விமானத்தில் ஒரு உப்புமா!

 விமானத்தில் ஒரு உப்புமா!

"முதல் விமானப் பயணம்" என்றாலே பயணித்த ஒவ்வொருவருக்கும் ஒரு மறக்க முடியாத அனுபவம் இருக்கும்.எனக்கும் தான்.சிறு வயதில் வானத்தை அண்ணாந்து பார்த்தபடி, "ஒருநாள் நாமும் அந்த விமானத்தில் பறப்போமா?" என்று எண்ணிய நாட்கள் அந்தக் கணத்தில் நினைவுக்கு வந்தன.

2019-ஆம் ஆண்டு. என் வாழ்க்கையின் முதல் விமானப் பயணம்.

திருவனந்தபுரத்திலிருந்து பெங்களூரு; அங்கிருந்து இணைப்பு விமானத்தில் அகர்தலா.

நாங்கள் ஐந்து பேர் கொண்ட குழுவாகப் பயணம் செய்தோம். ஆனால் உண்மையில் நான் தனியாகத்தான் இருந்தேன். அந்தக் குழுவில் யாரும் எனக்கு முன்பே அறிமுகமானவர்கள் இல்லை. 

அப்போது அது ஒரு சிறிய தனிமையாகத் தோன்றினாலும், பின்னாளில் நினைத்துப் பார்க்கும்போது அந்தத் தனிமையே என்னை தன்னம்பிக்கைக்குப் பழக்கப்படுத்திய முதல் ஆசிரியர் என்பதை உணர்ந்தேன்.

விமான நிலையத்திலேயே முதல் குழப்பம் ஆரம்பமானது.

என்னுடைய பெரிய லக்கேஜை வாங்கிக்கொண்டு,

"இது நேராக அகர்தலாவில்தான் கிடைக்கும்," என்றார்கள்.

"அப்படியா? பெங்களூரில் இறங்கும்போது என் பெட்டி என்ன ஆகும்?" என்று என் மனம் ஆயிரம் கேள்விகள் கேட்டது.

அந்தப் பெட்டிக்குள் என்னுடைய உடைகள், புத்தகங்கள், தேவையான எல்லாப் பொருட்களும் இருந்தன.

'அது தொலைந்துவிட்டால் என்ன செய்வேன்?' என்ற பயம், விமானம் புறப்படும் வரை என்னை விட்டுப் போகவில்லை.

பிறகு விமானத்தில் அமர்ந்தேன். இருக்கையின் பட்டையை அணிந்துகொண்டேன். ஜன்னல் பக்க இருக்கை கிடைத்தது என் அதிர்ஷ்டம்.

விமானம் மெதுவாக ஓடுதளத்தில் நகர ஆரம்பித்தது. சில நொடிகளில் அதன் வேகம் அதிகரித்தது.

அடுத்த கணம்...

பூமி மெதுவாக கீழே இறங்க ஆரம்பித்தது.

வீடுகள் தீப்பெட்டிகளைப் போலவும், சாலைகள் வெள்ளை நூல்களைப் போலவும், மனிதர்கள் எறும்புகளைப் போலவும் மாறிப்போனார்கள்.

அந்த நொடியில் நான் பூமியை விட்டுப் பிரிந்து, வானத்தின் விருந்தாளியாக மாறிவிட்டேன்.

சிறிது நேரத்தில் விமானம் மேகங்களுக்குள் நுழைந்தது. ஜன்னல் வழியாக வெளியே பார்த்தேன். எங்கும் வெண்மையான மேகங்கள். கீழே பூமியே தெரியவில்லை.

அப்போது மனதில் தோன்றியது...

"இன்று நானே ஒரு மேகமாகிப் பறக்கிறேனோ!"

அந்தப் பரவசத்தை வார்த்தைகளால் சொல்ல முடியாது. வானத்தில் போக்குவரத்து நெரிசல் இல்லை. ஹாரன் சத்தம் இல்லை. சிக்னல் இல்லை. சாலைக் குழிகள் இல்லை. புகை இல்லை.

இவ்வளவு அமைதியாகவும், இவ்வளவு சுதந்திரமாகவும் ஒரு பயணம் இருக்க முடியுமா என்று வியந்தேன். சிறுவயதில் வானத்தில் தேவர்கள் வாழ்கிறார்கள் என்று பல கதைகள் கேட்டிருக்கிறோம். ஒரு தேவதையாவது கண்ணில் படுகிறாளா என்று தேடினேன். யாரும் தெரியவில்லை.

பிறகு எனக்கே சிரிப்பு வந்தது."பாராக்குப் பார்க்காத பயணம் என்ன பயணம்?" என்று மனதிற்குள் தோன்றியது. ஆனால் அந்த வெண்மையான மேகங்களே தேவதைகளின் உலகமாகத் தோன்றின.

அந்த மேகக் கடலில் மிதந்தபடி சென்ற அந்த சில நிமிடங்கள், என் வாழ்க்கையின் மறக்க முடியாத தருணங்களாக மாறின.

அந்த விமானத்தில் இன்னொரு விஷயம் என்னை மிகவும் ஆச்சரியப்படுத்தியது. விமானப் பணிப்பெண்கள்.

யாரைப் பார்த்தாலும் ஒரே புன்னகை. யாரிடம் பேசினாலும் அதே மென்மையான குரல். எப்போதும் சிரித்த முகம். அந்த வயதில் நான் நினைத்தது வேறு.

"இவர்கள் எப்படி இவ்வளவு நேரம் சிரித்துக்கொண்டே இருக்கிறார்கள்? சோர்வே வராதா?"

இன்று புரிகிறது. அது அவர்களுடைய தொழில்முறை பண்பு. ஆனால் அப்போது அவர்களைப் பார்த்து ஒரு சிறிய பரிதாபம்கூட ஏற்பட்டது.

"இப்படி எப்போதும் சிரித்துக்கொண்டே இருக்க வேண்டுமா?" என்று மனதில் தோன்றியது.

சிறிது நேரத்தில் உணவு வழங்க ஆரம்பித்தார்கள். எனக்கு ஒரு சிறிய பொட்டலம் கொடுத்தார்கள். அதன் மேல் ஆங்கிலத்தில் ஏதோ எழுதியிருந்தது.

எனக்குப் புரியவில்லை. அந்தப் பணிப்பெண் என்னிடம் ஏதோ கேட்டார்.

முதல் விமானப் பயணத்தின் பதட்டம், ஆங்கிலப் பயம்—எல்லாம் சேர்ந்து அவர் என்ன கேட்டார் என்பதே எனக்குப் புரியவில்லை.

எனக்குத் தெரிந்த ஒரே ஆங்கிலம்...

"No..."

அதைத்தான் சொன்னேன். அவர் சிரித்தபடியே சென்றுவிட்டார்.

நான் அந்தப் பொட்டலத்தைத் திறந்தேன். உள்ளே நல்ல வறுத்த ரவை  இருந்தது.

"விமானத்தில் இப்படித்தான் உப்புமா தருவார்களோ!" என்று நினைத்துக்கொண்டேன்.

ஒரு கரண்டி எடுத்தேன். பொறு... பொறு... மற்றொரு கரண்டி. மொறு... மொறு...வாய் முழுவதும் வறண்ட ரவை.

விழுங்க முடியவில்லை. விக்கல். தண்ணீர் குடித்தேன். மீண்டும் முயன்றேன். மீண்டும் அதே நிலை.

"இந்த விமான உப்புமா இவ்வளவு வறண்டதா?" என்று மனதிற்குள் விமான நிறுவனத்தையே குறை சொல்ல ஆரம்பித்துவிட்டேன்.

அப்போது என் அருகில் இருந்த பயணி அமைதியாக அந்தப் பொட்டலத்தில் வெந்நீரை ஊற்றி, இரண்டு நிமிடம் காத்திருந்து, நன்றாகக் கலந்து சாப்பிட ஆரம்பித்தார்.

அப்போதுதான் உண்மை புரிந்தது. அந்த விமானப் பணிப்பெண் என்னிடம் கேட்டது,

"Hot water?" அல்லது, "வெந்நீர் ஊற்றட்டுமா?" என்பதுதான்!

நானோ ஒன்றும் புரியாமல், "வேண்டாம்" என்று சொல்லிவிட்டு, பச்சை ரவையையே வீரத்துடன் சாப்பிட முயற்சித்துக் கொண்டிருந்தேன்.

அந்த உண்மை தெரிந்தவுடன் எனக்கு இன்று வரை சிரிப்பு வரும்.  குடும்பத்தில் இதைச் சொல்லி சிரித்தபோது எல்லோரும் என்னை கொஞ்ச நாள் உப்புமா என்று கூட கிண்டல் செய்தனர்.

இன்றுவரை அந்த சம்பவம் நினைவுக்கு வந்தாலே சிரிப்பு தானாக வந்துவிடுகிறது.

அன்று நான் விமானத்தில் பறக்க மட்டுமல்ல, வாழ்க்கையிலும் ஒரு சிறிய பாடம் கற்றுக்கொண்டேன்.

புரியாததை மறைத்துக்கொள்வதைவிட, "எனக்குப் புரியவில்லை" என்று கேட்பது எப்போதும் சிறந்தது.

ஒரு சாதாரண ரவை உப்புமா, அந்த நாள் எனக்கு பணிவையும், தயக்கமின்றி கேட்கும் துணிவையும் கற்றுக் கொடுத்த ஆசிரியராகிவிட்டது.

-- ராபியத், சென்னை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அணங்கின் மொழி

முது நாவல்

முது நாவல் எனக்கு பிடித்த சிறுகதைத் தொகுப்பு. புனைவு களியாட்டுக் கதைகள் நூறையும் தினம் ஒன்றாக வாசிக்கும் போது, எனக்கு பிடித்த கதைகளை பட்டியல...

தங்க விதைகள்