எனை ஆட்கொண்ட பிரம்மம் - 2

மரங்களின் தரிசனம் - பகுதி 2

கொன்றை மர பூக்கள்

மீண்டும் மரங்களின் சினேகம் தேடி மனம்  திரும்பியபோது ஒரு சரக்கொன்றை மரம் நினைவின் அடியாழத்திலிருந்து நீந்தி மேலெழுந்து வந்தது.

அந்த கொன்றை மரம் என் பள்ளி செல்லும் பாதையில் ஒற்றைத்தனிமரமாக பூத்துக்குளுங்கி நின்றது.

வெகுதொலைவில் வரும்போதே அது கண்முன் எழுந்துவரத் துவங்கிவிடும். பூக்களால் குளுங்கி ததும்பி  நிற்கும் அது இயல்பாக நம்மை வசீகரித்து சுருட்டி தன் நிழலில் அமர்த்திக்கொள்ளும்.

எப்போதும் அம்மரத்தைக் கட்டியணைத்துக்  கொஞ்சி விளையாடுவது என் வழக்கம். பூக்களால் பொலிந்து நிறைந்து நிற்கும் அந்த காட்சி ஏனோ ஒரு பித்தை உருவாக்கும். 

அந்த இடம் ....

அந்த மரம் ...

வேறு ஒரு உலகுக்குள் இட்டுச்செல்லும்.

அங்கு உதிர்ந்து நிரம்பியிருக்கும் பூக்களோடு  விளையாடி கொத்துக்கொத்தாக குலுங்கி செறிந்திருக்கும் அந்த மலர்களை தொடுபுலனாலும், நுண் புலனாலும் ஒற்றி ஒற்றி  அனுபவித்து அங்கிருந்து மீள குறைந்தது ஒருமணி நேரமாவது ஆகிவிடும். 

கிளம்புபோது அதனைப் பிரிய மனமில்லமல் சில கொத்து மலர்களை கையோடு கொண்டுவந்து கண்ணில் படும்படி என்வீட்டில் தோரணமாக கட்டி ரசித்த படி இருப்பேன்.

இந்நினைவு மீண்டு வந்த அந்நாட்களில் நான் ஓசூரின் நகரவாசியாக இருந்தேன். பின் பயணங்களின் போதெல்லாம் சரக்கொன்றை மரத்தைத் தேடியபடியே  அலைந்து கொண்டிருந்தேன்...

நீண்ட தேடலுக்குப்பிறகு ஓசூரின் புறநகரில் இருந்த என் வீட்டிற்கு வரும் வழியிலேயே ஒரு மரத்தைக் கண்டுகொண்டேன்.

பிறகு எங்கெல்லாம் கொன்றை இருந்தாலும் இயல்பில் மனம் அதை கண்டுகொண்டு சிலிர்ப்பதையும் ஒரு சினேகப்புன்னகை உதிர்ப்பதையும் உணரமுடிந்தது.

அதுநாள் வரையும் கூட அம்மரங்கள் அங்கே தான் இருந்தன. 

ஆனால் அதைகண்டுகொள்ளும் புலன் என்னில் திறந்து கொள்ளவில்லை.

தேடுங்கள் - கண்டடைவீர்கள்

இந்த தரிசனத்தை மற்றுமொரு சம்பவத்தில் பளிச்சிட்ட மின்னலில் கண்டேன்.

என் சொந்த ஊரான வேதாரண்யத்திலிருந்து ஓசூர் அருகில் உள்ள ஜிகினி என்ற ஊருக்கு,  கிரானைட் வாங்குவதற்காக என் ஊர்க்காரர்கள் வந்திருந்தனர். அவர்களின் பயணவழிகாட்டியாக நானும் ஜிகினி சென்றிருந்தேன்.

அவ்வூர் முழுவதுமே கிரானைட் கூடங்கள் தான். எந்த பாதையில் எந்த திசையில் திரும்பினாலும் வெகுதூரத்துக்கு கிரானைட் மட்டுமே ஆன ஊர் அது. 

ஒவ்வொரு கடையாக நுழைந்து வியபாரம் பேசிக்கொண்டிருக்கையில்  எங்களுடன் வந்திருந்த ஒருவர் ஒரு அலுவலகத்தில் தன் இருக்கையில் அமராமல் தரையில் குரங்குபோல் குந்தி அமர்ந்துவிட்டார்.

அந்த ஆதிகானக குணம் திடீரென்று எப்படி அவருள்  அங்கு அப்படி மேலெழுந்து வந்தது என  தேடியபோது தான் தெரிந்தது அவர் அப்பொழுது மது அறிந்திவிட்டார் என.



அவர் ஒரு கட்டிடத்தொழிலாளி. அவர் மலேசியாவில் நீண்டநாட்கள் கட்டிடவேலை செய்து வந்ததால் அவருக்கு அன்னிய மொழியான மலாய்  தெரிந்திருக்கிறது. கர்னாடகாவில்  கன்னடம், அது  அவர்களுக்கு அன்னிய மொழி அல்லவா...?!

எனவே மொழிப்பிரச்சினையை சமாளிக்க அழைத்து வரப்பட்டிருக்கிறார் அவர்.

ஆனால் என் பிரச்சினை அப்போது அதுவாக அல்ல. அவருக்கு அங்கு எப்படி மதுகிடைத்தது என்பதாக மனதைக்குடைந்தது அது.

பிறகு அனைவருக்கும் வயிறு உணவுக்கான அலாரம் அடித்துவிட்டதால் உணவகங்களைத் தேடத்துவங்கினோம்.

அப்போது எங்கு திரும்பினாலும் உணவகங்கள் மட்டுமே கண்ணில் தட்டுபட்டன. அப்போது தான் அம்மின்னல் என்னைத் தாக்கியது. 

இதுவரை இந்த உணவகங்கள் எங்கிருந்தன ? 

அங்கேயே தான் இருந்தன. ஏன் கண்ணில் படவில்லை?

அதுவரை அவை தேடப்படவில்லை .

எனவே அங்கு அவை இல்லை. அந்த அன்னியமொழிப்புலவர் மதுக்கடையைக் கண்டுகொண்டதும் அப்படித்தான். தேடாத எதுவும் இல்லாதவையே.

பயணத்தின் போது பெட்ரோல் நிலையங்களைக் கண்டடைவதைப்போல யாவும் அதனதன் இடத்திலேயே உள்ளன என்பதையும், கண்டடையவும் பெற்றுக்கொள்ளவும் நாம் முனைய வேண்டும் என்ற எனக்கான தரிசனத்தையும் அன்று தான் நான்  கண்டுகொண்டேன்.

--- தொடரும்

விஜயலக்ஷ்மி, வேதாரண்யம்.

எனை ஆட்கொண்ட பிரம்மம் - 1

மரங்களின் தரிசனம் - பகுதி 1

கீதை சொல்படி தன் சுதர்மத்தைக் கண்டுகொண்டவன் ஆசிர்வதிக்கப் படுகிறான்...

சில சமயம் தத்துவார்த்தமான அந்த தரிசனத்தின் விதை  என்றோ ஒரு காலவெளியிலிருந்து தோன்றி நமக்காக அது காத்திருக்கிறது...

ஒரு புளியமரத்தின் கதை, 

அப்படி எனக்கான விதையை காலத்தில் சுமந்து வந்து

மிக இளம் வயதில்  எனக்குள்  ஊன்றிவிட்டு சென்றது.

அனேகம்பேருக்கு  அக்கதை தெரிந்திருக்கலாம்...

புளிய மரம் - வேப்ப மரம் கதை

நெடுங்காலம் முன்பு...

ஒரு தாய் தன் மகன் தேசாந்திரம் போகும் முடிவெடுத்திருப்பதை தடுக்க நினைக்கிறாள்...

அது இயலாமல் போகவே மகனிடம் இரண்டு வேண்டுகோள்களை கட்டாயம் பின்பற்ற வேண்டுமென உறுதிமொழி பெற்றுக்கொண்டு வழியனுப்புகிறாள்.

அவன் தேசாந்திரம் செல்லும் வழியில்,  ஓய்வு தேவைப்படும் பொழுதுகளின் போதெல்லாம் கட்டாயம் ஒரு புளியமரத்தடியின் நிழலில் மட்டுமே  இளைப்பாற வேண்டுமென்பது முதலாவது வேண்டுகோள்.

மகனும் அன்னையின் சொல்படி பயணமெங்கும் புளியமரத்தின் நிழல்களிலேயே தங்குமிடங்களை அமைத்துக் கொள்கிறான்.

நாட்கள் செல்கையில்  உடல் மெல்ல நலிவுறத் துவங்கி ஆரோக்கியம் குன்றியபடியே வருகிறது.

ஒரு கட்டத்தில் பயணத்தைக் கைவிடும் அளவுக்கு உடல்நலம் மோசமாகிவிடுவதால் வீடு திரும்பவேண்டிய கட்டாயம் வருகிறது. 

பயணம் திரும்பிவிடுகிறது.


வருபயணம் முழுதும் வேப்பமரத்தின் நிழலில் மட்டுமே ஓய்வு எடுத்துக்கொள்ள வேண்டுமென்பது

அன்னையின் இரண்டாவது வேண்டுகோள்.

முடிவில் ஒரு நாள்  வீடு வந்து சேர்ந்துவிடுகிறான் மகன்.

ஆனால் மிக ஆரோக்கியமாக ...

எப்படி? 

இதுதான் நான் வாய்பிளந்த அந்த தருணம்...

அந்த விதை ரகசியமாக என்னுள் புதைந்துகொண்டது இங்குதான்.

வேப்பமர நிழல் மெல்ல அவன் உடல்நலத்தை மேம்படுத்திவிட்டது. அம்மா புத்திசாலித்தனமாக இயற்கையின் நுட்பத்தைப் பயன்படுத்தி மகனை மீட்டுக்கொண்டாள்.

கதை முடிந்து விட்டது.

ஆனால் எனக்குள் அது துளிர்விட்டது...

நிழல் நிழல் என அது என்னைத்துரத்தியது.

அன்றைய புரிதல் வேப்பமரமும் புளியமரமும் மட்டுந்தான்.

அப்போது எனக்கு மூன்று வயதுக்குள்தான் இருக்கும்.

வேப்பமரத்தின் நிழல் வேறு...

புளியமரத்தின் நிழல் வேறா...


ஏன்?

புளியமரம் சூடு...

வேப்பமரம் குளுமை...

சூடு உடல்நலத்தைக் கெடுக்கும் ...

வேப்பமரம் உடல்நலத்தை மேம்படுத்தும்... என்றனர்.

அன்றைய பதில் என்னை நிறைவு செய்யவில்லை...


மறுபடி ஏன்?

ஒருவேளை புளிய இலைகள் சிறிதாக இருப்பதாலோ...

அப்படியெனில் நெல்லி மரம் எப்படி?

அது மருந்து, உடலை சுகப்படுத்தும் என்றனர்.

நெல்லியின் இலைகள் புளிய  இலைகளை விடவும் சிறியது தானே...

எனவே காரணம் இலைகளின் வடிவத்தில் அல்ல...

தெளிந்து தெளிந்து மீண்டும் கேள்விகளையே கண்டுகொண்டிருந்தேன்.

கடம்ப மர ஞானம்

பின்பு ஒருநாள்... 

கடம்பு இருக்கிறவன் வீட்டுக்கு எதிரி இருக்கமாட்டான் என்ற  முது மொழியை கேட்க நேர்ந்த போது  ஒரு நுண்ணிய அதிர்வை அடைந்தேன்.

ஏன்? 

இந்த ஏன் எனக்குள் எழும் போது வயது முப்பதைத் தொட்டிருந்தேன்.

கடம்பமரத்தை வீட்டின் வாயிலில் வளர்க்கும் ஒருவனை தாக்குவதற்காக எதிரி அறிவாளோடு வந்தால் கூட அம்மரத்தை அவன் கடந்து வரும்போதே அவன்  கோபத்தை இழந்து அறிவாளை வீசிவிட்டு அமைதியாக திரும்பி விடுவான் என பதில் கதை கூறினர் மூத்தோர்.

இத்தனை உண்மை இதில் இருக்கிறதா என அறியேன்...

ஆனால் ஏதோ உண்மை அதில் இருக்கிறது என   உணர்ந்தேன்.

கடம்பமரத்திற்கு ஞானத்தரு என்ற ஒரு சிறப்பு பெயரும் உண்டு. ரிஷிகள்  இம்மர நிழலில் அமர்ந்து தவம் செய்வார்கள் என்ற செய்தியை பலர் அறிந்திருக்கலாம்.

--- தொடரும்

விஜயலக்ஷ்மி, வேதாரண்யம்.

பிறழ்வு

பிறழ்வு 


சட்டத்தின் பார்வையில்... குற்றம்!
சமூகத்தின் பார்வையில்... பிதற்றல்!
மதங்களின் பார்வையில்... பாவம்!
அறத்தின் பார்வையில்... பிறழ்வு!
இயற்கையின் பார்வையில்... முரண்!
ஆகவே, தோழி அகன்று விடுவோம்....

நம்மிடையே இருப்பது 
புகைமூட்டமோ
பனிப்படலமோ அல்ல 
வெறுமொரு விலகல்...
கூர் வார்த்தைகளை ஏந்தி நிற்காத
வெறுமொரு மௌனம்....

ஒப்பந்தச் சிறையில்
உறவைப் பிணைக்காத
வெறுமொரு தேடல்...
அறுக்கவோ பிணைக்கவோ இயலாத
வெறுமொரு பந்தம்...

வெடித்து சிதறும் முன்
வெகுதூரம் சென்றுவிடும்
வெறுமொரு பயணம்...
எதிரெதிர் திசையில்
வெகுதூரம் கடந்தும்
ஒற்றைப் புள்ளியில் ஒருமித்த 
வெறுமொரு உறவு....

அகமன வேட்கையைத்  தவிர
ஏதொரு அனுகூலமுமற்ற
வெறுமொரு பிணைப்பு...
ஆகவே, தோழி அகன்று விடுவோம்....

ராபியத் 
சென்னை 

சிறகின் விதைகள் முளைத்த இரவு....

 புளியமரத்தடியில்....



மயில் பெண்களின் ஆட்டம்

சசிகலா

சின்னச் சிறிய படகுகள்கள் ஆடும் சிங்கார பல்கலை ஓடமாம்

வண்ண கனவுகள் நினைவாக வந்த காவிய முகாம் 

மயில்களும் தோகை விரித்தாடியது 

பெண்களின் மனங்களும் தோகை விரித்து ஆடியது  🌹



என்னை எனக்குப் பிடிக்கும்

என்னை எனக்குப் பிடிக்கும்

கவிஞர்: விஷாகா விஸ்வநாத்

பலர் அதிகமாய் கேட்பது இதுதான்!

 உனக்கு என்ன பிடிக்கும்?

 எனக்கு ஜன்னல் பிடிக்கும்.

 ஜன்னல் வழியே உள்ளே வரும் காற்று பிடிக்கும்.

 அந்தக் காற்றில் பறக்கும் என் கூந்தல் பிடிக்கும்.


 ஜன்னல் வழியே ஊடுருவும்,

 அந்தி ஒளி பிடிக்கும்.

 அந்த ஒளியில் மின்னும் என் கண்கள் பிடிக்கும்.

  

என்னை எனக்கு பிடிக்கும்.

 எப்படி இருக்கிறேனோ அப்படியே!

 எவளாக இருக்கிறேனோ,

 அவளாகவே!


 யாருக்கெல்லாம் என்னை பிடிக்குமோ,

 எனக்கும் அவர்களை பிடிக்கும்.

 எவையெல்லம் என்னுடையதோ அவை அத்தனையும்,

 எனக்குப் பிடிக்கும்.


 ஆனால்  அனைத்துக்கும் மேலாக, 

 என்னை எனக்கு பிடிக்கும்!


மொழிபெயர்ப்பு: ஆர். தீபா

அணங்கின் மொழி

முது நாவல்

முது நாவல் எனக்கு பிடித்த சிறுகதைத் தொகுப்பு. புனைவு களியாட்டுக் கதைகள் நூறையும் தினம் ஒன்றாக வாசிக்கும் போது, எனக்கு பிடித்த கதைகளை பட்டியல...

தங்க விதைகள்