சொல்லாததின் சக்தி: சிறுகதை பற்றிய ஒரு உரையாடல்

கதை, வடிவு, அழகியல்: ஒரு இலக்கிய உரையின் சுருக்கம்

இன்று எழுத்தாளரும், காந்தியவாதியுமான ஆயுர்வேத மருத்துவர் சுனில் கிருஷ்ணன், சிறுகதைகள் பற்றி அருமையாக உரை ஆற்றினார்.

நிகழ்வு அறிமுகம்

இணையவெளியில் நடைபெற்ற இந்த சந்திப்பில், 40 பேருக்கும் மேல் பங்கேற்றனர். படித்துக் கொண்டு வர வேண்டிய கதைகளின் பட்டியலை ஏற்கனவே கொடுத்து விட்டார்கள்.

நிகழ்வின் சில முக்கியமான கருத்துக்களை தொகுத்து இருக்கிறேன்.

சிறுகதையின் வகைகள்

  • சில சிறுகதைகள், முடிவில் ஒரு பெரிய திறப்பு வைத்து இருக்கும். Eg: வண்ணம், குருதிச்சோறு.
  • சில கதைகள் ஒரு எண்ணப்பதிவு (Stream of consiousness )ஆக மட்டுமே இருக்கும்.

ஒரு சிறுகதையை படிக்கும் பொழுதும், மதிப்பிடும் பொழுதும் முக்கியமாக கவனத்தில் கொள்ள வேண்டிய சில விஷயங்கள்:

தலைப்பின் முக்கியத்துவம்

சிறுகதையின் தலைப்பு பாதி கதை சொல்லி விடும்.

புதுமைப்பித்தனின் "சாபவிமோசனம்" சிறுகதைக்கு "கல்" என்று பெயர் வைத்து இருந்தால் அதன் தன்மையே மாறி விடும்.

ஜெயமோகனின் "வண்ணம்" சிறுகதைக்கு "பட்டாம்பூச்சி" என்று பெயர் வைத்து இருந்தால், கதையின் purpose சரியாக வெளிப்பட்டு இருக்காது.

நரேஷன் மற்றும் மொழிநடை

இரண்டாவதாக, தன்னிலை/ படர்க்கை மிகவும் முக்கியம். கதை பொருள் சார்ந்து தன்னிலை உபயோகிக்க வேண்டுமா? படர்க்கை உபயோகிக்க வேண்டுமா என்று எழுத்தாளர் முடிவு செய்வதில் தான் அவருடைய திறமை இருக்கிறது.

அதேபோல உரையாடலில், பேசு மொழியும் மிக முக்கியம். வட்டார வழக்கு, கதை மாந்தரின் குணத்தை குறிக்கும் மொழி நடை எல்லாம் முக்கியம்.

இவை சரியாக அமையாவிட்டால் கதை நமக்கு அந்நியமாக தோன்றும்.

அகத்தை பிரதிபலிக்கும் புற வர்ணனைகள்

கதையில் வரும் இட வர்ணனைகள், அளவுக்கு அதிகமாக செல்ல கூடாது. கதை மாந்தரின் அகத்தை காட்டுவதாக புற சூழல் வர்ணனைகள் இருக்க வேண்டும்.

மயிலன் ஜி. சின்னப்பாவின் "அன்நோன்" கதையில் அதிகமான புற வர்ணனைகள் தேவை இல்லாமல் வரும். அது அந்த கதையின் மைனஸ் பாயிண்ட்.

கரு அல்ல, சொல்லும் முறை முக்கியம்

சிறுகதை என்ன சொல்ல வருகிறது என்பது முக்கியம் இல்லை. அரசன் நன்றாக ஆட்சி செய்ய வேண்டும் என்பது அனைவருக்கும் தெரியும். "வண்ணம்" கதையின் கருவும் அதுதான். ஆனால்

  • கதை எப்படி சொல்லப்பட்டு இருக்கிறது
  • மனிதனின் அல்லல்களை எவ்வாறு humanize செய்கிறது
  • எவ்வளவு அழகியல்தன்மையோடு இருக்கிறது என்பது முக்கியம்.

அசோகமித்திரன் எழுதிய "கணவன் மகள் மகன்" கதையை எழுத்தாளர் பூமணி எழுதி இருந்தால் எப்படி வன்முறை கலந்து இருக்கும், இமயம் எழுதி இருந்தால் எவ்வளவு உணர்ச்சி கொந்தளிப்பாக, இருக்கும் என்று சுனில் அழகாக விளக்கினார்.

உறவுகளுக்குள் space இருக்க வேண்டும், உறவின் உரிமையால் தலையீடு செய்ய முடியாது, என்பதை அசோகமித்திரன் தன்னுடைய பாணியில், அழகியலோடு சொல்கிறார். அந்த கதை சொல்லப்பட்ட விதம்தான் அதை சிறந்ததாக ஆக்குகிறது.

வாசக இடைவெளி மற்றும் மௌனம்

கதை சொல்லி நினைப்பது அத்தனையையும் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.

கதையில் வாசக இடைவெளி, Pause மிக முக்கியம். ஒரு நல்ல கதையில் சொன்னதை விட சொல்லாமல் விட்டதுதான் வாசகனை அலைக்கழிக்கும், disturb செய்யும். சிந்திக்க தூண்டும்.

--------

பேச்சு சிறுகதையில் இருந்து நாவல், மற்றும் தற்கால Flash Fiction அல்லது குறுங்கதை நோக்கி சென்றது.

குறுங்கதை: ஒரு மின்னல் வெட்டு

குறுங்கதை என்பது ஒரு பிளாஷ் - ஒரு கரு என்று சுனில் விளக்கினார். குறுங்கதை என்பதற்கு உதாரணமாக "லிடியா டேவிஸ்" உடைய ஒரு பத்தியை சுனில் குறிப்பிட்டார்.

“She is bending over her child. She can’t leave her. The
child is laid out in state on a table. She wants to take one more photograph of the child, probably the last. In life, the child would never sit still for a photograph. She says to herself, “I’m going to get the camera,” as if saying to the child, “Don’t move.”

― Lydia Davis, Can't and Won't

ஒரு குழந்தை இறந்து விட்டது. அதை புகைப்படம் எடுக்கிறார்கள். இந்த கருவை வைத்து ஒரு குறுங்கதையை எழுதி இருக்கிறார். எழுத்தாளனின் மனதில் எல்லா கதைகளுமே இப்படி ஒரு மின்னல் வெட்டாகத்தான் தோன்றும்.

தமிழில் பெருந்தேவி, போகன் போன்றவர்கள் இந்த வடிவத்தை முயற்சி செய்கிறார்கள் என்று சொன்னார்.

குருதிச் சோறு - ஒவ்வொருவருடைய சோற்றிலும் யாரோ ஒருவருடைய ரத்தம் இருக்கிறது என்கிற one-line தான் என்னுடைய கதையாக விரிந்தது என்றார்.

சிறுகதை vs நாவல்

இறந்த குழந்தையின் போட்டோ என்கிற one-line ஐ விரிவுபடுத்தி, அது எப்படி இறந்தது, உயிரோடு இருக்கும் பொழுது அது என்ன செய்தது, அதன் தந்தை என்ன செய்தார், குழந்தையின் குடும்பம் பற்றி எல்லாம் எழுதுவது சிறுகதை.

இதையே இன்னும் விரிவு படுத்தி, தாயின் வம்ச கதை, எங்கே, எப்பொழுது, ஏன் என்று கேள்விகளை இன்னும் விரித்து ஒரு நாவலாக எழுதலாம்.

நாவலில் காலம்தான் எப்பொழுதும் அரசன். காலத்தை வைத்துதான் அனைத்து பெரு நாவல்களும் பின்னப்படுகின்றன.

எழுத்தாளனின் நேர்மை மற்றும் craft

ஒரு நாவல் எழுதும்பொழுது எழுத்தாளனின் pretense இல்லாத நேர்மை, அவனுடைய sincerity தான் முக்கியம். வடிவம் சற்று தொய்வாக இருந்தாலும் பரவாயில்லை. Craft improve செய்ய கூடியது.

வடிவ சோதனைகள் மற்றும் விமர்சனம்

பல நல்ல எழுத்தாளர்கள் கதை வடிவத்தில் கோட்டை விடுவார்கள் என்று சுனில் சொன்னார். அதை ஒரு சோதனை முயற்சியாக மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் இது சரியாக வரவில்லை என்று அவரை விமர்சனம் செய்வது சரி இல்லை என்றும் கூறினார்.

மயிலன் ஜி. சின்னப்பாவின் "பிரபாகரனின் போஸ்டமோர்டெம்" நாவல் வடிவ ரீதியாக பல குறைபாடுகள் உடையது. அனால் அந்த நாவலின் sincerity க்காக அது ஒரு நல்ல புதினம் என்று கொள்ள வேண்டும் என்றார்.

சாரு நிவேதிதா தொடர்ந்து தன்னுடைய கதைகளில் தனி மனித சுதந்திரம் என்பது எது வரை சத்தியம் என்று push செய்து பார்க்கிறார். அவருடைய incest சார்ந்த கதைகளை அந்த sincerity க்காக தான் மதிப்பிட வேண்டும் என்றார்.

இரா. முருகன், ரமேஷ் பிரேதன் போன்றவர்களின் கதைகளையும் இதே அளவுகோல் கொண்டுதான் பார்க்க வேண்டும் என்று விளக்கினார்.

பின் நவீனத்துவ அணுகுமுறைகள்

அந்த வகையில் ரமேஷ் ப்ரேதனை போலவே, நாஞ்சில் நாடனும் ஒரு பின் நவீனத்துவ எழுத்தாளர்தான். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவை ஒட்டி அவர் எழுதிய "ஏவல்" சிறுகதை ஒரு அருமையான பின் நவீனத்துவ படைப்பு என்றார்.

வடிவம் vs தத்துவம்: வரலாற்றுப் பார்வை

நல்ல கவிதை, கதைக்கு வடிவம் முக்கியமா என்பது தொன்று தொட்டு நடந்து வரும் விவாதம்தான். பக்தி இலக்கிய பாடல்களுக்கு நிகராக, சித்தர் பாடல்களும் இருந்து இருக்கின்றன.

புதுமைப்பித்தன் எழுதிய கதைகளில் முக்கியமானது, "கபாடபுரம்" மற்றும் "அன்று இரவு." ஆனால் க.நா.சு. போன்ற தேர்ந்த விமர்சகர்கள் அந்த கதைகளை அரைவேக்காடு என்றுதான் நினைத்தார்கள்.

அதன் காரணம், அந்த கதைகள் காலத்தால் முந்தி இருந்தன. அந்த கதைகளை, அதன் வடிவத்தில் வைத்து புரிந்து கொள்ள இன்னும் 50 ஆண்டுகள் ஆகின.

அப்பொழுது இருந்த மணிக்கொடி எழுத்தாளர்களின் மனநிலை, ஓர்மை, மற்றும் யூனிட்டிக்கு அதிக மதிப்பு குடுத்தது. சுதந்திர போராட்ட காலகட்டத்தில் அத்வைதமும், வேதாந்தமும் மக்கள் மேல் செலுத்திய influence அதற்கு ஒரு முக்கிய காரணம்.

ஒரு நேர்த்தியான வடிவம் இல்லாத எதுவும் க.நா.சு. போன்றவர்களுடைய புரிதலுக்கு அப்பாற்பட்டதாக இருந்தது. ப. சிங்காரம் எழுதிய "புயலில் ஒரு தோணி" கதையும் இப்படிப்பட்டதுதான்.

மீறல் ஒரு வடிவம்: பிரமிள் முதல் இன்றுவரை

ஆனால் பின்னர் பிரமிள் என்கிற மகா கவிஞர் madness அல்லது மீறல் என்பதையே ஒரு வடிவம் ஆக்கினார். அப்பொழுது புதுமைப்பித்தன் மீண்டும் resurrect செய்யப்பட்டார். இன்றளவும் கொண்டாடப்படுகிறார்.

ஜெயமோகன், நாஞ்சில் நாடன் போன்ற அடுத்த தலைமுறை எழுத்தாளர்கள் இந்த வடிவம் இல்லாத வடிவத்தை, disruption என்று கொண்டார்கள். அது விஷால் ராஜா வரை தொடர்கிறது.

நவீன தமிழ் சிறுகதையின் பரிணாமம்

இவர்கள் தங்களுடைய பயணங்கள், உலக இலக்கிய exposure இவற்றுடன், அழகியலை கலந்து தரமான நவீன தமிழ் சிறுகதைகளை உருவாக்கினார்கள். Magical relaism , புராணங்களை நவீன புனைவில் பயன்படுத்துவது, எல்லாம் இவர்களுடைய நவீன கதைகளில் இயல்பாக வெளிப்பட்டது.

படிக்கப்பட்ட கதைகளின் கருப்பொருள்

இங்கே கொடுக்கப்பட்டுள்ள "உயிர்த்தாம்பு" கதை கிறிஸ்டியானிடிட்டிக்கு உகந்த "simple man" அல்லது அசடன்/ இடியட் கருத்தாக்கம்தான்.

இயற்கையை, அதன் சட்டதிட்டங்களை கேள்வி கேட்காமல், மாற்ற நினைக்காமல், அதை அப்படியே இறையின் ஆணை என்று ஏற்றுக்கொள்ளும் மனிதனை பிரதிபலிக்கின்றது இந்த கதை.

இன்று படிக்க கொடுக்கப்பட்ட கதைகளில், "சாப விமோசனம்", "வண்ணம்", "வைக்கோல் கிராமம்" மூன்று கதைகளுமே மனிதன் வேறொன்றாக ஆவதை காட்டுகிறது. அவனை அப்படி ஆக்குவது சமூகம் என்றும் காட்டுகிறது.

அறிவியல் புனை கதைகள்: புதிய திசைகள்

இதை தவிர அறிவியல் புனை கதைகள், கிழக்கும், மேற்கும் சந்திக்கும் புள்ளியில் உருவாகும் "பூர்ணம்" போன்ற அறிவியல் சிறுகதைகள் பற்றியும், அவற்றின் தேவை பற்றியும் பேசினார் சுனில். இன்றைய காலை இலக்கியத்துடன் இனிதே ஆரம்பம் ஆனது.

உரையாடலுக்காக படித்த கதைகள்


-- நாக நந்தினி, சேலம்

எந்தையின் சொல் வந்தடைந்தது என்னை...

இன்று பணி நிமித்தம் ஒரு அரசுப் பள்ளித் தலைமை ஆசிரியரிடம் உரையாடிக் கொண்டிருந்தேன். அவரை எனக்கு மூன்று வருடங்களாகத் தெரியும். பணியைத் தாண்டி எதுவும் பெரிதாகப் பேசுபவள் அல்ல நான் என்பதால் யாரும் என்னிடம் பெரிதாக எதுவும் கதைப்பதில்லை.

அன்று யாருடைய வருகைக்கோ அனைவரும் காத்திருந்ததால் அனைவரும் ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டிருந்தோம்.பேச்சு நான் படித்த பள்ளி பக்கம் திரும்பியது. 

நான் படித்த பள்ளியின் பெயரைக் கூறியதும் பெரு மகிழ்ச்சி அடைந்த அவர், "மேடம் நான் அந்த ஸ்கூல்ல தான்  பி.எட்., முடிச்சிட்டு ட்ரைனிங் எடுத்தேன்," என்று மிகவும் மகிழ்ச்சியுடன் கூறினார்.


நான் உடனே ஆச்சரியப்பட்டு, எந்த காலகட்டத்தில் தாங்கள் பயிற்சி பெற்றீர்கள் என்று கேட்டபோது, அவர் சொன்ன காலகட்டம் நான் படித்து முடித்து ஒரு சில ஆண்டுகள் கழிந்ததாக இருந்தது. 

ஆனால் எனது தந்தை அதே பள்ளியில் தான் ஒரு ஆசிரியராக இருந்தார் அவரை உங்களுக்குத் தெரியுமா என்று பெயர் சொல்லி நான் கேட்டேன்.
அப்போது அவர் "எங்க போட்டோ காட்டுங்க நான் தெரியுதான்னு பார்க்கிறேன்," என்றார்.

போட்டோவைப் பார்த்ததும் அவர் துள்ளிக் குதித்து, "மேடம் இவரா உங்க அப்பா? அவர் பொண்ணா நீங்க," என்று நம்ப முடியாமல் கேட்டார்.
தொடர்ந்து "நீங்க இவ்ளோ கண்டிப்போட இருக்கிறதுல எனக்கு இப்ப எந்த ஆச்சர்யமும் இல்ல," என்று கூறினார்.

"ஏன்? என்ன ஆச்சு சார் ? நீங்க ஆங்கிலப் பாடம் தானே பயிற்சி எடுத்தீங்க. எங்க அப்பா அறிவியல்," என்று சொன்னேன்.



"மறக்கவே முடியாத மாதிரி ஒரு கேள்வி கேட்டாரு மேடம்.அதனால அவரை நல்லா ஞாபகம் இருக்குன்னு," சொல்ல, அப்படி என்ன சார் கேட்டாருன்னு கேட்டேன்.

"மேடம் உங்க அப்பா ஒரு புத்தகமோ அல்லது பதிவேடோ சரியா எனக்கு ஞாபகம் இல்ல, ஏதோ ஒண்ணைக் குடுத்து, தலைமை ஆசிரியர் அறையில குடுத்திருங்கன்னு சொன்னாரு. அப்போ நான் வெளில மழை பெஞ்சுட்டு இருக்கு சார் அப்படின்னு சொன்னேன்."

"அப்போ அவருக்கு வந்துது பாருங்க கோவம். சடார்ன்னு நிமிர்ந்து பார்த்து "ஏன் மழை பெய்ஞ்சா கொண்டு போக மாட்டியா ஒரு நாள் மழையில நனைஞ்சா கரைஞ்சிருவியா ?" அப்படின்னு கேட்டாரு." 

"ஆடிப்போய்ட்டேன் நான். அப்புறம் கொண்டு போய் குடுத்துட்டுதான் வந்தேன் அதனால அவரை என்னால மறக்கவே முடியலன்னு," சொன்னாரு. 

"இது நடந்து முப்பது வருஷத்துக்கு மேலதான் இருக்கும்.நீங்க ஏன் இவ்ளோ  கடுமையான ஒரு நேர்மையான ஆளா இருக்கீங்கன்றது எனக்கு இப்ப புரிஞ்சிருச்சு. இது உங்க அப்பா கிட்ட இருந்து தான் உங்களுக்கு வந்து இருக்கு," என்று கூறினார்.

ஒரு 30 வருஷம் கழிச்சு, எங்கப்பாவே இல்லாம போய் கிட்டத்தட்ட 5 ஆண்டுகள் கழித்து அவர் சொன்ன வார்த்தை மட்டும், சொந்த ஊரை விட்டு 400 கிமீ தள்ளி வேற ஒரு ஊர்ல வந்து பணிபுரியற இடத்துல  நம்மள வந்து அடையுதுன்னா இது என்ன மாதிரி டிசைன் இது...

இந்த உலகம் தினமும் நம்மை ஆச்சரியப் படுத்திக்கிட்டேதான் இருக்கு...

-- கல்பனாத்ராய். ஜெ

பிரகிருதி...

 பிரகிருதி...

பிரகிருதி...

துளி மண் 
துளி நீர்
துளி காற்று 
யாவற்றிலும் உயிர்...!
வானத்தின் பிரம்மம்...
நெருப்பின் இருப்பு...

விசும்பின் ஆன்மா 
எல்லா துளிகளையும்
நெய்து கொள்கிறது...

எத்தனை 
கோடி காலமாய்
கல்லுக்குள்
இக்கரு  
உறங்கியிருக்கிறது....

சிற்பியே ...
நீ மட்டும்
எப்படி தரிசித்தாய்
அதில் தெய்வத்தை...
உன்னைத் தொட்டு 
தன்னை எழுப்பிக் கொள்கிறதா...!

-- விஜயலக்ஷ்மி, வேதாரண்யம்


சூது கவ்வும்...

 சூது கவ்வும்...


ஓ...

ஒளியே...

இத்தனை இரக்கமில்லாதவளா  நீ..!


உன் ஒளிவாளால்...

அத்தனை

இருளையும்

வெட்டி சாய்க்கிறாயே...!


உன் கூரம்பு...

எத்தனை

ஆழத்தையும்

துளைத்து செல்கிறதே...


ஒளியின் நாயகனே...

உனக்குப் பயந்தல்லவா 

ஜடங்களின நிழலாக 

ஒளிந்து கொள்கிறது அது...


கடுவெளியில் அதை 

விழுங்கி கொண்டே 

இருப்பதால் தான் 

நீ  இத்தனை பிரகாசிக்கிறாயா...


இருளை  துரத்தி வேரறுக்கும் 

உன் ஆவேசம் தான் 

நித்தமும் இங்கு

அரங்கேறிக் கொண்டிருக்கிறதா...!


இங்கு,

அவையனைத்தையும்

அள்ளி கழுவேற்றுகிறாய்...


பாவப்பட்ட இருள்... 

எத்தனை சூழ்கைக்குப் பின்னும் 

இறுதியில் தோற்று தானே போகிறது....


எப்படி விழுங்கினும்

ஒரு துளி ஒளியும்  

அவிஸ் ஆவதில்லை...


ஆனாலும் இருள் 

அதே உயிர்ப்புடன் அல்லவா 

இருக்கிறது ...


விந்தை...!!!


மரணத்துக்கும் மண்டியிடாத 

மனிதன் போல...

--விஜயலக்ஷ்மி, வேதாரண்யம்

குதிரை மனம்

குதிரை மனம்



முடிச்சுப் போட்டால் மூச்சடைக்கிறது
சற்று விட்டால் குதறிப் பாய்கிறது.
அனைத்துக்கும் ஆதிகாரணம்
முடிச்சுதான்  என்றுணர்ந்தது முதல் 
துயரத்தின் மையப்புள்ளியாக மாறிவிட்டது
அதையொரு துறவியிடம் கொண்டு சென்றேன்
இது என்னுடைய முடிச்சுதான். ஆயினும்
இதைக் கையாள இயலவில்லை
பலவகை முடிச்சுகளைப் பழுது பார்த்து
அனுபவத் திறன்பெற்ற துறவியின் முகத்தில்
அனுபூதிக் கோடுகள்; அவருக்குப் புது அனுபவம்
முன் முடிச்சுகளை இழைபிரிக்காமல் அறிந்தெறியப் பயில்
சாதகம் மூலம் இது கைவரப்பெறும் என்று
மந்திரச் சொற்களால் பின்னப்பட்ட
புதியதொரு முடிச்சை முன்மொழிந்தார்.
என்னை அறியாது அது படர்ந்தேறியது
புதிதாகக் கிடைத்ததும் பழைய முடிச்சுதான்.

--இராபியத்,சென்னை  



நட்பு

நட்பு



ஆயிரம் சொந்தம் பந்தங்கள் 
அதையும் தாண்டி ஒரு ஆழமான 
பந்தம் நட்பு ஒன்றுதான் 
உறவுகள் 
வானுயர மரங்களைப் போன்றது
சூறாவளி காற்று அடித்தால் மரங்கள் சாய்ந்து விடும் 
நட்பு நாணல் போன்றது காற்று மழை எது வந்தாலும் வளைந்து கொடுக்கும். 

--சசிகலா


 

அணங்கின் மொழி

முது நாவல்

முது நாவல் எனக்கு பிடித்த சிறுகதைத் தொகுப்பு. புனைவு களியாட்டுக் கதைகள் நூறையும் தினம் ஒன்றாக வாசிக்கும் போது, எனக்கு பிடித்த கதைகளை பட்டியல...

தங்க விதைகள்