மரங்களின் தரிசனம் - பகுதி 2
கொன்றை மர பூக்கள்
மீண்டும் மரங்களின் சினேகம் தேடி மனம் திரும்பியபோது ஒரு சரக்கொன்றை மரம் நினைவின் அடியாழத்திலிருந்து நீந்தி மேலெழுந்து வந்தது.
அந்த கொன்றை மரம் என் பள்ளி செல்லும் பாதையில் ஒற்றைத்தனிமரமாக பூத்துக்குளுங்கி நின்றது.
வெகுதொலைவில் வரும்போதே அது கண்முன் எழுந்துவரத் துவங்கிவிடும். பூக்களால் குளுங்கி ததும்பி நிற்கும் அது இயல்பாக நம்மை வசீகரித்து சுருட்டி தன் நிழலில் அமர்த்திக்கொள்ளும்.
எப்போதும் அம்மரத்தைக் கட்டியணைத்துக் கொஞ்சி விளையாடுவது என் வழக்கம். பூக்களால் பொலிந்து நிறைந்து நிற்கும் அந்த காட்சி ஏனோ ஒரு பித்தை உருவாக்கும்.
அந்த இடம் ....
அந்த மரம் ...
வேறு ஒரு உலகுக்குள் இட்டுச்செல்லும்.
அங்கு உதிர்ந்து நிரம்பியிருக்கும் பூக்களோடு விளையாடி கொத்துக்கொத்தாக குலுங்கி செறிந்திருக்கும் அந்த மலர்களை தொடுபுலனாலும், நுண் புலனாலும் ஒற்றி ஒற்றி அனுபவித்து அங்கிருந்து மீள குறைந்தது ஒருமணி நேரமாவது ஆகிவிடும்.
கிளம்புபோது அதனைப் பிரிய மனமில்லமல் சில கொத்து மலர்களை கையோடு கொண்டுவந்து கண்ணில் படும்படி என்வீட்டில் தோரணமாக கட்டி ரசித்த படி இருப்பேன்.
இந்நினைவு மீண்டு வந்த அந்நாட்களில் நான் ஓசூரின் நகரவாசியாக இருந்தேன். பின் பயணங்களின் போதெல்லாம் சரக்கொன்றை மரத்தைத் தேடியபடியே அலைந்து கொண்டிருந்தேன்...
நீண்ட தேடலுக்குப்பிறகு ஓசூரின் புறநகரில் இருந்த என் வீட்டிற்கு வரும் வழியிலேயே ஒரு மரத்தைக் கண்டுகொண்டேன்.
பிறகு எங்கெல்லாம் கொன்றை இருந்தாலும் இயல்பில் மனம் அதை கண்டுகொண்டு சிலிர்ப்பதையும் ஒரு சினேகப்புன்னகை உதிர்ப்பதையும் உணரமுடிந்தது.
அதுநாள் வரையும் கூட அம்மரங்கள் அங்கே தான் இருந்தன.
ஆனால் அதைகண்டுகொள்ளும் புலன் என்னில் திறந்து கொள்ளவில்லை.
தேடுங்கள் - கண்டடைவீர்கள்
இந்த தரிசனத்தை மற்றுமொரு சம்பவத்தில் பளிச்சிட்ட மின்னலில் கண்டேன்.
என் சொந்த ஊரான வேதாரண்யத்திலிருந்து ஓசூர் அருகில் உள்ள ஜிகினி என்ற ஊருக்கு, கிரானைட் வாங்குவதற்காக என் ஊர்க்காரர்கள் வந்திருந்தனர். அவர்களின் பயணவழிகாட்டியாக நானும் ஜிகினி சென்றிருந்தேன்.
அவ்வூர் முழுவதுமே கிரானைட் கூடங்கள் தான். எந்த பாதையில் எந்த திசையில் திரும்பினாலும் வெகுதூரத்துக்கு கிரானைட் மட்டுமே ஆன ஊர் அது.
ஒவ்வொரு கடையாக நுழைந்து வியபாரம் பேசிக்கொண்டிருக்கையில் எங்களுடன் வந்திருந்த ஒருவர் ஒரு அலுவலகத்தில் தன் இருக்கையில் அமராமல் தரையில் குரங்குபோல் குந்தி அமர்ந்துவிட்டார்.
அந்த ஆதிகானக குணம் திடீரென்று எப்படி அவருள் அங்கு அப்படி மேலெழுந்து வந்தது என தேடியபோது தான் தெரிந்தது அவர் அப்பொழுது மது அறிந்திவிட்டார் என.
அவர் ஒரு கட்டிடத்தொழிலாளி. அவர் மலேசியாவில் நீண்டநாட்கள் கட்டிடவேலை செய்து வந்ததால் அவருக்கு அன்னிய மொழியான மலாய் தெரிந்திருக்கிறது. கர்னாடகாவில் கன்னடம், அது அவர்களுக்கு அன்னிய மொழி அல்லவா...?!
எனவே மொழிப்பிரச்சினையை சமாளிக்க அழைத்து வரப்பட்டிருக்கிறார் அவர்.
ஆனால் என் பிரச்சினை அப்போது அதுவாக அல்ல. அவருக்கு அங்கு எப்படி மதுகிடைத்தது என்பதாக மனதைக்குடைந்தது அது.
பிறகு அனைவருக்கும் வயிறு உணவுக்கான அலாரம் அடித்துவிட்டதால் உணவகங்களைத் தேடத்துவங்கினோம்.
அப்போது எங்கு திரும்பினாலும் உணவகங்கள் மட்டுமே கண்ணில் தட்டுபட்டன. அப்போது தான் அம்மின்னல் என்னைத் தாக்கியது.
இதுவரை இந்த உணவகங்கள் எங்கிருந்தன ?
அங்கேயே தான் இருந்தன. ஏன் கண்ணில் படவில்லை?
அதுவரை அவை தேடப்படவில்லை .
எனவே அங்கு அவை இல்லை. அந்த அன்னியமொழிப்புலவர் மதுக்கடையைக் கண்டுகொண்டதும் அப்படித்தான். தேடாத எதுவும் இல்லாதவையே.
பயணத்தின் போது பெட்ரோல் நிலையங்களைக் கண்டடைவதைப்போல யாவும் அதனதன் இடத்திலேயே உள்ளன என்பதையும், கண்டடையவும் பெற்றுக்கொள்ளவும் நாம் முனைய வேண்டும் என்ற எனக்கான தரிசனத்தையும் அன்று தான் நான் கண்டுகொண்டேன்.
விஜயலக்ஷ்மி, வேதாரண்யம்.


நன்று... 🩷
பதிலளிநீக்கு