அண்டை வீட்டார்

 அண்டை வீட்டார்

"அண்டை வீட்டார்" என்பது பி. கேசவதேவ், மலையாளத்தில் எழுதிய ஒரு கிளாசிக் நாவல். கே.சி. சங்கரநாராயணன் தமிழில் மொழிபெயர்த்து உள்ளார்.

அந்த தலைப்பைத் தவிர, என்னுடைய இந்த கதைக்கும் அதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை, என்பதை முதலிலேயே சொல்லி விடுகிறேன்.

எட்டு வீடுகள் உடைய அபார்ட்மெண்டில் வாழும் எனக்கு, அண்டை விட்டார் தான் சுற்றம், நட்பு எல்லாம். 90% வீட்டில் இருந்தே வேலை செய்வது என் தொழில். அதனால் அவர்களுடைய தயவை தாராளமாக நாடுவேன்.

நான் செய்வது பிரீலான்சிங். அதை கூகிள், "தன்னுரிமை தொழிலாளர்" என்று பயங்கரமாக மொழிபெயர்ப்பதால் "சுயதொழில்" என்று வைத்துக் கொள்ளுங்கள்.

என் வயதில், தொழிலில் இருக்கும் எல்லாரையம் போல், நானும் 8 டு 10 மணி நேரம் மடிக்கணினியே கதி என்று கிடப்பேன். என் கணவர் அதை என்னுடைய முதல் புருஷன் என்றும், கைபேசியை எனது கள்ள புருஷன் என்றும் கிண்டலடிப்பார்.

"அப்பொழுது நீங்கள்?" என்று கேட்டால் "கார் எடுத்தால் டிரைவர், சமைத்தால் சமையல்காரன். நீ என்ன சொல்கிறாயோ அது," என்பார்.

அதௌ கீர்த்தனாரம்பத்திலே.... என் எடை 79 ஐ தொட்டதால், நானும் உடல் இளைக்க முடிவு செய்தேன். இது சில வருடங்களுக்கு முன் சாட்ஜிபிடி (ChatGPT) அறிமுகம் ஆகி இருந்த காலகட்டம் என்பதால், கூகுளை "சீ போ. நீயெல்லாம் பூமர்," என்று ஒதுக்கினேன்.

சாட்ஜிபிடியிடம் நான் செய்யும் வேலை, சாப்பிடுகிற உணவு எல்லாவற்றையும் கொடுத்து, மூன்றே மாதத்தில் உடல் மெலிவதற்கான ஒரு உணவு பட்டியலை வாங்கினேன்.

அதுவும், தினமும் நான் சாப்பிடுவதை மாலையில் தரவு ஏற்றும்படி சொன்னது. அதாவது, அது கொடுத்த பட்டியலில் இருந்து நான் எதாவது மாற்றி சாப்பிட்டு இருந்தால், அடுத்த நாள் அதை சரிக்கட்டும். புது உணவு பட்டியல் தரும்.

Diet என்று அந்த பட்டியலை வீட்டிலும் ஒட்டி வைத்தேன். மோட்டிவேஷன்.

ஆனால் பாவம், அந்த செயற்கை நுண்ணறிவுக்கு, என்னுடைய அண்டை வீட்டாரைப்பற்றி எதுவும் தெரியாது. முதல் நாள், எல்லாம் நன்றாகவே போனது.

மாலை, நான்கு மணி அளவுக்கு, பக்கத்துக்கு வீட்டு அக்கா கதவை தட்டினார்.
"இன்று பாதாம் அல்வா செய்தேன். உனக்காக கொண்டு வந்தேன்," என்று ஒரு பாத்திரம் நிறைய நீட்டினார்.

"இது என்னடா என் மனஉறுதிக்கு வந்த சோதனை," என்று அவரை அழைத்து உட்கார வைத்து, டயட் பற்றி விரிவாகச் சொன்னேன்.

எல்லாவற்றையும் கேட்டு ஆமோதித்தவர், "அப்படிதான் இருக்கணும். இதெல்லாம் செய்தால்தான் குழந்தை பிறக்கும். அல்வா சாப்பிட்டு டூயட்ஐ சந்தோஷாமாக ஆரம்பி," என்று சொன்னார்.

அதோடு போகவில்லை. நான் அல்வாவை சாப்பிடுவதை பார்த்து விட்டே அந்த இடத்தை விட்டு நகர்ந்தார். பின்னர் என் கணவரை பார்க்கிங்கில் பார்த்து, ஏகமாக வெட்கப்பட்டு ஓடி விட்டார் என்று சொன்னார். அந்த அக்காவின் கணவர் இவரை பார்த்து குறும்பாக சிரித்ததாகவும் சொன்னார்.

மீண்டும் சாட்ஜிபிடியிடம் சரணடைத்தேன். அதுவும் பாதாம் அல்வாவுக்கு எத்தனை கலோரி என்று கணக்கு போட்டு இன்னும் ஒரு வாரத்திற்கு நான் வெள்ளரிக்காய் தவிர ஒன்றும் சாப்பிட கூடாது என்று சொன்னது.

மறுநாள், கீழ் வீட்டு அம்மா எனக்கு முருங்கைக்காய் சாம்பார் கொடுத்து விட்டார். இன்னொருவர், இரவு என் கணவருக்கு நண்டு ரசம் கொண்டு வந்து கொடுத்தார்.

இது ஆகிற காரியம் இல்லை, என்று உடற்பயிற்சி செய்ய முயன்றேன். முதல் கட்டமாக வீட்டிலேயே டம்பிள்ஸ் தூக்குவது என்று முடிவு செய்து, வாங்கியும் வந்து விட்டேன். அடுத்த நாள், ஆசையாக அதை பிரித்து, உடற்பயிற்சியும் செய்தேன்.

பத்து மணி சுமாருக்கு, எதிர் வீட்டு வாண்டு வந்து, "அம்மா இஞ்சி பூண்டு தட்ட அந்த புது சாமான் கேக்குறாங்க," என்றான். என்னுடைய டம்பிள்ஸ் அவருக்கு ஒரு மசாலா இடிக்கிற கல் போல தெரிந்து இருக்கிறது.

நான் எவ்வளவு விளக்க முயன்றும் அவன் அசருவதாக இல்லை. "இன்னுமா அங்கே இருக்க," என்று அவன் அம்மா குரல் கொடுத்தவுடன், அவனே அதை தூக்கிக் கொண்டு ஓடி விட்டான்.

அதோடு விட்டு இருந்தால் கூட பரவாயில்லை. அன்று மதியம் அத்தனை மசாலாவையும், என் டம்பிள்ஸ் வைத்து இடித்துப் போட்டு செய்த பிரியாணியை, பாத்திரம் நிறைய கொடுத்து விட்டார்.

தமிழில்...ஏன் உலகின் அதனை மொழிகளிலும் எனக்கு பிடிக்காத வார்த்தை சமையல் என்பதால், நான் உடனடியாக இவர்களை பகைத்துக்கொள்ள விரும்பவில்லை.

மீண்டும் சாட்ஜிபிடியிடம் சென்று, அன்று ஆல்வா, அடுத்த நாள் சாம்பார், இன்று பிரியாணி என்று கொடுத்து, உணவு பட்டியலை சரிக்கட்ட சொன்னேன். நீண்ட நேரம் யோசித்து, சுத்திக்கொண்டு இருந்தது.

மூன்று நாட்கள் அது "திங்கிங்" என்றே காட்டிக் கொண்டு இருக்க, நான் அதற்கு பின் அதை தொந்தரவு செய்வதை விட்டு விட்டேன்.

என்னுடைய டம்பிள்ஸ் திரும்பி வரவில்லை. ஆனால், மஷ்ரூம் செட்டிநாடு மசாலா, பஞ்சாபி குருமா என்று விதவிதமாக சுவையான பண்டங்கள் வந்தன. எதிர் வீட்டு அம்மா "என் சமையலின் ரகசியம், எதிர்வீட்டு இஞ்சி பூண்டு கல்," என்று இன்ஸ்டாகிராமில் போட்டு பெருமைப்பட்டார்.

நானும் விடாமல் என்னுடைய ஒற்றை டம்பிள்ஸ்ஐ ஒவ்வொரு கையாக மாற்றி முடிந்த அளவு உடற்பயிற்சி செய்தேன். "இதற்கு நீ தண்ணி பாட்டிலே தூக்கலாம். இவ்வளவு கம்மி எடை தூக்கி எல்லாம் இந்த எடை குறையாது," என்று என் கணவர் என்னுடைய பரந்த இடுப்பை காட்டி கிண்டல் செய்துகொண்டு இருந்தார்.

ஆனால் அதற்கும் வந்தது ஆப்பு. ஒரு மாலை கதவு உடைபடுவதுபோல தட்டப்பட்டது. என்னவோ, எதோ என்று பதறி திறந்தேன். எங்களுடைய அபார்ட்மெண்ட் செக்யூரிட்டி, என்னை தள்ளிக்கொண்டு வீட்டிற்குள் நுழைந்து, என் டம்பிள்ஸ்ஐ கைப்பற்றினார்.

"அண்ணா, அது எடை குறைக்க...," என்று நான் சொல்வதை எல்லாம் காதிலேயே வாங்காமல், வேகமாக படி இறங்கி ஓடினார். நானும், கதவு தட்டப்பட்ட சத்தம் கேட்டு வெளியே வந்த மற்ற வீட்டுக்கார்களும் என்னவோ, எதோ என்று அவர் பின்னே சென்றோம்.

வாகனம் நிறுத்தும் இடத்தில் உள்ளங்கை அளவு ஒரு பெரிய நட்டுவாக்கிளி, எங்கிருந்தோ வந்து விட்டது. வந்த வேகத்தில், எங்கள் செக்யூரிட்டி என் டம்பிள்ஸ்ஐ அதன் மீது போட்டு கொன்றார்.

நான் செய்வது அறியாமல் திகைத்து நின்றேன். அந்த நிமிஷம், எவ்வளவோ முறை பார்த்து சிரித்த சார்லி சாப்ளின், மிஸ்டர் பீன் எல்லாம் நானாக உணர்ந்தேன். அவர்கள் கொடுக்கும் "நான் ஐயோ பாவம்," முகம் தான் அப்பொழுது எனக்கும் இருந்தது.

அத்தனை வாகனங்கள் அங்கே நிற்கின்றன. எதாவது ஒரு பைக்கை, அதன் மீது ஏற்றி இருந்தால் செத்து இருக்கும். ஆனால் அவர் என்னுடைய டம்பிள்ஸ்ஐ குறிப்பாக தூக்கி வந்த ரகசியம், எனக்கு இன்று வரை புரியவில்லை.

அதன்பின் அவர் என் டம்பிள்ஸ்ஐ கழுவி, அங்கேயே வைத்துக் கொண்டார். மீண்டும் எதாவது பூச்சி, போட்டு வந்தால் அடிக்க தோதாக இருக்கும் என்றார்.

"போங்கடா டேய். நான் தண்ணி பாட்டில் தூக்கியே எடை குறைக்கிறேன்," என்று சூளுரைத்தேன். அனால் ஆசை யாரை விட்டது. உடல் எடை குறைக்க வாக்கிங் போகலாம் என்று ஒரு நாள் முடிவு செய்தேன்.

எங்கே நடை போகலாம், எவ்வளவு நேரம், 8 போட்டு நடப்பதா என்று ஏகமாக ஆராய்ச்சி செய்து, கடைசியில் நேரம் கிடைக்கும் பொழுது, மொட்டை மாடியிலேயே போகலாம் என்று முடிவு செய்தேன்.


"ஒழுங்காக நடை போனால் கண்டிப்பாக எடை குறையும்," என்று என் கணவர் உற்சாகப்படுத்தினார். "ஆனால் அதற்க்கான சரியான ஷூ போட்டுக்கொண்டு போ. இல்லாவிட்டால் முட்டி வலி வரும்," என்று பயமுறுத்தவும் செய்தார்.

நானும், அமேசான், பிளிப்கார்ட், எல்லாம் தேடி ஒரு அழகான பாசிப்பச்சை நிற ஷூவை ஆர்டர் கொடுத்தேன். ஷூ டெலிவரி வாங்கும் பொழுது என்னுடைய இன்னொரு எதிர்வீட்டு பெண்மணி அதிசயமாக கதவு திறந்து பார்த்தார்.

அவர் யாரிடமும் அதிகம் வைத்துக்கொள்ள மாட்டார். கொஞ்சம் வில்லங்கமானவர் என்று கேள்விப்பட்டு இருக்கிறேன். நேருக்கு நேர் பார்த்ததால் நானும் சிறிது வைத்தேன். அதோடு நின்று இருக்கலாம்.

"வாக்கிங் போக ஷூ ஆர்டர் கொடுத்து இருந்தேன். இன்று முதல் மாடியில் வாக்கிங் போக போகிறேன். எடை குறைக்க வேண்டும்," என்று எல்லாம் உளறி வைத்தேன்.

அன்று மாலை குறித்த நேரத்திற்கு, மொட்டை மாடிக்கு சென்று ஒரு சுற்று நடந்தும் விட்டேன். அந்த வில்லங்கமான அம்மா, மெதுவாக மேலே ஏறி வந்தார்.

"நட. நட. உடம்புக்கு நல்லதுதான். என் பொண்ணு ஜெர்மனில இருக்கா. நானும் அங்கே வாக்கிங் போவேன்," என்றார்.

பேசாதவர் பேசுகிறாரே என்று நானும் உம் கொட்டிக் கொண்டு இன்னொரு சுற்று நடந்தேன்.

"அந்த ஷூ ரொம்ப நல்லா இருக்கு. வீட்டுக்கே கொண்டு வந்து கொடுத்தானே? தெரிஞ்ச கடை பையனா?"

"இல்லை. அது ஆன்லைன் ஆர்டர். எல்லா பொருளையும் வீட்டுக்கு கொண்டு வந்து தருவாங்க," நான் நின்று விளக்கினேன். முதல் தவறு.

"எனக்கும் இதெல்லாம் கத்துக்கணும்னு ஆசைதான். ஆனா எனக்கு யார் சொல்லி தருவா சொல்லு?"

"அதுக்கென்னம்மா, நான் சொல்லி தரேன். உங்க போன் குடுங்க," இரண்டாவது தப்பு.

45 நிமிடங்கள் கழிந்து வாக்கிங் போகாமல், டாக்கிங் மட்டும் முடிந்து நான் கீழே வந்தேன். "போனால் போகட்டும். வயசானவர் கேட்கிறார். நாளை முதல் நடப்போம்," என்று நினைத்தேன்.

அன்று இரவு 12.00 மணிக்கு ஒரு டெலிவரி பையன் என் வீட்டு அழைப்பு மணியை அழுத்தினான். இந்த நேரத்தில் யார், என்று குழப்பமாக கதவு திறந்தேன்.

"மிட் நைட் பிரியாணி மேடம். வான்கோழி பிரை," என்றான் ஒரு யுவன். குழப்பமாகி, என் கணவர் எதாவது ஆர்டர் கொடுத்தாரா என்று கேட்டேன்.

"நான் எல்லாம் வீட்டு சிக்கன் மட்டும்தான் சாப்பிடுவேன். அதுவும் என் அம்மா செய்வது போல எங்கேயும் வராது," என்று தூக்க கலக்கத்தோடு சொன்னார்.

"சிக்கன் இல்லை. இது ஸ்பெஷல் வான்கோழி பிரியாணி. பிரை," என்று திருத்தினான் அதே இளைஞன்.

நான் ஆர்டர் தரவில்லை என்று எவ்வளவு சொல்லியும் கேட்கவில்லை. ஆர்டரில் தெளிவாக என் பெயர், தொலைபேசி எண், வீட்டு எண் எல்லாம் இருந்தன.

"சரி. கேன்சல் செய்," என்று சொல்ல, "இந்த நேரத்திற்கு மேல் எல்லாம் கான்செல் செய்ய மாட்டோம். காசு கொடுங்கள்," என்று ஆடம் பிடித்தான்.

"சிக்கனாக இருந்தால் கூட வாங்கிக்குவோம். இதை என்ன செய்ய?" என்று கணவர் ஒரு பக்கம் வருத்தப்பட்டார்.

அந்த நேரம், எதோ சட்டென்று தோன்ற, அந்த பையனுக்கு சைகை காட்டி, சோபாவில் உட்கார வைத்தேன்.

என் கணவரிடம் சத்தமாக, "இந்த ராத்திரியில் வந்து விட்டான் பாவம். காசை குடுத்து விடுவோம். பிரியாணியை காலையில் செக்யூரிட்டிக்கு கொடுத்து விடலாம் என்று சொன்னேன்."

அவரும் புரிந்து கொண்டு, "சரி குடு. பையன் போய் விட்டான். வா நாம் உள்ளே போவோம்," என்று எக்ஸ்ட்ராவாக நடித்தார். சரியாக இரண்டு நிமிடங்களில் எதிர் வீட்டு வில்லங்க பெண்மணி வெளியே வந்தார்.

ஒரு அசட்டு சிரிப்போடு, "நான்தான் பிரியாணி ஆர்டர் கொடுத்தேன். சும்மா வருதானு பார்த்தேன்," என்றார். டெலிவரி பையன் அங்கே நிற்பதை பார்த்ததும் அவர் முகம் பேய் அறைந்தது போல ஆனது.

அதன் பின் நான் தினமும் மாடியில் நடை செல்லும் நேரமாக பார்த்து எதாவது ஆர்டர் செய்வது வழக்கம் ஆனது. எப்பொழுதும் என் தொலைபேசி எண். என் பெயர், முகவரி.

அவருடைய தொலைபேசி எண், முகவரியை எல்லாம் ஆன்லைனில் பதிவு செய்யக்கூடாது. அது பாதுகாப்பானது இல்லை, என்று மகள் சொல்லி இருக்கிறாளாம்.

பெரும்பாலான நேரங்கள் பணம் கொடுக்க மாட்டார். கேஷ் ஆன் டெலிவெரிதான். வங்கி கணக்கு விபரங்களை ஆன்லைனில் பகிரக்கூடாது. யாராவது திருடி விடுவார்கள் என்று எனக்கு அறிவுரை சொல்வார்.

அவரிடம் பணம் கேட்டலும், "நமக்குள்ளே என்ன?" "எங்கிட்ட ஏது பணம்?" "அப்புறம் தரேன்" என்பது போன்ற பதில்கள்தான் வரும். அவருடைய கணவரிடம் பணம் வாங்குவது அதை விட மோசமான அனுபவம்.

பெரும்பாலும் அவர் ஆர்டர் செய்வது, பஜ்ஜி, போண்டா அல்லது எதாவது தின்பண்டம் என்பதால், அந்த சிறிய தொகையை கொடுக்க எனக்கு ஒன்றும் பிரச்னை இல்லை.

அனால் நான், நடை செல்லும் நேரம் பார்த்துதான் தினமும் ஆர்டர் தருவார். "உன் வேலை கெட கூடாதுல்ல," என்று சாக்கு வேறு சொல்வார்.

நான் நடக்க ஆரம்பித்து, போன் அட்டென்ட் செய்து, இரண்டு முறை லொகேஷன் சொல்லி, ஒடிபி சொல்லி, கீழே வந்து வாங்கி, அவரிடம் கொடுத்து, காசுக்கு மன்றாடி தோற்று, போதும் நான் நடக்கவே போகவில்லை என்று ஆகிவிடும்.

ஒரு முறை தொலைக்காட்சியில் வரும் Naaptol விளம்பரத்தை பார்த்து ஆயிரம் ரூபாய்க்கு ஐந்து சேலைகள் ஆர்டர் செய்து விட்டார். இவ்வளவு அதிக பணம் நான் குடுக்க மாட்டேன் என்று சொல்லி விட்டேன்.

இதற்குள் அப்பார்ட்மென்டில் இருக்கும் அனைவருக்கும் இவர் செய்வது தெரிந்து விட்டது. வழக்கமாக வரும் டெலிவரி பையன்களுக்கும் சிஓடி என்றாலே இந்த வில்லங்க அம்மாள்தான் என்று புரிந்து விட்டது.

நீங்கள்தான் பணம் குடுக்க வேண்டும் என்று அனைவரும் வற்புறுத்த, சேலையை பிரித்து பார்த்து, சரியாக ஐந்தரை மீட்டர் இருக்கிறதா என்று அளந்து பார்த்துதான் பணம் தருவேன் என்று சொன்னார்.

எல்லாரும் எரிச்சலாக, மற்றவர் பெயரில் பொருள் வாங்குவது போர்ஜ்ரி. சைபர் கிரைம் டிபார்ட்மெண்டில் புகார் செய்வேன், என்று சத்தம் போட்டேன். அதன் பிறகுதான் பணம் கொடுத்தார்.

இவ்வளவுக்கு பிறகும், அவர் என் பெயரில் தின்பண்டங்கள் ஆர்டர் செய்வது நிற்கவில்லை. நான் நடை போவதுதான் நின்றது.

ஆனாலும், நடு இரவில் நிலவில் சாய்பாபா தெரிகிறார் கும்பிடு, மேஜை கால் உடைந்து விட்டது, முட்டுக் கொடுக்க உங்கள் புஸ்தகம் கொடுங்கள், போன்ற கோரிக்கைகள் அடிக்கடி வரும்.

என்னுடைய அண்டை வீட்டாரின் அன்புத்தொல்லை இன்னும் பல விதங்களில் என்னை தொடர்கிறது. குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை என்று நானும் பொறுத்துப்போகிறேன்.

-- நாக நந்தினி, சேலம்

அணங்கின் மொழி

முது நாவல்

முது நாவல் எனக்கு பிடித்த சிறுகதைத் தொகுப்பு. புனைவு களியாட்டுக் கதைகள் நூறையும் தினம் ஒன்றாக வாசிக்கும் போது, எனக்கு பிடித்த கதைகளை பட்டியல...

தங்க விதைகள்