி சென்று அதைக் கட்டி தழுவி சுற்றி வருவேன். அது சிலிர்த்து நெல்லிக்கனிகளை எனக்காக உதிர்க்கும்.
பல மரங்கள் மழைநீரை அப்படி சிலிர்த்து நம்மேல் உதிர்த்துவிடும். அப்போது அது ஸன்னத தாண்டவங்களில் ஒன்றை நிகழ்த்தியது போல ஒரு உணர்வெழுச்சி பளிச்சென்று நம்மில் கடந்து செல்லும். இந்த அனுபவம் பலருக்கும் நிகழ்ந்திருக்கலாம்.
என் அன்னைகளான மா மரமும், கொய்யா மரமும் எப்போதும் அப்படி ஒளித்து வைத்த ரகசியக் கனிகளை எனக்கு மட்டுமேயாக உதிர்த்து தருவார்கள்.
உனக்கு மட்டும் கனிகள் எப்படி கிடைத்தது என பலர் கேட்டு ஆச்சர்யப்படுவார்கள்.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக