தேநீர் ஆறிக் குளிர்ந்து விட்டது

கவிஞர்:  ஸஷி டம்பாரே

மொழிபெயர்ப்பு: ஆர். தீபா



தேநீர் ஆறிக் குளிர்ந்து விட்டது


அவன் தேநீர் கோப்பையோடு நட்பின் கரம் நீட்டியபடி, சொன்னான். 

பிரண்ட்ஸ்?!

அவள் படபடத்து திகைத்தபடி, திருமணமாகிவிட்டது, குழந்தைகள் வளர்ந்து விட்டார்கள்.

நன்றாக போய்க் கொண்டிருக்கிறது என்றாள்.


அவன் சிரித்துக் கொண்டே சொன்னான்.

அடி தோழி, நட்பு கேட்கிறேன் நான்!

அவள் மேலும் இவ்வாறு சொன்னாள்.,

எனக்கு இதெல்லாம் பிடிக்கவில்லை.

இம்மாதிரியான விஷயங்களுக்கெல்லாம் 

என்னிடம் கொஞ்சம் கூட நேரமே இல்லை! 


அவன் மீண்டும் சிரித்தபடியே,

சொன்னான்.

அடி,

நான் நட்பைத் தானே கேட்கிறேன்.


அவள்,ஆம்!

அது,... அதேதான்.!

இங்கு எல்லோரின் கண்களும் அடுத்தவர் மீது,

ஊர் வம்பு, பஞ்சாயத்து,

வெறும் பேச்சு.

எல்லோருக்கும் இவைகளில் ஆர்வம் இருந்து கொண்டே இருக்கும். 


எனக்கு பதவி உயர்வு வரும் நிலையில் உள்ளது.

சிறிய சிறிய விஷயங்களில் கூட வீணான கலவரமே வரக்கூடும்!


 

அவன் திரும்பவும் வயிறு குலுங்க சிரித்துக் கொண்டே சொன்னான்.

இதற்காக மட்டும் தான் உன்னிடம்  நட்பை கேட்கிறேன்.


இவ்வளவு பேசும்போதே,

அவள் மூச்சிரைத்தாள்.

தேநீர் ஆறிக் குளிர்ந்து விட்டது. 

ஆனால், கண்களில் சூடான நீர்.


உண்மையில் இத்தனை வருடங்களில்,

அவளிடம் இது போல் யாரும் கேட்டதே இல்லை!


அவன் அமைதியாக, பையிலிருந்து கைக்குட்டையை எடுத்தான்.

சகஜமாக, அவள் முன்  நீட்டினான்.

இப்போது அவள் இன்னும் அதிகமாக,

விக்கி விக்கி உடைந்து அழுதாள்.

மனம் நிறைவுற நிம்மதியாக கண்ணீர் விழிகளில்  ஓரங்களில் வழிந்து ஓய்ந்தது.


இம்முறை அவன் சிரிக்கவில்லை!

மாறாக, பார்த்துச் சொன்னான்.

இதற்காகத்தான் நான் உன்னிடம் அன்பான நட்பை கேட்கிறேன் !

கூந்தல் - கூந்தல் கதை வாசிப்பு அனுபவம்


கூந்தல்...

வேர்கள் மரம் அறியும்... மலர்கள் வேர் அறிவதில்லை போலும்...

கனவின் திரைகளை திறந்துகொண்டு வருபவர் யாரென்று அறியாத ஒரு கனவு இது. 

காலத்தில் எங்கிருந்தோ தட்டப்படும் ஓசைகேட்டு திறக்கப்பட்ட கதவு போல...

மனதில் உள்ளிருந்து பாதாளத்து தெய்வங்கள் என எழுந்து வரும் 

அறியாத பந்தங்கள் 

தன்னை அறிவிக்க எங்கும் காத்து நிற்கின்றதோ ...


ஆன்மா...

அது திறக்கும் வாயில்கள் எங்கும் உள்ளனவோ... 

அல்லது, அதற்கு ஏது வாயில்கள்

சுதந்திரம் மட்டும்தானே அதன் ஊர்தி...

எங்கும் நிறைந்திருந்தும் தொட்டெழுப்பும் தருணத்திற்காக காத்து உறைந்து படிந்துவிட்ட இருப்பா அது...

எதுவாக இருப்பினும்...

ஒரு தொடுகைக்காக அது ஏங்குகிறது...


எத்தனை சாபங்களால் கட்டப்பட்டாலும் அகலிகைகள் எழுந்து வந்து கொண்டே தான் இருக்கிறார்கள்.

தெய்வங்களை தொட்டெழுப்புபவர்கள் மாமனிதர்கள்.  நம் ஆசிரியர் தொட்டெழுப்பிய தெய்வங்களுள் ஒன்று இங்கே நீண்ட உறக்கத்திலிருந்து எழுந்து வந்து பேசுகிறது. 

இத்தனை நாள் இத்தொடுகைக்காக எங்கோ கண்ணுக்கு எட்டாத காலத்திலிருந்து தவமிருந்திருக்கிறது. 


நீலா...

ஜெ வின் கைப்பிடித்து எழுந்து வந்த ஒரு ஆன்மா.

இங்கே அந்த தெய்வத்தை எழுப்பும் நம் ஆசிரியர் அவளாகவே ஆகிவிட்ட குரலோடு அவளை மெல்லத் தொட்டு மீட்கின்றார்....

அவளின் ஆழத்திற்குள் சென்று அவளையே அகழ்ந்தெடுக்கிறார். அவள் ஆன்மாவை கைப்பிடித்து அழைத்து வருகிறார்.


அவள் உடல் ஒரு வீடு...

நுழைவாயில் ஒரு நீலா ...

பின் வாசல் இன்னொரு நீலா... 

அது வேறொரு காலம்... 

அதையும் கடந்துவிட்டால் 

வெட்ட வெளி...

யாதுமாகி சங்கமிக்கும் பிரபஞ்ச ரகசியம் நிறைந்த வெளி அது... 


அங்கு கூந்தல் விரித்தாடி அநீதியை எரித்த கண்ணகியும் அவளே... 

கூந்தலை ரத்தம் கொண்டு கழுவி அறம் நிறுவிய பாஞ்சாலியும் அவளே...

கூந்தலே துணையாகி தன் ராஜகுமாரனை அடைந்த ராஜகுமாரியும் அவளே... 

கூந்தல் கூடாகி உறங்கி எழும் பட்டாம்பூச்சியும் அவளே...

கூந்தலை வலையாக்கி மையம் கொண்டு அமர்ந்த சிலந்தியும் அவளே...

கூந்தலே விழுதுகளாக ஊன்றி வேராக்கி ஆலமரமாய் எழுந்ததும் அவளே... 

கூந்தல் கொடியாய் விரவி யாவற்றிலும் படர்ந்து பேரியற்கையின் ஒற்றைப் பெரும் இருப்பெனவாகி நிறைந்தவளும் அவளே.


கூந்தல் கைகளாகி படர்ந்து ...

கூந்தலை விழுதாக்கி ஊன்றி... 

கூந்தலை வலையாக்கி இறை உண்டு... 

கூந்தலை சிறகாக்கி  பறந்து... 

கூந்தலின் பலம் கொண்டு இணை தேடி...

கூந்தலை குறியிடாக்கி பழி தீர்த்து எழுந்து...

கூந்தலை கோபமாக்கி தலைவிரித்து ஆடி...

கூந்தலே சிறையாகி பித்துக்கொண்டு  உரைந்து... 

கூந்தலை துறந்து விடுதலை என ஒளி கொண்டாள்.


மெய்ஞானத்தின் பாதையில் எத்தனை படிக்கட்டுகள் இவை.

ஒரு பாதி ஸ்தூலமாகவும்

மறுபாதி சூக்குமமாகவும்  பொருந்தாத விரிசல் கொண்டு 

பூரணத்தை ஞானம் என தேடிக்கொண்டே இருக்கும் 

பிறவி ஒழிக்க முடியாத நீலா க்கள் நாம் அல்லவா...


விஜயலக்ஷ்மி, வேதாரண்யம்

நெய்கார ஆச்சி - பழைய நினைவுகளில்

 நெய்கார ஆச்சி - பழைய நினைவுகளில்


எமமோவ் நெய் வாங்காலியோ, இந்த அழைப்பு தான் அந்த ஆச்சியின் குரல். வீட்டில் எங்க இருந்தாலும் ஓடி வந்துடுவேன் அவளை பார்ப்பதற்கு. எனக்கு முன்னாடி பயங்கர குஷி ஆகி அங்கேயும் இங்கேயும் வால ஆட்டிக்கிட்டு முன்னையும் பின்னையும் ஓடிக்கிட்டு திரியும் எங்க வீட்டு குட்டி பிசாசு ஜாக்கி. 

நல்ல பெரிய உருவம். குண்டு ஆச்சி என்று சொல்ல முடியாது. ஆனால் நல்ல பெரிய உருவம், எங்க ஊர்ல ஒரு சொல் உண்டு,, வளர்த்தியும் சதையும் ஒன்னும் போல் இருப்பா என்று ஒரு சிலரை பார்த்து சொல்வதுண்டு. 
அப்படி ஒன்னும் போல் உள்ள வடிவும் அந்த ஆச்சிக்கு.

நல்ல கருப்பு. அழகு கருப்பு அவள் தேகம். உரசி மை தீட்டி கொள்ளும் கருப்பு. கோயில் சிலைலாம் வழு வழு என்று எண்ணெய் தடவி வச்ச மாதிரி அவ உடம்பு முழுக்க வழு வழுன்னு தான் இருக்கும். சின்ன புள்ளைல நான் நினைச்சுப்பேன் உடம்புக்கு என்னை தடவிட்டு இவ வருவாளோன்னு. 

எங்க அம்மா நெய் தூக்கு ல வாங்குவா. எப்போதும் கேக்குற அளவு விட ஒரு சின்ன உலக்கு, எனக்கு தெரிஞ்சு அது 25 மில்லி உலக்கு அதிகமாக தான் தருவா அந்த ஆச்சி. 

அதுபோக அவளையே கண்ணிமைக்காமல் பார்த்து கொண்டு இருக்கும் எனக்கும் கையில் ஊத்தி சும்மா நக்கிக்கோ அப்படின்னு கொடுப்பா. 

கடைசியா இன்னொரு 25 மில்லி ஜாக்கி கிண்ணத்துக்கு. அதுக்கு தான் அவள் வந்ததும் துள்ளிக்கிட்டு கிடப்பான். ஆனால் கடைசில அவன் கிண்ணத்துக்கு ஊத்துர வரைக்கும் என்ன மாதிரியே அவள் கருப்பு தேகத்தை கண்கொட்டாமல் பாத்து சமத்தா உக்காந்திருப்பான். அவ நெய் ஊத்துனதும் லபக் லபக் என்று ஒரு சத்தத்தோடு உறிஞ்சி நாக்கை நல்ல சுழற்றிட்டு அவள் கால் கீழ படுத்துக்குவான். 

நான் என் கையில் இருக்கும் நெய்ய முழுசா நக்கிட்டு அவ கருப்பு தேகத்தையே பாத்துட்டு இருப்பேன். 

ரொம்ப பேச்சே கிடையாது அவளிடம். இழுத்து இழுத்து பேசுவா ஆச்சி. அவிய வீட்டில் இல்லையா அப்டின்னு கேப்பா. அந்த அவிய எங்க அப்பா. பெரும்பாலும் சனிக்கிழமை வருவதால் அப்பா எங்கன்னு கேப்பா.. ஒரு நாளும் அதிகமான, 75 மில்லிக்கு காசு கிடையாது. 

நான் படிப்புக்காக வெளி ஊருக்கு வந்த பிறகு கூட அவ தான் நெய் சப்ளை வீட்டுக்கு. நான் லீவுக்கு போகும் போது வந்தால் அப்பவும் எனக்கு நக்க குடுப்பா. ஜாக்கி அப்போது இல்லை. அவள் கை வேகமாக அதுக்காகவும் இன்னொரு உலக்கு நெய் எடுக்கும். 

அப்புறம் நான் இல்லாத நாள்களில் என்னை விசாரித்ததாக அம்மா சொல்லி இருக்கா. 

பல காலம் போய்விட்டது. நாங்கள் அந்த ஊரில் இல்லை. இப்பொழுது இருப்பாளோ இல்லையோ. கண்டிப்பா இருக்க மாட்டாள். 

ஆனால் அந்த இழுத்து இழுத்து பேசுற சத்தமும், அவளின் கருப்பு தேகமும், அந்த நெய்யின் சுவையும் என் காதுகளிலும் கண்ணிலும் வாயிலும் இருந்து கொண்டே இருக்கிறது.

அன்புடன்
ஈஸ்வரி 

எனை ஆட்கொண்ட பிரம்மம் - 6

மரங்களின் தரிசனம் - பகுதி 6

மரங்களின் ஆரா

சமீபத்தில் சென்னை செல்ல மதியம் உச்சி வேளையில் ரயில் நிலையத்தில் காத்திருந்தேன். நிலையத்தின் நீண்ட நெடிய கூரையின் கீழ் அனலின் தாக்கம் தாங்கமுடியாமல் தகித்துக்கொண்டிருந்தது. 

மின் விசிறியின் காற்று வேகத்தை மீறி வியர்வையும் பொங்கி வழிந்தபடியே இருந்தது. ஆனால் மொட்டை வெயிலில், தனியாக நின்ற புங்கை மரத்தின் நிழலில், சில ஆடுகளும் நாய்களும் சுகமாக அயர்ந்து உறங்கிக்கொண்டிருந்தன. 

நானும்  அந்த நிழலுக்கு இடம்பெயர்ந்தேன். ஆச்சர்யமாக  அந்த உச்சி வெயில் தாண்டி அங்கு  திகழ்ந்த குளுமையை ... சட்டென்று  கிடைத்த பரவசத்தை...

என்னால் நம்பவே முடியவில்லை. அவ்வளவு இதம்..., அவ்வளவு சுகம்..., அந்நிழலில்.

மேலும், என்னென்னவோ,... மொழியில் வரைய இயலாதவை அவை...

அந்த சிலமணி நேரங்களில் ஒரு முழு வாழ்க்கையையும் வாழ்ந்து முடித்துவிட்டேன்.

அந்த வாழ்வுக்காக முன் வருபவர்களுக்கு மட்டுமேயாக அருளப்படும் வரம் அது.


அதைப்போல புத்திர சஞ்சீவி என்று ஒரு மரம் இருக்கிறது. அது தோட்டத்தில் இருந்தால் கோழி, காகம் நாய் பூனை ஆடு மாடு என அனைத்தும் அதன் நிழலுக்காக போட்டியிடுவதையும்,  அந்நிழலை  சுகமாக அனுபவித்து மகிழ்வதையும் அம்மரம் வளர்க்கும் பலர் பகிர்ந்துள்ளனர்.

விஷக்கடிக்கு ஆளானோரை வேப்ப மரத்தடி யில் அமர்த்துவதை நானே அனுபவத்தில் கண்டிருக்கிறேன்.

எனவே மரங்களின் ஆராவைப் பற்றி , அதாவது அதன் ஆற்றல் புலம் பற்றி அறிந்துகொள்ளவும் பகிர்ந்துகொள்ளவும் இங்கு துணிகிறேன்.

காரணம் நான் இயற்கைக்கு மிக அருகில் இருக்கிறேன். அது என்ன கொடுக்கிறது என்பதை அறிந்து அனுபவித்துக் கொண்டுமிருக்கிறேன். ஆதி மனிதன் இயற்கைக்கு உள்ளேயே இருந்தான் இவை அவன் குரல்...

இயற்கைக்கு வெளியில் வெகுதொலைவிலிருந்து ஒலிக்கும் இன்றைய குரலைவிட என் உள்ளிருந்து  தெளிவாக என்னால் அவனை கேட்க முடிகிறது. 

கிராமத்தில் வளரும் நாய்க்கும் பூனைக்கும், தன் உடல் கேட்டை கண்டடைந்து எந்தெந்த மூலிகைகளை சாப்பிட்டால், தன் நோயை  சரிசெய்து கொள்ள முடியுமென்ற அறிவு, அதன் பிறப்பிலிருந்தே தொடரும்போது, மனிதன் அதைவிட மேம்பட்ட இயற்கைப் புலனறிவையும், நுண்ணறிவையும் கொண்டே பிறந்திருக்க வேண்டும் என்பது என் நம்பிக்கை.

மேலும் வண்டலூரில் வசித்தபோது, என் பக்கத்துவீட்டு அறிவியல் வல்லுநர் நாய்க்கு முகக்கூடு அணிவித்து நடை கூட்டிச்சென்றார். காரணம் கேட்டபோது, அதற்கு உடல் நலமில்லை, வெளியில் வந்தால் கண்ட செடிகளை சாப்பிடுகிறது. அதைத்தடுக்க மருத்துவரின் அறிவுரை படியே இந்த பாதுகாப்பு ஏற்பாடு என்றார். 

எனக்குள்...

மூதாதையான குரங்கு மனிதனின் உயரத்தை, இன்றைய கலாச்சார மனிதனின் தலைக்குமேல், வான்வெளியில்  வாமனனின் ஒரு பாதமாக மட்டுமே காண முடிகிறது.

இன்றைய அறிவு வளர்ச்சிகள், எனக்கு வெறும் பௌதீகமாகத் தெரிகின்றன. இயற்கையோடு இணைதலையே நான் ஆன்மீகமாகப் பார்க்கிறேன்.

இயற்கையை அணுக அணுக அது கடல் போல் விரிந்து கொண்டே செல்கிறது. இங்கிருந்து அறியும் யாவற்றையும் அதில் கழுவி சுத்தம் செய்த பின்பே அவற்றை எனதாக்கிக் கொள்ள விழைகிறேன்.

இப்படியாக மரங்களும், அதன் கதைகளும், காரணங்களுமாக, நீண்ட அறிதல் பயணத்தை தொடங்க விரும்புவோருக்காக, ஒவ்வொரு மரங்களையும், அறிமுகம் செய்வதோடு, அதன் நிழலாகவும், நிஜமாகவும் இருக்கும் அனுபவங்களோடு, ஒரு புத்தகத்தை கால பயணத்தின் காலடியில் வைக்கும், சிறு  முயற்சியை முன்னெடுத்திருக்கிறேன்.

திருடன் திருட்டுக்கான வாய்ப்புகளை மட்டுமே  தரிசித்துக் கொண்டிருப்பவன். அவனின் தரிசன மேன்மையே சிறந்த திருடனை உருவாக்குகிறது. 

ஒரு டீக்கடையில் புதிதாக அறிமுகம் செய்துகொண்ட இரு திருடர்கள், அடுத்த ஒரு மணிநேரத்தில், கூட்டாக ஒரு வங்கியில் நான்கு கோடிகளை  வெற்றிகரமாக கொள்ளையடித்து விட்டனர், என்ற உண்மைச் செய்தி எனக்கு மேலுமொரு தரிசனக் கதவை திறந்துகாட்டியது.

ஒத்த தரிசனபோக்கு உள்ளவர்கள், எளிதாக தம் இனம் கண்டுகொள்வர் என்ற உறுதியை அது அளித்தது. இது அப்படி இணங்குபவர்களுக்கானது மட்டுமே. 

"தரிசனங்கள் எங்குமுள்ளன. அது திறக்கும் கணமும் நம்தரிசன கணமும் ஒரே நேரத்தில் நிகழ்ந்தால்  அது நம்முடைய தரிசனமாகிறது", என்ற ஜெ வின்  தத்துவ தரிசனத்தை முன்னிறுத்தி இந்த அறிமுகக் கட்டுரையில்  என் இயற்கை வழி தரிசனங்களை  முன்வைத்துள்ளேன்.

நன்றி.

விஜயலட்சுமி,

வேதாரண்யம்.







எனை ஆட்கொண்ட பிரம்மம் - 5

மரங்களின் தரிசனம் - பகுதி 5

மன மகிழ்ச்சிக்கு மகிழ மரம்

மகிழ மரமும் அப்படியே...

மகிழ்ச்சியை அளிக்கும் வல்லமையும் நல்ல தூக்கத்தை அளிக்கும் திறனும் அதன் பூக்களுக்கு உண்டு எனவும்,  மூளையின் செரோடொனின் ஹார்மோன் சுரப்புக்கு இதில் மருந்து தயாரிக்கப்படுவதாகவும் கூறுகிறார்கள்.

 செரோடோனின்  மகிழ்ச்சி ஹார்மோன் என்பதும் அதன் சுரப்பு தடை பட்டால் மனச்சோர்வு வரும் என்பதையும் அறிய முடிகிறது. 

ஆணுக்கு காதல் தோல்வி ஏற்படும் போது இந்த சுரப்பி தன் வேலையை நிறுத்தி ஆணை பழிவாங்கி விடுவதாகவும் ஒரு செய்தி உள்ளது. 

இந்த மகிழம் மலர்களின் மணம் உண்மையில் நம்மை வசீகரிக்கக் கூடியது என்பது என் அனுபவ உண்மை. அவை கிடைக்கும் காலங்கள் முழுவதும் தவறாமல் என் படுக்கையில் அவற்றை சேகரித்து வைத்துக் கொள்வது என் வழக்கம். 

அதன் பழங்களின் சுவையிலும் வண்ணத்திலும் ஆரோக்கிய மேன்மைக்கான பைட்டோ நீயூட்ரியன்ஸ் உள்ளது. எனக்கு மிகவிருப்பமான பழங்களில் ஒன்று இது. 

நான் தோழமை கொண்ட மரங்கள்

ஓசூரில்  அழகாக நீலமென பூத்துக்குளுங்கும் ஜகரண்டா என்ற மரம், தன் இலைகள் மொத்தத்தையும் உதிர்த்து விட்டு, முழுவதுமே பூக்களால் நிரம்பி ததும்பி நிற்பதை காணும் போதெல்லாம், மனதோடு நுட்பமாக சினேகமென ஒரு உணர்வும், நிறைவும் பிரமிப்புமென பகிரமுடியாதது ஏதோ என்னுள் நிகழும். 

எனவே சிறிது நேரம் அதனடியில் அந்த அனுபவத்தை நீட்டிக்கொள்ள இளைப்பாரி செல்வது என் வழக்கம். சில நாட்களில் அதன் அடியில் வரும் போது  அம் மரம் சிலிர்த்து பூச்சொறிவதைக் காணமுடிந்தது. 

அது தற்செயலாகவும் காற்று கடந்து செல்வதால் அப்படி உதிர்கிறது எனவும் எண்ணிக்கொண்டேன். மிக விரைவிலேயே அது தொடர்செயலாக தெரிந்தது, 

அப்போது தான்,  நம்மை மகிழ்வோடு வரவேற்கவும் நம்முடன் தொடர்புகொள்ளவும் அனேக மரங்கள் அப்படி செயல்படுமென்பது தெரியவந்தது. அது உண்மையாகவும் இருக்கலாம்.

உதாரணமாக...

தொட்டாற் சுருங்கி இலைகளை அப்படி தொட்டுப்பாருங்கள் ...முதல் தொடுகையில் ,அதன் தொடுபகுதியில் உள்ள இலைத்தொகுப்பு மட்டுமே கூம்பும். அடுத்த தொடுகையில், காம்போடு அதன் இணைப்புவரை ஒடிந்து தொங்குவது போல் தலை கவிழ்த்துக்கொள்ளும். 

அடுத்தடுத்த தொடுகையில், மொத்த கொப்பும் கூம்பி முடிவில் மொத்த தொகுதியும் சுருட்டிக்கொண்டு, முட்களை மட்டும் வெளிக்காட்டி கோபங்கொண்டு, ஆயுதமேந்தி தாக்கத்துணிந்து நிற்பதாகத் தோன்றும். 

அதுவே வீட்டில் வளர்க்கும் தொட்டாற் சுருங்கிகள், நம்மை அடையாளம் கண்டுகொண்டு, தொடும்போது கூம்பாமல் இயல்பாக இருக்கும். அயலவர் தொட்டால் உடனே சுருண்டுகொள்ளும்.

இவையெல்லாம் அறிந்த பின்புதான் நினைவிலெழுந்தது முன் நாட்களில் என் சினேகத்துக்குரிய சரக்கொன்றை மரமும் பலமுறை அப்படி சிலிர்த்து பூச்சொறிந்தது. 

அப்படி எனக்கொரு நெல்லி மரத்தோடும் ஒரு சினேகமுண்டு, 

மாலை வீடு திரும்பியதும் அம்மரத்தடி சென்று அதைக் கட்டி தழுவி சுற்றி வருவேன். அது சிலிர்த்து நெல்லிக்கனிகளை எனக்காக உதிர்க்கும்.

பல மரங்கள் மழைநீரை அப்படி சிலிர்த்து நம்மேல் உதிர்த்துவிடும். அப்போது அது ஸன்னத தாண்டவங்களில் ஒன்றை நிகழ்த்தியது போல  ஒரு உணர்வெழுச்சி பளிச்சென்று நம்மில் கடந்து செல்லும். இந்த அனுபவம் பலருக்கும் நிகழ்ந்திருக்கலாம்.

என் அன்னைகளான மா மரமும், கொய்யா மரமும்  எப்போதும் அப்படி ஒளித்து வைத்த ரகசியக் கனிகளை எனக்கு மட்டுமேயாக உதிர்த்து தருவார்கள்.

உனக்கு மட்டும் கனிகள் எப்படி கிடைத்தது என பலர் கேட்டு ஆச்சர்யப்படுவார்கள்.

--- தொடரும்
விஜயலக்ஷ்மி, வேதாரண்யம்.

எனை ஆட்கொண்ட பிரம்மம் - 4

மரங்களின் தரிசனம் - பகுதி 4

அறிவு தரும் புன்னை மரம்

அது அப்படியிருக்க புன்னை மரத்தை  அறிவு தரு என்று அழைப்பார்கள் எனவும் அதன்  பூமணம் மூளையின் நினைவாற்றலை அதிகப்படித்துவதோடு, நியூரான்ஸ் உற்பத்தியையும் தூண்டுகிறது  எனவும் அறிந்தேன். உடனே எனக்கு நினைவில் எழுந்தது...

என் பதினெட்டு வருட கிராம வாழ்க்கையில் ஒவ்வொரு சரஸ்வதி பூஜையையும் புன்னைப் பூக்களால் அலங்கரித்து கொண்டாடிய நிகழ்வுகள். 

ஒருவேளை குறியீட்டு ரீதியில் தான் கல்விக் கடவுளுக்கு அப்பூவை சூடும் வழக்கம் என்றோ காணா தொல் மூதாதையிடமிருந்து எழுந்து பண்பட்டு வந்திருக்குமோ!. 

ஜோதிடமும் மரங்களும்

அதன் தொடர்ச்சியில் மற்றுமொரு நினைவும் எழுந்தது, ஆயில்ய நட்சத்திரத்துக்கு புன்னை மரத்தை வணங்க வேண்டுமென்ற ஒரு நம்பிக்கை அது. 

அம்மரத்தை பதற்றம் வரும் நேரங்களில் கட்டி அனைத்துக் கொண்டால் படபடப்பு நீங்கி மன அமைதி கிடைக்குமென்பதும் ஒரு கூற்று. பிறகு அறிந்தேன் ஜோதிடர்கள் ஆயில்ய நட்சத்திரத்துக்கு அகக்கொந்தளிப்பு அதிகம் என்று வரையறை அளித்திருப்பதை.  

அப்போது தான் நினைவு வந்தது அஸ்வினி நட்சத்திரத்துக்கு எட்டி மர நிழல் பாதுகாப்பானது என்ற முன்னோர்சொல். ஆனால் இவற்றை நம்பாமல் போக நமக்கு முழு உரிமையும் இருந்தாலும் வெறும் மூடநம்பிக்கை என்று சாதாரணமாக கடந்து செல்லவும் இயலவில்லை. 

ஏனெனில் சித்த மருத்துவம் எட்டிமரத்தை வாத பிரச்சினைகளுக்கு மருந்துவ பயன்பாட்டில் வைத்திருந்தது. அஸ்வினி நட்சத்திரத்திற்கு வாத சரீரம் என்ற வரையறையும் முன்னோர் வகுத்து வைத்திருக்கின்றனர். இங்கிருந்து அங்கு கூட்டி அங்கிருந்து இங்கு கழித்து கணக்கை நேர்செய்யவே மனம் தூண்டுகிறது. 

இவற்றை வெறும் நம்பிக்கையாகப் பார்ப்பதைவிட ஆதி குரல் என்பதால் எதையும் அலட்சியம் செய்யாமல் ஆராய்ந்தறிய முயற்சி செய்கிறேன்.

மனவலிமை தரும் அசோக மரம்

அதேபோல் அசோக மரத்திற்கு சீத்தா அசோகம்  என்ற பெயர் இருப்பதாகவும், 

அ  'சோகம்'  என்றால் சோகத்தை வென்று மகிழ்வை அளிக்கக் கூடிய வல்லமை அம்மரத்திற்கு இருப்பதாகவும், சீதையை இராவணன் சிறை வைத்திருந்தது அசோக வனத்தில் என்பதால், சீதா மிகுந்த நம்பிக்கையோடும் மன வலிமையோடும் இருந்ததற்கு, இம்மரமும்  காரணம் என்றும் ஒரு கதை சொல்லப்படுகிறது.

அணுகிப்பார்த்தால் அசோக மரம் பெண்களுக்கான கருப்பை  பிரச்சினைகளைத் தீர்க்கும் சம்பூரண மூலிகை என்பது தெரிகிறது. சம்பூரண மூலிகை என்றாலே வேர்முதல் விதைவரை அனைத்து பாகங்களும் மருந்து என்று பொருள். 

பெண்ணை மரத்தோடு பிணைத்து அதன்  மருத்துவ முக்கியத்துவத்தை தலைமுறைகளில் கடத்தி செல்வதற்காக சீதை மேல் ஏற்றிவிட்ட கதையாகவும் இருக்கலாம். 

ஆனாலும் ஆண் பெண் இருவருக்குமே மலட்டுத்தன்மையை தீர்க்கும் மருத்துவ பயனாக நெடுங்காலமாக அசோக மரம் இருந்து வருகிறது என்பதையும் நினைவில்கொள்ள வேண்டியுள்ளது.

--- தொடரும்

விஜயலக்ஷ்மி, வேதாரண்யம்.

எனை ஆட்கொண்ட பிரம்மம் - 3

மரங்களின் தரிசனம் - பகுதி 3

ஆலமர பிரமாண்டம்

பிறகு, ஓசூருக்கு அருகிலுள்ள பிதிரெட்டி என்ற ஊரில் பழமையான மிகப்பெரிய ஆலமரம் இருப்பதை அறிந்து அதைக் காணச்சென்றபோது ஏக்கர் கணக்கில் விரிந்து பரந்து கிளை விட்டு விஷ்வரூபமெடுத்து நின்ற அதன் பிரமாண்டம் எனக்கு பிரம்ம தரிசனமாக இருந்தது...

அதன் விஸ்தீரனம் ஏனோ என்னை உலுக்கிக்கொண்டே இருந்தது. அப்போது தான் தோன்றியது அந்த ஓங்கி நிற்கும் பிரமத்தின் சாட்சியாக கொண்டு தான் அதனடியில் நம் முன்னோர்கள் கிராம நீதிமன்றங்களை நடத்திவந்தார்களோ என்று. பெரும்பாலும் எனக்குள் ஒரு அபூர்வத்தை தரிசித்துக் கொள்வது வழக்கம். அதாவது மனதில் கேள்விகள் எழுந்தால் மட்டும் போதும் விடைகள் தேடிவந்து அதுவே அதன் தரிசனத்தைத் தந்துவிடும். ஏதாவது புத்தகத்தைப் புரட்டும்போதோ அல்லது தொலைக்காட்சி பார்க்கும்போதோ...

இல்லையென்றால் எவரோ போகிற போக்கில் பேசிவிட்டு செல்லும் வார்த்தைகளிலிருந்து கூட என் விடைகளை எங்கோ தொட்டு எடுத்துக்கொள்ளும் வாய்ப்புகள் எனக்கு அமைந்துவிடும். பலருக்கும் இந்த அனுபவம் நிகழ்ந்திருக்கலாம்.


அப்படித்தான் அந்த வினா எழுந்த பிறகு, ஆலமரத்தடியில் பஞ்சாயத்துக்கள் நடக்கும்போது அந்த பஞ்சாயத்து தீரும் என்ற அந்த ஆழமான நம் முதுமக்களின் நம்பிக்கையும் என்னை வந்தடைந்தது.

அது ஏன்? என்றபோதுதான் அந்த மரத்திற்கு அப்படியோரு ஆன்ம வலிமை இருக்கிறது. அதனடியில் எல்லோரும் அதற்குக் கட்டுபட்டவர்களாகத்தான் அமரமுடியும் என்றனர்.

அது நம் மனக்கொந்தளிப்பை அடக்கி சாந்தப்படுத்தி ஒத்திசைவான மனப்போக்கை அளிக்கவல்லது. எனவே அதனடியில் நடக்கும் பஞ்சாயத்துகள் தீரும் என்றனர்.

பலருக்கு இது மூடநம்பிக்கையாகத் தோன்றலாம். ஆனால் எனக்கு அது பெரிய கண் திறப்பாக அமைந்தது. ஆத்மபலம் என்ற சொல் அன்றிலிருந்து எனக்குள் ஒளியாக அமர்ந்துகொண்டது. அவதார் பட பிணைவை அப்படியே அனுபவிக்க முடிந்தது அன்று.

அவர்கள் நம்பிக்கையின் மொழி வேறாக இருக்கலாம் ஆனால் தரிசனம் ஒன்று தான். அன்றிலிருந்து தீவிரமாகவே மரங்கள் பற்றிய தேடுதலை ஒருபக்கம் அரூபமாக நிகழ்த்திகொண்டே இருந்தேன்.

மருத மரம் மருத்துவம் அதன் காரணமாக மருதமர நிழல் இதயத்திற்கு பலம் அளிப்பதென்றும் அது இதயத்தில் இருக்கும் துளையைக் கூட அடைக்க வல்லது என்றும் கேள்விப்பட்டேன். ஆனால் ஆதாரம் இல்லையென்றே எண்ணியிருந்தேன்.

அப்போது தான் என் தோழி ஒருவரின் சிற்றன்னையை பல வருடங்கள் முன்பு கிருஷ்ணகிரியில் சென்று சந்தித்தது நினைவிலெழுந்தது.

மிக இளம் பருவத்திலேயே அவருக்கு இதயத்தில் ஓட்டை இருந்ததால், மருத்துவம் கூட பலனளிக்காது என்ற நிலையில், எப்போது வேண்டுமானாலும் மரணத்தை எதிர்கொள்ள நேரலாம், என்ற சுற்றத்தாரின் புரிதலின் வழியே, நாற்பது வருடங்களைக் கடந்துவிட்டிருந்தார் அவர்.

சமீபத்தில் ஐம்பது வயதைத்தாண்டி விட்ட நிலையில் வேறு உடலுபாதை காரணமாக ஆய்வு செய்தபோது இதயத்தின் பழுதுகள் சரியாகி நல்ல நிலையில் இருப்பதாக கூறியிருக்கின்றனர்.

துளை முற்றிலும் மூடியிருப்பதாக மருத்துவ அறிக்கை வந்தது. இதை அறிந்த போது எனக்கு அவர்வீட்டு கொல்லைப்புறம் இருந்த ஒரு பிரமாண்டமான மருதமரம் தான் நினைவில் எழுந்தது.

ஏனெனில் நான் அவரை சந்திக்கும் போது அந்த மருதமரத்தின் வேரில் தான் அவர் அமர்ந்திருந்தார். என் தோழி அதைப்பற்றிக் கூறியதாவது...

அந்த மருதமரம் அவர் கூடவே வளர்ந்து வந்ததென்றும், அவர் வாய்பேச இயலாதவர் என்பதால் அது மட்டும் தான் அவருக்கு மிக அணுக்கமாக இருக்கிறது என்றும், தூங்கும் நேரம் போக அனேக நேரங்களில் அதன் நிழலில் மட்டும் தான் அவரைக் காணமுடியுமென்ற ஒரு முன் வரலாறு. அது எனக்கு மிக உகந்ததாக இருந்தது.

--- தொடரும்

விஜயலக்ஷ்மி, வேதாரண்யம்.

அணங்கின் மொழி

முது நாவல்

முது நாவல் எனக்கு பிடித்த சிறுகதைத் தொகுப்பு. புனைவு களியாட்டுக் கதைகள் நூறையும் தினம் ஒன்றாக வாசிக்கும் போது, எனக்கு பிடித்த கதைகளை பட்டியல...

தங்க விதைகள்