மரங்களின் தரிசனம் - பகுதி 1
கீதை சொல்படி தன் சுதர்மத்தைக் கண்டுகொண்டவன் ஆசிர்வதிக்கப் படுகிறான்...
சில சமயம் தத்துவார்த்தமான அந்த தரிசனத்தின் விதை என்றோ ஒரு காலவெளியிலிருந்து தோன்றி நமக்காக அது காத்திருக்கிறது...
ஒரு புளியமரத்தின் கதை,
அப்படி எனக்கான விதையை காலத்தில் சுமந்து வந்து
மிக இளம் வயதில் எனக்குள் ஊன்றிவிட்டு சென்றது.
அனேகம்பேருக்கு அக்கதை தெரிந்திருக்கலாம்...
புளிய மரம் - வேப்ப மரம் கதை
நெடுங்காலம் முன்பு...
ஒரு தாய் தன் மகன் தேசாந்திரம் போகும் முடிவெடுத்திருப்பதை தடுக்க நினைக்கிறாள்...
அது இயலாமல் போகவே மகனிடம் இரண்டு வேண்டுகோள்களை கட்டாயம் பின்பற்ற வேண்டுமென உறுதிமொழி பெற்றுக்கொண்டு வழியனுப்புகிறாள்.
அவன் தேசாந்திரம் செல்லும் வழியில், ஓய்வு தேவைப்படும் பொழுதுகளின் போதெல்லாம் கட்டாயம் ஒரு புளியமரத்தடியின் நிழலில் மட்டுமே இளைப்பாற வேண்டுமென்பது முதலாவது வேண்டுகோள்.
மகனும் அன்னையின் சொல்படி பயணமெங்கும் புளியமரத்தின் நிழல்களிலேயே தங்குமிடங்களை அமைத்துக் கொள்கிறான்.
நாட்கள் செல்கையில் உடல் மெல்ல நலிவுறத் துவங்கி ஆரோக்கியம் குன்றியபடியே வருகிறது.
ஒரு கட்டத்தில் பயணத்தைக் கைவிடும் அளவுக்கு உடல்நலம் மோசமாகிவிடுவதால் வீடு திரும்பவேண்டிய கட்டாயம் வருகிறது.
பயணம் திரும்பிவிடுகிறது.
வருபயணம் முழுதும் வேப்பமரத்தின் நிழலில் மட்டுமே ஓய்வு எடுத்துக்கொள்ள வேண்டுமென்பது
அன்னையின் இரண்டாவது வேண்டுகோள்.
முடிவில் ஒரு நாள் வீடு வந்து சேர்ந்துவிடுகிறான் மகன்.
ஆனால் மிக ஆரோக்கியமாக ...
எப்படி?
இதுதான் நான் வாய்பிளந்த அந்த தருணம்...
அந்த விதை ரகசியமாக என்னுள் புதைந்துகொண்டது இங்குதான்.
வேப்பமர நிழல் மெல்ல அவன் உடல்நலத்தை மேம்படுத்திவிட்டது. அம்மா புத்திசாலித்தனமாக இயற்கையின் நுட்பத்தைப் பயன்படுத்தி மகனை மீட்டுக்கொண்டாள்.
கதை முடிந்து விட்டது.
ஆனால் எனக்குள் அது துளிர்விட்டது...
நிழல் நிழல் என அது என்னைத்துரத்தியது.
அன்றைய புரிதல் வேப்பமரமும் புளியமரமும் மட்டுந்தான்.
அப்போது எனக்கு மூன்று வயதுக்குள்தான் இருக்கும்.
வேப்பமரத்தின் நிழல் வேறு...
புளியமரத்தின் நிழல் வேறா...
ஏன்?
புளியமரம் சூடு...
வேப்பமரம் குளுமை...
சூடு உடல்நலத்தைக் கெடுக்கும் ...
வேப்பமரம் உடல்நலத்தை மேம்படுத்தும்... என்றனர்.
அன்றைய பதில் என்னை நிறைவு செய்யவில்லை...
மறுபடி ஏன்?
ஒருவேளை புளிய இலைகள் சிறிதாக இருப்பதாலோ...
அப்படியெனில் நெல்லி மரம் எப்படி?
அது மருந்து, உடலை சுகப்படுத்தும் என்றனர்.
நெல்லியின் இலைகள் புளிய இலைகளை விடவும் சிறியது தானே...
எனவே காரணம் இலைகளின் வடிவத்தில் அல்ல...
தெளிந்து தெளிந்து மீண்டும் கேள்விகளையே கண்டுகொண்டிருந்தேன்.
கடம்ப மர ஞானம்
பின்பு ஒருநாள்...
கடம்பு இருக்கிறவன் வீட்டுக்கு எதிரி இருக்கமாட்டான் என்ற முது மொழியை கேட்க நேர்ந்த போது ஒரு நுண்ணிய அதிர்வை அடைந்தேன்.
ஏன்?
இந்த ஏன் எனக்குள் எழும் போது வயது முப்பதைத் தொட்டிருந்தேன்.
கடம்பமரத்தை வீட்டின் வாயிலில் வளர்க்கும் ஒருவனை தாக்குவதற்காக எதிரி அறிவாளோடு வந்தால் கூட அம்மரத்தை அவன் கடந்து வரும்போதே அவன் கோபத்தை இழந்து அறிவாளை வீசிவிட்டு அமைதியாக திரும்பி விடுவான் என பதில் கதை கூறினர் மூத்தோர்.
இத்தனை உண்மை இதில் இருக்கிறதா என அறியேன்...
ஆனால் ஏதோ உண்மை அதில் இருக்கிறது என உணர்ந்தேன்.
கடம்பமரத்திற்கு ஞானத்தரு என்ற ஒரு சிறப்பு பெயரும் உண்டு. ரிஷிகள் இம்மர நிழலில் அமர்ந்து தவம் செய்வார்கள் என்ற செய்தியை பலர் அறிந்திருக்கலாம்.
--- தொடரும்
விஜயலக்ஷ்மி, வேதாரண்யம்.


அருமை விஜி...
பதிலளிநீக்கு♥️
நீக்குநன்றி நன்றி நன்றி
பதிலளிநீக்கு