முது நாவல் எனக்கு பிடித்த சிறுகதைத் தொகுப்பு. புனைவு களியாட்டுக் கதைகள் நூறையும் தினம் ஒன்றாக வாசிக்கும் போது, எனக்கு பிடித்த கதைகளை பட்டியலிட்டேன். அதில் பல கதைகள் இருந்த தொகுப்பு இது. அமானுஷ்யம் நிறைந்தவை என்பதை இக்கதைகளை இணைக்கும் சரடாக நான் புரிந்து வைத்திருந்தேன்.
சத் தர்ஷனில் நடந்த குருஜி சௌந்தர் அவர்களின் யோகா வகுபில் கலந்து கொண்டிருக்கிறேன். கடினமான கருத்துக்களை எளிமையாக விளக்குவது அவரின் தனித்துவம். எனவே எனக்குப் பிடித்த தொகுப்பை பற்றிய அவரின் கலந்துரையாடலை தவற விடக்கூடாது என்று முடிவு செய்தேன்.
சரியாக 6.30 மணிக்கு கலந்துரையாடல் ஆரம்பமானது. எதிர்பாராத இன்ப அதிர்ச்சியாக ஜெவும் இணைந்தார். அடுத்த நாள் ஐரோப்பா கிளம்புவதாகவும், அஜி வீட்டில் இருப்பதாகவும் கூறினார். வெளிநாடு செல்லும் முன் மீண்டும் ஒருமுறை அவரை பார்க்க முடிந்ததில் மகிழ்ச்சி.
ஜெவின் தனித்துவம்
நவீன இலக்கியத்தில் பலர் இதுபோன்ற கதைகள் எழுதினாலும், ஜெவிற்கு இரண்டு தனித்துவங்கள் உள்ளன. ஒன்று அவர் வாழும் நிலம். வடகிழக்கு மாநிலங்களிலும் கேரளத்திலும் இன்று வரை குட்டிச்சாத்தான் வழிபாடு உள்ளது.
திருச்சூர் பெரும் கோட்டுக்கரா என்ற விஷ்ணு மாயா கோவிலில் குட்டிச்சாத்தான் வழிப்பாடு இருக்கிறது. உள்ளே சென்று வந்த பூஜாரி, பைசாசிச மொழியில் குறி சொல்வதை இன்றும் பார்க்க முடியும்.மற்றொன்று தத்துவ பின்புலம். சூபி மரபு, இந்திய தத்துவம், அனைத்து தரிசனங்களின் மீதான புரிதல் ஆகியவை, இந்த கதைகளை அடுத்த தளத்திற்கு எடுத்து செல்கின்றன.
இந்த கதைகளில் உள்ள பொது தன்மை என்று பார்த்தால், அப்பால் உள்ளதை கண்ட அல்லது மெய்மை அடைந்த அதிமானுடர்கள் பற்றிய கதைகள். சில கதைகள் முடிவுராமல் (Open ended) உள்ளன. அவை வாசகனின் உழைப்பை கோருபவை.
எல்லை மீறல்
மற்றொரு பொது அம்சமாக இந்த கதைகளில் இருப்பவை எல்லை மீறல்கள். எல்லையை தாண்டி சென்ற மனிதர்கள் அல்லது அவர்களின் சூழ்நிலையை பற்றி, இந்த கதைகள் பேசுகின்றன. நான்கு வகையான எல்லை மீறல்கள் உள்ளன.
- உடலின் அல்லது மனித ஆற்றலின் எல்லையை மீறல். உதாரணம்: முது நாவல்
- புத்தி உதாரணம்: தூவக்காளி
- தர்க்கம் உதாரணம்: மணிபல்லவம்
- மனசு உதாரணம்: ஆபகந்தி
ஏதோ ஒரு காட்சி அல்லது ஒர் உரையாடலில், கதை மாந்தர்கள் இந்த புற உலகில் இருந்து வேறு ஒரு தர்க்கத்திற்கு அப்பாற்பட்ட உலகிற்கு செல்கிறார்கள். அங்கிருந்து திரும்ப வரலாம், வராமலும் இருக்கலாம். திரும்பி வந்தாலும் அவர்கள் மாறி இருப்பார்கள். இந்த உலகில் இருக்க முடியாது.
நான்கு கதைகள்
தொகுப்பிலிருந்து ராஜன், மணி பல்லவம், தூவக்காளி மற்றும் முதுநாவல் என்று நான்கு கதைகளை எடுத்துக்கொண்டு விளக்கினார். தூவக்காளியைப் பற்றி பேசும்போது, 'என் பிள்ளையை கொடுத்துரு, நான் நெனச்சது குற்றம்தான் ' என்று பலமுறை கரு கலைந்த அந்தப் பெண் கூறுவது அந்த கதையின் அப்த வாக்கியமாக கூறினார். மூன்று வகை துக்கங்களை (இந்திய மரபில் உள்ள துக்கத்ரயம் - ஆதி பெளதீகம் , ஆதி ஆத்மீகம் , ஆதி தெய்வீகம், ) தவிர மற்றொரு வகை துக்கமும் உள்ளது.
மனதால் தனக்குத்தானே கொடுக்கப்பட்ட துக்கம். ஆழ்மனம் அனாதிக்காலமானது என்கிறார் குரு நித்யா. முது நாவல் கதையில் போலீசும் ரவுடியும் உடல் எல்லையை தாண்டி சண்டையிட்டு விழுந்து கிடக்கும் போது, அந்த சூஃபி ஞானி கொடுத்த நீர், தீட்சை போன்றது. அதனால் அவர்கள் இருவரும் ஞானியாக மாறுகிறார்கள். மேலும் நாவல் மரம் அல்லது இலந்தை மரம் சூபி மரபின்படி ஞானத்தின் குறியீடாக உள்ளது. மானுட எல்லை முடிந்து, இறை நிலைக்கு செல்லும் வழியில் இந்த மரம் உள்ளது. 'சித்ரத்துல் முன்தஹா' என்று அதை சொல்வார்கள்.
யோக மரபில் அதிமானுடர்கள்
பதஞ்சலி யோக சூத்திரத்தில், விபூதி பாதத்தில் சாதனா, பலன்கள், சித்திகள் பற்றிய சூத்திரங்கள் உள்ளன. அதில் அதி மானுடர்களை 'பலேஷு ஹஸ்தி பலாதினி' என்கிறார்கள். பெரிய உன்னதமான விஷயத்தை சிந்திப்பவன், பெரிய பலத்தை அடைகிறான். மேலும் தன்னுடைய சித்தத்தை அறிந்தவன், மற்ற அனைத்தையும் அறிந்தவன் ஆகிறான். (பரசித்த ஞானம்) ஆத்மாவை சுற்றியுள்ள ஐந்து அடுக்குகள் பஞ்சகோசங்கள் ஆகும். இதில் மூன்றாவது தளமான மனோமய கோஷத்தில், நம் நவீன அறிவியல், வரலாறு, தத்துவம் போன்ற பல துறைகளிலிருந்து ஆராய்ச்சி செய்ய முயற்சிக்கப்படுகிறது.
நான்காவது நிலை விஞ்ஞானமய கோஷம். நாம் செய்யும் செயல்கள், அனைத்திற்கும் சித்தம், புத்தி, அகங்காரம் ஆகிய மூன்றும் தான் கச்சா பொருட்கள். சித்தம் என்பது நம் நினைவுத் தொகுப்பு. புத்தி என்பது தர்க்கம். ஆங்காரம் என்பது நம்முடைய அடையாளம் நான் என்று நினைப்பது.
இந்தக் கதைகள் அனைத்தும் மூன்றாவது தளத்தையும், நான்காவது தளத்தையும் ஒரு நொடி சென்று தொட்டு வருகிறது. அவற்றை நமக்கு காட்டுகிறது. யோகாவின் நோக்கம் என்பது உள்நோக்கி பார்ப்பது. இலக்கியத்தின் நோக்கம் என்பது உள்ளிருப்பதை ஊதி ஊதி பெரிதாக்குவது. இதன்பின் வாசகர்களுடன் கேள்வி பதிலாக உரை தொடர்ந்தது.
அமானுஷ்ய கதை என்ற ஒற்றை வார்த்தை புரிதலில் இருந்து, எவ்வாறு இந்தக் கதைகள் மானுட எல்லைகளைத் தாண்டி சென்று, நாம் புரிந்து கொள்ள முடியாத ஒரு உலகத்தின் வாசலை காட்டுகிறது என்று விளக்கியது. இந்த உரையை நடத்திய சுக்கிரி குழுமத்திற்கும், குருஜி சௌந்தர் அவர்களுக்கும் மிகுந்த நன்றி.
-- ராஜேஸ்வரி, கோவை


நல்ல பதிவு... நன்றி ராஜி
பதிலளிநீக்கு